Sunday, May 23, 2010

G.Subramania Iyer to Anjalai Ammal

FRIDAY, MAY 21, 2010

ஜி. சுப்பிரமணிய ஐயர்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
ஜி. சுப்பிரமணிய ஐயர்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டதிலும், சமூக சீர்திருத்தங்களிலும், பத்திரிகை துறையில் நுழைந்து பெரிய அளவில் செய்தித் தாள்களை அறிமுகம் செய்ததிலும் ஆகிய மூன்று வெவ்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கியவர் ஜி.சுப்பிரமணிய ஐயர். "தி இந்து" "சுதேசமித்திரன்" ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி, நாட்டு சுதந்திரப் போரில் விடுதலை வேட்கையையும், வீரத்தையும் மக்கள் உள்ளங்களில் விதைத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக மகாகவி பாரதியாரை உலகுக்குக் காட்டியவர் இவரே. இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1855ஆம் ஆண்டு கணபதி ஐயர், தர்மாம்பாள் தம்பதியருக்கு மகவாகப் பிறந்தார். கணபதி ஐயர் அவ்வூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். சுப்பிரமணிய ஐயருக்கு உடன் பிறந்தவர்கள் சகோதரர்கள் ஆறு பேர், சகோதரி ஒருவர். ஆரம்பக் கல்வி திருவையாற்றிலும், உயர் கல்வியைத் தஞ்சாவூரிலும் படித்து 1869ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேறினார். 1871இல் எஃப்.ஏ (இடைநிலை) தேர்வில் தேறினார். அதே ஆண்டு திருமணமும் நடந்தது. பிறகு சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். அதனைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி உட்பட சில இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின் தி ஆரியன் ஸ்கூல் எனும் பள்ளியை நிறுவி நடத்தினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த இலக்கியக் கழகத்தில் சேர்ந்து, அங்கிருந்த சில அறிஞர்களின் தொடர்பை பெற்றார். அப்போது முதன் முறையாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாக ஒரு இந்தியரை சர் டி.முத்துசாமி ஐயரை நியமித்தனர். இந்த நியமனம் குறித்து அப்போதைய ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் குறைகூறியும் சாதி பேதங்கள் குறித்தும் எழுதின. இதனைக் கண்டித்து எழுதத் தங்களுக்கென்று ஒரு பத்திரிகை தேவை என்பதை ஜி.சுப்ரமணிய ஐயரும் அவரது நண்பர்களும் உனர்ந்தனர். உடனே ஒவ்வொருவரும் கொடுத்த நன்கொடை ஒண்ணே முக்கால் ரூபாயில் 80 பிரதிகள் அச்சிட்டு ஒரு பத்திரிகை வெளியிட்டனர். 1878 செப்டம்பர் 20ஆம் தேதி "இந்து" பத்திரிகை வெளியானது. பொது மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் பத்திரிகையாக அப்போதிருந்து 'இந்து' இருந்துவந்தது. ஜி.சுப்பிரமணிய ஐயரோடு சேர்ந்து 'இந்து' பத்திரிகையைத் தொடங்கிய அந்த அறுவர் செங்கல்பட்டைச் சேர்ந்த எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி. கேசவ ராவ் பந்த் மற்றும் என். சுப்பாராவ் பந்துலு ஆகியோராவர். இவர்களில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் வீரராகவாச்சாரியாரும் பச்சையப்பன் கல்லூரியில் ட்யூட்டராக பணியாற்றியவர்கள். மற்ற நால்வரும் சட்டக்கல்லூரி மாணவர்கள். அப்போது 'இந்து' பத்திரிகை ஜார்ஜ் டவுனில் மிண்ட் தெருவில் ஸ்ரீநிதி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு புதன்கிழமையும் மாலையில் இப்போதைய இந்து பத்திரிகையின் அளவில் கால் பகுதியாக எட்டு பக்கங்கள் நாலணா விலையில் அதாவது இப்போதைய இருபத்தைந்து காசுகளுக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த தேசபக்த இளைஞர்கள் அறுவரும் வெளிக்கொண்டு வந்த 'இந்து' பத்திரிகை மக்களின் அபிப்பிராயங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையின் கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் எல்லா பிரச்சினைகளிலும் மக்கள் சரியான கோணத்தில் அணுக உதவி செய்தது. இந்தப் பத்திரிகை தொடங்கியதின் நோக்கத்தைப் பற்றி இவர்கள் எழுதிய அந்த ஆங்கிலப் பகுதி இதோ: "......The principles that we propose to be guided by are simply those of fairness and justice. It will always be our aim to promote harmony and union among our fellow countrymen and to interpret correctly the feelings of the natives and to create mutual confidence between the governed and the governors".

'இந்து' பத்திரிகை தொடங்கப்பட்டதே ஆங்கிலேயர்களின் ஆதரவு பத்திரிகைகள் குறிப்பாக "தி மெட்றாஸ் மெயில்" இந்தியர்களை ஏளனமாக எழுதியதை எதிர்த்துத்தான். ஆகவே நீதிபதி முத்துசாமி ஐயர் நியமனத்தை எதிர்த்து அந்த ஆங்கில பத்திரிகை எழுதியபோது 'இந்து' நியமனத்தை ஆதரித்ததோடு, ஆங்கில ஏட்டின் கருத்தைத் தூள்தூளாக்கியது. அதன் பிறகு இந்து பத்திரிகையின் தாக்கம் மக்களுக்கு ஏற்பட்டது செங்கல்பட்டு கலவர வழக்கு 1881இல் தான். இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை கவர்னருக்கு எதிராக கடுமையான வாதங்களை முன்வைத்தது இந்து பத்திரிகை. அதற்குப் பின் மூன்று ஆண்டுகள் கழித்து 1884இல் சேலம் கலவர வழக்கின் போதும் இந்து பத்திரிகை ஆங்கில அரசுக்கு எதிராக போர்முழக்கம் செய்தது. சேலம் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த சி.விஜயராகவாச்சாரியார் சம்பந்தப்பட்ட வழக்கு அது. அதுபற்றி 'இந்து'வின் வாதம் இதோ:-
“ the prosecution of the socalled Salem Rioters and their convictions were the result of a premeditated design, hastily formed and executed in a vindictive spirit, not very honourable and utterly unworthy of a civilized Government”.

1880இல் இந்து பத்திரிகை மைலாப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. 'தி இந்து அச்சகம்' ரகூநாத ராவ் (Ragoonada Row) என்பவரால் தொடங்கப்பட்டது. 1883 முதல் இது வாரம் மும்முறையாக வெளிவந்தது. 1897இல் திலகரின் கைதை எதிர்த்து இந்து முழக்கமிட்டது. பிறகு 1883 டிசம்பர் 3ஆம் தேதி முதல் இந்து பத்திரிகை மவுண்ட் சாலைக்குத் தனது சொந்த அச்சகமான 'தி நேஷணல் பிரஸ்'க்கு மாறியது. சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த நார்ட்டன் என்பார் சென்னை சட்டமன்ற மேலவைக்குப் போட்டியிட்டார்; அவரை இந்து ஜி.சுப்பிரமணிய ஐயர் அவரை தீவிரமாக ஆதரித்தார். ஆங்கில ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்த ஜி.எஸ். நார்ட்டன் துரையுடன் எப்படி இவ்வளவு நெருக்கம் கொண்டார் என்பது தெரியவில்லை.

இந்த 'திருவல்லிக்கேணி அறுவர்' பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சட்டம் படித்த மாணவர்கள் வக்கீல் தொழில் செய்யச் சென்று விட்டனர். ஜி.சுப்பிரமணிய ஐயரும் வீரராகவாச்சாரியாரும் மட்டும் பத்திரிகையை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. 1898இல் அதாவது இந்து பத்திரிகை வெளிவரத்தொடங்கி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஜி.சுப்ரமணிய ஐயர் இந்த பத்திரிகையை தனது நண்பர் ஒருவருக்கு விற்றுவிட்டார். அதுமுதல் அது கஸ்தூரி ஐயங்கார் குடும்பத்துக்குச் சொந்தமானது. இந்து பத்திரிகை காங்கிரஸ் கட்சி தொடங்குவதற்கு முன் ஏழு ஆண்டுகள் மூத்தது.

இவர் சென்னை மகாஜன சபையில் உறுப்பினர் ஆனார். 1885இல் பம்பாயில் காங்கிரஸ் கட்சி உருவானபோது ஜி.எஸ். அவர்கள் அதன் ஆரம்ப கால உறுப்பினர் ஆனார். 1906இல் கர்சான் பிரபு வங்கத்தை பிரித்தபோது அதனை எதிர்த்துக் கடுமையாக எழுதினார். 1907இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் இவர் மிதவாத தலைவரைத் தலைமைப் பதவிக்கு முன்மொழிந்தாரே தவிர, பிறகு பால கங்காதர திலகரையே பின்பற்றலானார்.

1882ஆம் வருஷம் "சுதேசமித்திரன்" பத்திரிகையை வார இதழாகத் தொடங்கினார். 1889 முதல் இது நாள் இதழாக மலர்ந்தது. மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த பாரதியாரைச் சென்னைக்குக் கொண்டு வந்து ஒரு பத்திரிகையாளராகவும், அதன் மூலம் ஒரு தீவிரமான அரசியல்வாதியாகவும் ஆவதற்கு மூலகாரணமாக இருந்தவர் ஜி.எஸ். மகாகவியை உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் இவரே.

இவர் சமூக சீர்திருத்தங்களில் அதி தீவிர கவனம் செலுத்தினார். பால்ய விவாகம், விதவைத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, சாதி ஒற்றுமை இவைகளில் அவர் ஆர்வம் காட்டினார். திருமண வயதை அதிகரிக்கவும், விதவைத் திருமணங்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமுதாயத்தைல் சரிசமமான அந்தஸ்த்தைப் பெற்றுத் தருவதற்கும், குழந்தை திருமணங்களைத் தடை செய்யவும் இவர் அயராது பாடுபட்டார். இவர் ஊருக்கு உபதேசம் செய்வதோடு நிற்கவில்லை, தனது விதவை மக ளான 13 வயதில் விதவையாகிவிட்ட சிவப்பிரியாம்பாளுக்கு பம்பாயில் 1889ஆம் வருஷ காங்கிரஸ் மகாநாடு நடந்த போது அந்தக் காலத்திலேயே அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே விதவா மறுவிவாகம் செய்து வைத்தவர். பிற்காலத்தில் இவருக்கு உடல் உபாதை ஏற்பட்டு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அது உடைந்து புண்ணாகி, உடல் முழுவதும் மோசமாக ஆகியது. இது அவரது பொதுத் தொண்டினை மிகவும் பாதித்தது, மனம் வருந்தினார். மகாத்மா காந்தி இவர் இருக்குமிடம் வந்து இவரைக் கண்டு ஆறுதல் கூறிச் சென்றார்.

“சுதேசமித்திரன்" பத்திரிகையை இவர் வாரம் மும்முறையாகக் கொண்டு வந்தார். 1889 முதல் அது தினசரியாக வெளியாகியது. இந்த காலகட்டத்தில் 'சுதேசமித்திரன்' எழுத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான விமரிசனங்களைத் தாங்கி வந்தது அதன் காரணமாக அரசாங்கத்தின் கெடுபிடிகளும் அதிகமாயின. இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் இவரது உடல்நிலையை அதிகம் பாதித்தது. எனினும் இவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு அதாவது 1915இல் சுதேசமித்திரனை கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமான் ஏ.ரங்கசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார். தியாகச் செம்மல், பத்திரிகைத் துறையின் முன்னோடி, மகாகவி பாரதியை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த உத்தமர், சமூக சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் தனது 61ஆம் வயதில் 1916இல் காலமானார். வாழ்க ஜி.சுப்பிரமணிய ஐயர் புகழ்!

TUESDAY, MAY 18, 2010

56. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
56. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்.
தொகுப்பு: வெ. கோபாலன்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் திருக்கருகாவூர் எனும் பிரசித்தி பெற்ற தலமொன்றில் பிறந்தவர் வெங்கட்டராமையர் எனும் பந்துலு ஐயர். இவர் தேசபக்தியின் காரணமாக இவர் காலத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டார். அதற்கு வசதியாக இவர் கும்பகோணம் நகரத்துக்குக் குடி பெயர்ந்தார்.

1930ஆம் ஆண்டில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்ச்சி நந்து கொண்டிருந்தபோது, தொண்டர்கள் ராஜாஜி தலைமையில் கால்நடையாக திருச்சியிலிருந்து கும்பகோணம் வந்தபோது, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அப்போது அதன் தலைவராக இருந்த பந்துலு ஐயர் அவர்களை வரவேற்றார். டவுன் ஹை ஸ்கூலுக்கு எதிரில் இப்போதுள்ள காந்தி பார்க் இருக்கும் இடத்தில் தொண்டர்களுக்கு ஒரு வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் தலையெடுத்து வளர்ந்து கொண்டிருந்த 'சுயமரியாதை' இயக்கத்தினர் இந்தத் தொண்டர்கள் இவர்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், அதில் பல கேள்விகளை எழுப்பியும், கூட்டத்தில் கலவரம் செய்ய முயன்றனர். கூட்டத்துக்கு பந்துலு ஐயர்தான் தலைமை வகித்திருந்தார். நிலைமையை கட்டுப்படுத்தியபின் கூட்டத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தார். ராஜாஜி முதலிய தலைவர்கள் காமாட்சி ஜோசியர் தெருவில் இருந்த பந்துலு ஐயரின் வீட்டில்தான் தங்கினர்.

பின்னர் உப்புச் சத்தியாக்கிரகப் படை மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் சென்றடைந்த போது, இவர் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்ற கூட்டங்களில் எல்லாம் உரையாற்றினார். கடைசியில் வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் இவர் பங்கேற்று, க.சந்தானம் உள்ளிட்டோரோடு கைதாகி சிறை தண்டனை பெற்று திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இவர் மட்டுமல்ல, இவரது குடும்பவே சுதந்திர வீரர்களைக் கொண்ட குடும்பம். இவரது மகன்கள் சேஷு ஐயர், டி.வி.கணேசன் ஆகியோரும் விடுதலைப் போராட்ட வீரர்கள், தியாகிகள். தஞ்சை மாவட்டம் சீர்காழியை அடுத்த உப்பனாற்று பாலத்துக்கு வெடி வத்துத் தகர்க்க முயன்ற குற்றத்துக்காக சீர்காழி ரகுபதி ஐயரின் புத்திரன் சுப்பராயனோடு, சேஷு ஐயரும், டி.வி.கணேசனும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணேசன் 'தினமணி' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர். இந்தப் பத்திரிகை அதிபர் இராம்நாத் கோயங்கா, தினமணி ஏ.என்.சிவராமன், ராமரத்தினம் ஆகியோரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். எனினும் சேஷு ஐயர் வழக்கிலிருந்து விடுதலையானார். ஆனால் கணேசன் விடுதலை ஆன கையோடு, பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மிகத் தீவிரமான அடக்குமுறையை 1930இல் கையாண்ட தஞ்சை கலெக்டர் தார்ன் துரைக்குச் சவாலாக விளங்கிய பந்துலு ஐயர் ஏராளமான தொல்லைகளுக்கு ஆளானார். மாறி வந்த அரசியல் சூழ்நிலையில் பந்துலு ஐயரின் குடும்பம், அவர்களின் வாரிசுகள் இவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டனர். இந்த தியாகசீலர் பற்றிய மேலும் விவரங்கள் வைத்திருப்போர் தயைகூர்ந்து அவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் பந்துலு ஐயர் பற்றிய வரலாற்றைத் தொகுத்து வெளியிட முயற்சி செய்யலாம்.

திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்
68. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக பர்மா சென்று குடியேறியவர்களில் லட்சுமி அம்மாளும் ஒருவர். மகாத்மா காந்தியடிகளின் மீது அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். காந்தியப் பொருளாதாரம், காந்தியடிகளின் கதர் கொள்கை இவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். பர்மாவில் இவர் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த இந்தியர்களை ஒன்றுதிரட்டி 'கதர் சேவா சங்கம்' என்ற அமைப்பை நிறுவி, அவர்களைக் கைராட்டை மூலம் நூல் நூற்கச் செய்து அவற்றைத் துணியாக்கி அணிந்து வரத்தொடங்கினார்.

இந்தியாவிலிருந்தும் கதர் துணிகளை வரவழைத்து லாபம் இல்லாமல் கொள்முதல் விலைக்கே இந்தியர்களுக்கு விற்று கதர் அணியத் தூண்டினார். பர்மாவில் இவரது மதிப்பும் மரியாதையும் அதிகரித்து வந்தது. அந்த லட்சுமி அம்மாளுக்கு மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். இவர் ஒருமுறை இந்தியா வந்தபோது அப்போது மைசூரில் தங்கியிருந்த மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்தார். அவரிடம் தன்னுடைய கதர் பணி பற்றி சொல்லி, கதர் நிதிக்காக காந்தியடிகளிடம் 15 ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார். லட்சுமி அம்மையாரின் கதர் பணி பற்றியும் தேசபக்தி பற்றியும் கேட்டறிந்த காந்தியடிகள் பெருமகிழ்ச்சியுற்று பேசியதோடு, கதர் இயக்கத்தில் இவ்வளவு ஆர்வம் கொண்ட நீங்கள் நன்கொடை கொடுப்பதில் மட்டும் ஏன் கஞ்சத்தனம் செய்தீர்கள் என்றார். அதற்கு அம்மையார் தன்னிடம் அவ்வளவுதான் பணம் இருக்கிறது என்று சொல்லி சமாளித்தார்.

இந்த சம்பாஷணையின் போது ராஜாஜியும் அங்கு உடனிருந்தார். காந்தியடிகள் சொன்னார், "நான் விரும்பும் நன்கொடை வேறு. நீங்கள் பணத்தைப் பற்றி சொன்னதாக நினைக்கிறீர்கள். இல்லை. உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களல்லவா, அவர்களில் ஒருவரை தேசப் பணிக்காக நீங்கள் ஏன் அர்ப்பணிக்கக்கூடாது” என்று புன்னகைத்தார். அடிகளின் கேள்வியின் பொருள் அப்போதுதான் லட்சுமி அம்மாளுக்குப் புரிந்தது.

காந்தியடிகள் இப்படிக் கேட்டதும் லட்சுமி அம்மாள் மகிழ்ச்சியடைந்தார். தேச சேவைக்கு வீட்டிற்கு ஒரு பிள்ளை என்பது போல அண்ணல் காந்தியடிகள் தன்னிடம் கேட்டது தன் ஜென்மம் சாபல்யமடைந்தது போல நினைத்தார். "பாபுஜி தங்கள் விருப்பப்படியே என்னுடைய மூன்று குமாரர்களில் ஒருவனைத் தேச சேவைக்காகத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்" என்றார். உடனே ரங்கூனில் இருந்த தன் மூத்த மகனுக்கு கடிதம் மூலம் நடந்த விவரங்களை எழுதினார். ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் இருந்த அந்த மகனும் தாய் சொல்லைத் தட்டாமல் தன் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியா வந்தார். அகில இந்திய சர்க்கா சங்கத்தை அடைந்து விவரங்களைக் கூறினர். திருப்பூர் சென்று அங்கு கதர் பணியினை மேற்கொள்ளுமாறு இவர் அனுப்பி வைக்கப்பட்டார். கதர் பணியோடு நாட்டுச் சுதந்திரப் போரிலும் தீவிரமாக பங்கு கொண்டார் அந்த இளைஞர் அவர்தான் பி.எஸ்.சுந்தரம் என்பவர். தியாகி கொடிகாத்த குமரன் அணிவகுத்துச் சென்று போலீசார் தடியடியில் உயிர் இழந்தாரல்லவா அந்த குழுவுக்குத் தலைமை ஏற்று நடத்திச் சென்றவர் இந்த சுந்தரம் தான்.

அன்று, திருப்பூர் குமரன் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் வீதியில் விழுந்து கிடந்த அன்று; 10-1-1932 அன்று, குமரனை அடித்து வீழ்த்திவிட்டார்களே, என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஏன்? என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த விநாடி, போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முகமது என்பவர் திடீரென இவர் மீது பாய்ந்து கண்மூடித்தனமாகத் தாக்கினார். பாவம் அந்த இன்ஸ்பெக்டர் அவர் மட்டும் அடிக்கிறாரே, அவரது கரங்கள் வலிக்குமே என்று கூட இருந்த கான்ஸ்டபிள்களும் தங்கள் பங்குக்குத் தாக்கினர். அவர்கள் அடித்த அடியில் சுந்தரத்தின் இரண்டு கால்களிலும் எலும்புகள் முறிந்தன. கீழே விழுந்து கிடந்த அவரை கான்ஸ்டபிள்கள் தூக்கிப் பிடித்து நிறுத்திக்கொள்ள மீண்டும் கைகள் நோகும் வரை அடித்தான் அந்த அரக்கன் முகமது. மயங்கி கீழே விழுந்தார் சுந்தரம். அத்தனை பேரிலும் அதிகமாக அடிவாங்கியவர் இவர்தான். உடலில் மொத்தம் பத்தொன்பது இடங்களில் எலும்புகள் முறிந்தன என்பது பின்னர் தெரிந்தது.

அன்றைய போரில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட மூவரில் இராமன் என்பவருக்கு இதயத்துக்கு அருகில் மார்பு எலும்பு முறிந்திருந்தது. சுந்தரம் பல எலும்பு முறிவோடு கிடந்தார். தலையில் அடிபட்ட குமரன் மட்டும்தான் நினைவினை இழந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். நினைவு திரும்பிய சுந்தரம் குமரன் நிலைபற்றியே திரும்பத் திரும்ப விசாரித்துக் கொண்டிருந்தார். குமரன் இறந்த செய்தி கேட்டு தன் உடல் வேதனைகளைக்கூட மறந்து அழுதார். பின்னர் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.

போலீஸ் அடித்த அடியில் சுந்தரம் தன் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டதை உணர்ந்தார். எலும்பு முறிவுகளால் உடல் நலம் கெட்ட போதும், காதுகள் இரண்டும் முழுவதுமாக செயல் இழந்துவிட்ட போதும் தொடர்ந்து தேச சேவையில் ஈடுபட்டு உழைத்தார் சுந்தரம். 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இவரை இப்படி செயலிழக்கச் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பதவி உயர்வு பெற்று, பெருமையோடு பணி ஓய்வும் பெற்று சுகமாக வாழ்ந்தார். பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது: "மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோரிதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? தர்மமே வெல்லுமெனுஞ் சான்றோர் சொல் பொய்யாமோ? கர்ம விளைவுகள் யாம் கண்டதெல்லாம் போதாதோ?".

சுதந்திர இந்தியாவைப் பார்க்காமலே திருப்பூர் குமரன் இளம் வயதில் தடியடியில் உயிரிழந்தான். அதே வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சுந்தரமும் இராமனும் நடைப்பிணங்களாக வாழ்ந்து சுதந்திர இந்தியாவைப் பார்த்த பின் உயிரிழந்தனர். இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் எந்த குறையுமின்றி நலமாக வாழ்ந்தனரே. இறைவா! இதுதான் உந்தன் நீதியா என்று நமக்குக் கதறத் தோன்றுகிறது.

இவர்களையெல்லாம் இன்று நாம் போற்றிப் புகழ் பாடலாம். சிலைகள் வைத்து மாலைகள் போடலாம். வாழ்க வாழ்க என்று வாய் நிறைய கோஷம் போடலாம். அவர்களது படங்களை சுவற்றில் மாட்டி பூக்களையிட்டு வணங்கி மகிழலாம். ஆனால் அவர்கள் இழந்தவற்றை, உடல் நலத்தை இந்த சுதந்திர நாடு அவர்களுக்குத் திருப்பித் தரமுடியுமா. முடியாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காவது தண்டனை கொடுக்க முடிந்ததா? அதுகூட வேண்டாம் அவர்களைப் போற்றி பதவி உயர்வு கொடுக்காமலாவது இருந்திருக்கலாம் அல்லவா. இதெல்லாம் நமது மனக்குமுறல்தான் என்றாலும் ஆண்டவர் காதுகளில் அவை விழவில்லையே! அதுதான் குறை. வாழ்க மாவீரன் சுந்தரம் புகழ்!

MONDAY, MAY 17, 2010

அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
67. அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

1942 ஆகஸ்ட் போராட்டத்தின் போது கோவை சூலூர் விமான நிலையம் தீக்கிரையான வரலாறு அனைவருக்கும் தெரிந்த செய்தி. இந்த கலவரத்தின்போது முன்னணியில் இருந்தவர் கோவை பி.வேலுசாமி. இவர் தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்டு தொழிற்சங்க இயக்கத்திலும், சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டவர். 1920ஆம் வருஷம் பழனிசாமி நாயுடுவுக்கு மகனாகப் பிறந்தார். இவரது நேர்மையும், தொழிலாளர்களுக்காக உண்மையாகப் பாடுபடும் உணர்வையும் மதித்து அவர்கள் மத்தியில் இவர் ஒரு கெளரவமான தலைவராக ஏற்கப் பட்டவர். கோவை தொழிலாளர் இயக்கம் மிக பயங்கரமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. என்.ஜி.ராமசாமி எனும் உண்மைத் தொண்டன் பலமுறை அடித்து குற்றுயிரும் குலையுயிருமாகப் போடப்பட்டு தனது இளம் வயதிலேயே மரணமடைந்து விட்டவர். அவர் வழியில் வந்த வேலுசாமி மட்டும் அடி உதைகளுக்குத் தப்பிவிடமுடியுமா. இவருக்கும் அவை தாராளமாகக் கிடைத்தன. அந்த விழுப்புண்களோடுதான் இவர் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

கூட்டத்தில் பேசுவதோ, கூட்டத்துக்குத் தலைவர்களை அழைத்து வருவதோகூட இவருக்கு முக்கியமில்லை. அப்படி நடக்கும் கூட்டங்களில் யாரும் புகுந்து கலாட்டா செய்யாமல் பார்த்துக் கொள்வதில் இவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். மகாத்மாவின் ஒத்துழையாமை போன்ற போராட்டங்களில் இவர் ஈடுபாடு கொண்டாலும், தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு இவர் தொழிலாளர் இயக்கத்தில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் 1942 ஆகஸ்ட் மாதம் பம்பாய் காங்கிரசில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி "செய் அல்லது செத்து மடி" எனும் அறைகூவலை மக்களுக்கு விடுத்தார். தலைவர்கள் கைது செய்யப்பட்டதும், வழிகாட்டுதல் இல்லாத மக்கள் கூட்டம் தன்னிச்சையாக போராட்டத்தைத் தொடங்கி விட்டனர்.

ஆகஸ்ட் போராட்டத் தொண்டர்கள் கோவையில் ரகசியமாகக் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இன்னார் இன்ன வேலைகளைச் செய்வது என்று முடிவாகியது. அதன்படி வேலுசாமி பைக்காரா மின் நிலையத்தைத் தகர்ப்பது என்று முடிவாகியது. அதற்காக இவரும் வேறு பல தொண்டர்களும் எவ்வளவு முயன்றும், அங்கிருந்த பலத்த காவல் காரணமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கோவையில் இருந்த இம்பீரியல் வங்கி (தற்போது ஸ்டேட் வங்கி) யைத் தாக்க முயன்று அதிலும் தோல்வி கண்டனர்.

அடுத்ததாக சூலூர் விமான நிலையத்துக்குத் தீ வைப்பது என்ற முடிவில் இவர்கள் பலர் ஒன்றுகூடி ரகசியமாகச் சென்றார்கள். இவர்கள் அனைவரும் பல குழுக்களாகப் பிரிந்து நாலா திசைகளிலும் தீ வைத்துவிட தீ நன்கு பற்றி எரியத் தொடங்கியது. இவர்கள் ஓடி தலைமறைவாகி விட்டனர். போலீஸ் இவர்களைப் பிடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் இவர்களோ மாறுவேடமணிந்து கொண்டு போலீசின் கையில் அகப்படாமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார்கள். அப்படிப் போகின்ற இவர்களுக்கு ஆங்காங்கே அடைக்கலம் கொடுத்து காப்பாற்ற ஏராளமான தேசபக்தர்கள் இருந்தார்கள். இவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் மாட்டிக்கொண்டு சிறை செல்ல நேருமென்பதெல்லாம் இவர்களுக்குத் தெரிந்திருந்தும் தைரியமாக இதனைச் செய்தார்கள். அடடா! தேசபக்திக்குத்தான் எவ்வளவு சக்தி.

என்னதான் இவர்களு ஊர்விட்டு ஊர் ஓடிக்கொண்டிருந்தாலும் போலீஸை கடைசிவரை ஏமாற்ற முடியவில்லை. வேலுச்சாமியும் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கிடைக்கும் மரியாதைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? நிர்வாணமாக்கப்பட்டு கண் மண் தெரியாமல் அடித்துத் துவைக்கப்பட்டார் வேலுச்சாமி. சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்தனர். உன் தேசத்தின் மீது பக்தியா, அதற்காக விமான நிலையத்துக்குத் தீ மூட்டுவாயா என்று சொல்லிச் சொல்லி அடித்தனர். மயங்கி கீழே விழுந்தவரை இருவர் தாங்கிப் பிடித்துக் கொள்ள மற்றவர்கள் அடித்தனர். அட என்ன கொடுமை!

போலீஸ்காரர்கள் அடித்த அடியில் இவரது முதுகு தண்டுவடத்தில் நல்ல காயம். மூளையில் நரம்பு ஒன்று துண்டிக்கப்பட்டதாம். இப்படிப் பலநாட்கள் செய்த சித்திரவதைக்குப் பின் இவர் அடி தாங்கமுடியாமல் மயங்கி கீழே விழ, வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதி கொட்டத் தொடங்கியது. குற்றுயிரும் குலை உயிருமாக இவர் விசாரணை கைதி என்ற பெயரில் சிறையில் வாடினார். இவற்றிற்கு முத்தாய்ப்பாக இவர் அலிப்புரம் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ மனையில் இவருக்குச் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் கூட பட்ட அடியின் பயனாக இவர் அடிக்கடி நினைவாற்றலை இழக்கத் தொடங்கினார். கை நடுக்கம் ஏற்பட்டு எதனையும் பிடிக்கவோ, சாப்பிடவோ, எழுதவோ முடியாமல் போயிற்று.

இவர் சிறைவாசம் முடிந்து வெளியேறிய பின்னரும் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தில் பங்கு கொண்டார். 11000 தொழிலாளர்கள் வேலை இழந்ததை எதிர்த்துப் போராடிய இவருக்கு 15 மாதங்கள் விசாரணைக் கைதி என்ற பெயரில் சிறைவாசம். அது முடிந்து வெளியே வந்து 16 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். போராட்ட காலத்தில் இவர் மீது வழக்குத் தொடர்ந்து இவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை கிடைத்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் இவரது தொழிலாளர் போராட்டம் நின்றபாடில்லை. 1952ல் கம்போடியா மில்லில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த மோதலின் காரணமாக இவர் இரண்டு மாதம் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தார்.

தொழிலாளர் கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்த போது இவர் மீது கல்வீசப்பட்டது. கல்வீச்சில் இவரது இடது கண்ணின் கீழ் எலும்பு முறிந்து கோவை தலைமை மருத்துவ மனையிலும், பின்னர் சென்னை அதாலமிக் கண் மருத்துவ மனையிலும் ஆறு மாதங்கள் சிகிச்சை செய்து கொண்டும் பலனின்றி ஒரு கண்ணின் கண்பார்வை இழந்தார். 1967ல் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து இவர் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தி.மு.க. அரசில் விவசாய மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடி ஒன்றரை மாதம் சிறையில் இருந்தார். ஒரு ESI மருத்துவ மனைக்கு அண்ணாவின் பெயர் வைக்கப்பட்டதை எதிர்த்து தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமியின் பெயரை வைக்க வற்புறுத்தி போராடி சிறை சென்றார். பிறகு 1972 வரை வாழ்ந்த இவர் தனது போராட்ட வாழ்வை முடித்துக் கொண்டு இறைவனடி சேர்ந்தார். வாழ்க பி.வேலுச்சாமி புகழ்!

தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
66. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுமன் தீர்த்தம் எனும் கிராமம். இங்கு குமாரசாமி எனும் தியாகி வசித்து வந்தார். இவர் இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று சிறை சென்றார். இவர் புனே, பம்பாய், சென்னை, பெல்லாரி, சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் இருந்திருக்கிறார். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தனது அறுபது வயதைக் கடந்த பிறகு ஒரு நாள் இவர் சேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த இளங்கோவன் என்பவரைச் சந்தித்துத் தனக்கு அளிக்கப்படும் தியாகி பென்ஷனும் தாமிரப் பட்டயமும் இனி வேண்டாம் என்று திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னார். அந்த நேர்முக உதவியாளர் இரண்டு மணி நேரம் குமாரசாமியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவரைச் சமாதானப் படுத்த முடியாத நிலையில், கலெக்டர் கருப்பண்ணனைச் சந்திக்கும்படி அனுப்பி வைத்தார். குமாரசாமியும் கலெக்டரைச் சந்தித்து தனக்கு பென்ஷன் வேண்டாம், இந்தத் தாமிரப் பட்டயமும் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தார். கலெக்டர் அதிர்ச்சியில் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு குமாரசாமி சொன்னார்:-

எனக்கு 15 வயது ஆகும்போதே சுதந்திரப் போராட்டத்தில் குதித்து விட்டேன். எனக்கு பி. ராமமூர்த்திதான் தலைவர். அவர் தலைமையில் போராடி பல சிறைகளில் இருந்திருக்கிறேன். எனக்கு தியாகி பென்ஷனும் இந்தப் பட்டயமும் கொடுத்தார்கள். இவற்றால் எனக்குப் பெருமை என்று நினைத்து வாங்கிக் கொண்டேன். ஆனால் நாங்கள் சிறை சென்று தியாகம் செய்து வாங்கிய இவை இப்போது எனக்கு தேவையில்லை. காரணம் வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் சுதந்திர இந்தியாவில் லஞ்சமும், ஊழலும் கரைகடந்து பெருகிவிட்டன. காவல்துறையின் அராஜகமும் அடக்குமுறையும் வெள்ளையர் காலத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன. சுதந்திரம் பெற்ற நாட்டில் மக்களும், அதிகாரிகளும் சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்து நேர்மையாகவும், மக்களுக்கு நாணயமாகவும் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தேன். நாளுக்கு நாள் இந்த லஞ்சப் பேய் அதிகரிக்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. அதிகாரிகள் வெள்ளைக்காரர்களை விட தங்களை மேலானவர்களாகக் கருதிக் கொண்டு சொந்த நாட்டானையே சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். இதற்காகவா இத்தனைப் பாடுபட்டு சுதந்திரம் வாங்கினோம்? என்றார்.

நீங்கள் இந்த மாவட்டக் கலெக்டர். உங்களிடம் இப்போது நான் வந்து பேசுகிறேன். இந்த வாய்ப்புகூட ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எனக்கு அளிக்கப்படுவதில்லை. ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் ஒரு முறை குமாரபாளையத்திலிருந்து பவானிக்கு ஒன்பது படி அரிசி கொண்டு போனேன். குமாரபாளையம் செக்போஸ்ட்டில் அரிசி கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். அதனால் நான் கொண்டு சென்ற அரிசியை அங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். என் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்ப அதே வழியில் வரும்போது அந்த செக்போஸ்ட் வழியாகப் பலர் அரிசி கொண்டு சென்றார்கள். ஒருவரும் தடுக்கப்படவில்லை. போலீஸ் அதிகாரிகளும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஒன்றும் கேட்கவுமில்லை, விசாரிக்கவுமில்லை.

உடனே நான் அங்கிருந்த போலீசாரிடமும், செக்போஸ்ட் அதிகாரிகளிடமும் அவர்கள் மட்டும் அரிசி கொண்டு போகிறார்களே, என்னிடம் கூடாது என்று பிடுங்கி வைத்துக் கொண்டீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "நீ அவர்களைப் பிடித்துக் கொண்டு வருவது தானே!" என்று கிண்டலடித்தார்கள். உடனே நான் 'சுதந்திரம் வாங்கினாலும் வாங்கினோம், இந்தப் போலீஸ்காரர்களிடமும், பியூன்களிடமும் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்' என்று மனம் வெதும்பிக் கூறினேன். அப்போது அங்கிருந்த ஒரு அதிகாரி 'இவன் மீது ஒரு செக்ஷன் போட்டு கேஸ் புக் பண்ணு' என்றார்.

பிறகு நான் அப்போது பஞ்சாயத்து போர்டு அதிகாரியாக இருந்த என் அண்ணன் மகன் வஜ்ரவேலுவின் பெயரைச் சொன்னதும், போலீஸ்காரர்கள் என்னை அனுப்பி விட்டார்கள். சுதந்திரம் என்பது என்ன என்று நாங்கள் நினைத்தோமோ அந்த சுதந்திரம் இன்று நாட்டில் இல்லை. அதிகார வர்க்கம் தலைக்கொழுத்து ஆடத் துவங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் பெருகிவிட்டதனால், அரசியல் குறுக்கீடுகளும், அதிகார துஷ்பிரயோகங்களும், நியாம் செத்துக் கொண்டிருக்கிறது என்றேன் என்றார் குமாரசாமி.

வறுமையில் பிடியில் சிக்கிய தியாகி குமாரசாமிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகள் பவானியில் ஆசிரியையாக இருந்தார். மகன் ராமலிங்கம் துணி வியாபாரம். நாட்டுக்கு உழைத்த இதுபோன்ற தியாக சீலர்கள் மனம் நொந்து, வெந்து மடிந்து போவதும், சம்பந்தமில்லாதவர்கள் ஊழலிலும் லஞ்சத்திலும் வாழ்வதிலும்தான் நமது சுதந்திரம் இருக்கிறதா என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுவது இயற்கைதானே? வாழ்க குமாரசாமி போன்ற தியாகிகளின் உணர்வுகள்!

தருமபுரி தீர்த்தகிரி முதலியார்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
65. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், குறிப்பாக 'வெள்ளையனே வெளியேறு' எனும் ஆகஸ்ட் புரட்சியின் போது தர்மபுரி பகுதிகளில் ஆங்கில ஏகாதிபத்திய சர்க்காருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தீர்த்தகிரி முதலியார். இவர் அன்னசாகரம் எனும் ஊரில் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் 1882இல் பிறந்தார். தேசபக்தி காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது இவருக்கு தியாகச்சுடர் சுப்பிரமணிய சிவா, வ.வெ.சு.ஐயர், மகாகவி பாரதி, அரவிந்தர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, நீலகண்ட பிரம்மச்சாரி, திரு வி.க. ஆகிய தலைவர்களுடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது. நல்லா ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவர் தேசப்பணி என்றால் ஆவேசம் கொண்டு செயலாற்றுவார். இவரை சுப்பிரமணிய சிவா "எம்டன்" என்று அழைப்பாராம்.

1942இல் ஆகஸ்ட் புரட்சியின் போது இவரை கைது செய்து கொண்டு போய் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தனர். வழக்கு இழுத்துக் கொண்டே போயிற்று. வாய்தா வாய்தா என்று வழக்கு முடிவு பெறுவதாக இல்லை. தீர்த்தகிரி முதலியார் பொறுமை இழந்தார். அன்றைக்கு வாய்தா கொடுத்துவிட்ட நீதிபதியைப் பார்த்துச் சொன்னார்: "ஐயா கனம் நீதிபதி அவர்களே! ஒன்று எனக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அதை இப்போதே கொடுத்து விடுங்கள். அல்லது என்னை விடுவித்து விடுங்கள். இப்படி இரண்டும் கெட்டானாக என்ன இன்று, நாளை என்று இழுத்துக் கொண்டே போனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது" என்றார். நீதிமன்றத்தில் இப்படிப் பேசினால் சும்மா விட்டுவிடுவார்களா ஆங்கில நிர்வாகத்தினர். இருபத்தி நான்கு மாத கடுங்காவல் தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பினார்கள்.

இவர் சிறையில் இருந்த காலத்தில் உடனிருக்கும் கைதிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பார், ஏனென்றால் இவர் ஒரு ஆயுர்வேத வைத்தியர். அதோடு சித்தா, யுனானி ஆகிய வைத்திய முறைகளும் இவருக்குத் தெரியும். 1942இல் நடந்த போராட்டத்தில் இரண்டாண்டுகள் தண்டனை பெற்ற இவரை பெல்லாரி சிறையில் கொண்டு போய் அடைத்தனர். இவர் உடல் பருமனைக் கருதி இவருக்கு உடை தைக்க இரண்டாளுக்கு வேண்டிய துணி செலவு செய்ய வேண்டியிருந்தது. அலிப்புரம் ஜெயிலில் ஈரோட்டைச் சேர்ந்த எம்.ஏ.ஈஸ்வரன் அவர்கள் தான் சமையல் பிரிவைக் கவனித்துக் கொண்டிருந்தவர். அவர் விடுதலையான பின் தீர்த்தகிரி முதலியார் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு செய்தார். அந்தக் காலத்தில் கோவையைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் சுதந்திரப் போர் கைதிகளாக இருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் முதலியார்தான் தலைவராகச் செயல்பட்டார். இவர் இட்ட பணியை மற்ற சக கைதிகள் செய்து முடிப்பார்கள். சிறையில் இவர் ஒரு முடிசூடா மன்னராகத்தான் விளங்கி வந்தார்.

ஒரு முறை நோயாளிகளுக்கு வைத்தியம் செய்யக் கையில் பணமில்லாமல் போய்விட்டது. அவரது மனைவு தன் கை வளையல்களைக் கழற்றிக் கொடுத்து மருந்து தயாரித்துக் கொடுக்கச் செய்தார். கூட்டத்தில் பேசும்போது முதலியாருக்குக் கோபமும் வரும் அதனூடே நகைச்சுவையும் வரும். ஒரு முறை இர்வின் பிரபு பதினோரு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்தாராம். இதைப் பற்றி குறைகூறி கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த முதலியாருக்கு நகைச்சுவை உணர்வு வந்து விட்டது. இவர் சொன்னார், நல்ல காலம் இர்வினுக்கு ஒரு கைதான். இரண்டு கைகளாலும் போட்டிருந்தால் இருபத்திரண்டு சட்டங்கள் அல்லவா போட்டிருப்பான் என்றாராம்.

இவர் ஆயுர்வேத வைத்தியர் என்று குறிப்பிட்டோமல்லவா? சுப்பிரமணிய சிவாவின் ஒத்துழைப்போடு இவர் இந்த வைத்திய முறையில் கைதேர்ந்தவராக விளங்கினார். இவரது சிறை வாசத்தின் போது உடன் சிறைப்பட்டிருந்த சக கைதிகளுக்கு வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் வரும் போது இவர் தனது ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தியிருக்கிறார். சிறை அதிகாரிகளே இவரிடம் வந்து இன்ன கைதிக்கு உடல்நலம் இல்லை, நீங்கள் மருந்து கொடுங்கள் என்று வாங்கி கொடுப்பதும் வழக்கம். இவர் ஒரு பல்பொடி தயாரித்திருந்தார், அதற்கு பெருந்தலைவர் சித்தரஞ்சன் தாஸ் நினைவாக "சித்த்டரஞ்சன் பல்பொடி" என்று பெயரிட்டிருந்தார். சேலம் மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா கட்ட விரும்பிய பாரத மாதா ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தலைவர் சித்தரஞ்சன் தாசை அழைக்க இவரே காரணமாக இருந்தார். மூலிகைகள் பற்றிய அறிவு இவருக்கு அதிகமாக இருந்த காரணத்தால் இவர் அந்த மூலிகை வைத்தியத்தையே தனது தொழிலாக ஏற்றுக் கொண்டார்.

இவர் இந்தப் பகுதியில் செல்வாக்குள்ள நிலச்சுவாந்தார். தனது சொத்துக்களைச் சிறுகச் சிறுக விற்று சுதந்திரப் போராட்டத்திற்காகச் செல்வு செய்து விட்டார். இந்த நாடு சுதந்திரம் அடைந்தபோது அவருக்கு வயது 67. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இவருக்கு தள்ளாமையும் வறுமையும் வந்து சேர்ந்தது. 1946இல் அந்தப் பகுதியில் ஒரு ஏரி உடைப்பெடுத்த காரணத்தால் இவரது வீடும் அடித்துக் கொண்டு போய்விட்டது. ஏழ்மையின் பிடியில் இவர் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 1953ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி இவரது ஆவி கூடுவிட்டுப் பிரிந்தது. நாட்டுக்காகத் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இவருக்கு இதுதான் பரிசா?

இவர் பெயரால் "தியாகி தீர்த்தகிரியார் சதுக்கம்" என்ற இடம் இருக்கிறது. ஆனால் இவருக்கென்று நினைவிடம் எதுவும் இல்லை. 1947இல் தருமபுரி மாவட்ட சித்த வைத்திய சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் இருந்தார். தருமபுரி காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தார். சேலம் மாவட்டத் தலைவராகவும் இருந்திருக்கிறார். கைத்தறிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தையும் ஏற்படுத்தினார். தேச சுதந்திரத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய இவர் துன்பமும் துயரமும் சூழ தன் வாழ்வை முடித்துக் கொண்டார். சுதந்திரம் பெற்று ஆறாண்டு காலம் வாழ்ந்தும் இவருடைய வாழ்வில் ஒளி தோன்றாமலே போய்விட்டது. இவருடைய நினைவாக தருமபுரி நகர் மன்ற மைதானம் "தியாகி தீர்த்தகிரியார் மைதானம்" எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. வாழ்க தீர்த்தகிரி முதலியார் புகழ்!

கடலூர் அஞ்சலை அம்மாள்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
63. கடலூர் அஞ்சலை அம்மாள்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தியாகங்கள் பல புரிந்த வீரர்கள் பற்றிய எல்லா விவரங்களும் கிடைப்பது என்பது அரிதுதான். எத்தனையோ தியாகிகளின் வரலாறு கால ஓட்டத்தில் காற்றோடு காற்றாகக் கலந்து வெளியில் தெரியாமலே பொய்விட்டது. வேறு சிலரது வரலாறோ பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படாத காரணத்தாலேயே மறக்கப்பட்டும் விட்டது. ஒரு நாட்டின் தியாக வரலாறு முறைப்படி அரசாங்கத்தின் முத்திரையோடு பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட தியாகிகளை மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டும். குறைந்த பட்சம் சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற தேசிய நாட்களிலாவது அவர்களது நினைவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும். அப்படி வரலாற்றின் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், பெருமளவு மக்கள் மத்தியில் பிரபலமாகாத சில பெயர்களில் கடலூர் அஞ்சலை அம்மாளும் ஒருவர். இவரது கணவரும் ஒரு தியாகி. இவரது மகளும், மருமகனும்கூட தியாகிகள். இப்படி குடும்பமே தியாகிகள் குடும்பமாக இருக்கும் ஒருசிலரில் அஞ்சலை அம்மாள் குடும்பமும் ஒன்று.

இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நம் நாட்டுப் பெண்கள் இப்போது போல சுதந்திரம் பெற்று ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழவில்லை. அந்நிய ஆட்சி நமக்களித்த தீயவற்றில், பெண்ணடிமைத்தனம், பெண்களுக்குக் கல்வி அறிவு பெற வாய்ப்பு இல்லாமை போன்றவற்றால் பொதுவாக பெண்கள் பொதுக் காரியங்களில் அதிகம் தலையிடுவதில்லை. இருந்தாலும் பரம்பரை பரம்பரையாக நமது பாரத பண்பாட்டிலும், நமது மக்களின் ரத்த ஓட்டத்திலும் கலந்துவிட்ட பெண்ணுரிமை காரணமாக, பெண்கள் அறிவிலே சிறந்தும், நிர்வாகத் திறன், அநீதிகளைக் கொண்டு பொங்கும் பாங்கு இவையெல்லாம் எல்லா காலங்களிலும் சாம்பல் மூடிய அக்கினியாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படி சில பெண்கள் ஆண்களுக்கு நிகராகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றும், தியாகங்கள் பல புரிந்துமிருக்கிறார்கள். அதற்கு அந்தக் குடும்பத்தின் ஆண்மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்குமானால் இவர்களது பங்கு சிறப்பாக அமையும். அப்படி குடும்பச் சூழ்நிலையும், சுதந்திர தாகமும் கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்ற கடலூர் அஞ்சலை அம்மாள் பற்றி இங்கு பார்க்கலாம்.

அஞ்சலை அம்மாள் பிறந்தது 1890ஆம் ஆண்டு. 1921ஆம் ஆண்டில் தனது முப்பத்தியோராவது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் முதல் பெண் சுதந்திரப் போராளி எனும் பெருமையைப் பெற்றார். இவரும் இவரது கணவரும் நம் நாட்டில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். சென்னையில் கர்னல் நீல் என்பவனின் சிலையொன்று இருந்தது. இந்த நீல் முதல் சுதந்திரப் போரின் போது இந்திய மக்களுக்கும், சிப்பாய்களுக்கும் இழைத்த கொடுமைகளைக் கருத்தில் கொண்டு, இந்தக் கொடுங்கோலனின் சிலை சென்னை நகரத்தில் இருப்பது அவமானம் என்று கருதி இந்தச் சிலையை நீக்க ஒரு போராட்டம் நடந்தது. ந.சோமையாஜுலு போன்ற பெரும் தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். 1927இல் முதன் முதலாக அஞ்சலை அம்மாள் இந்த நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்திலும், 1933இல் சட்டமறுப்பு மறியலிலும், 1940இல் தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்திலும் இவர் கலந்து கொண்டார். 1941லும், 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றார். இவர் வாழ்க்கை பெரும்பாலும் சிறைவாசத்திலேயே கழிந்தது எனலாம். ஊர் சுற்றி பார்க்க இவர் அலைந்திருக்கிறாறோ இல்லையோ, பல ஊர்களில் இவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஊர்களில் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகியவை அடங்கும். இவர் கர்ப்பவதியாக இருந்த காலத்தில் சிறை சென்று, பேறு காலம் வந்தபோது சில நாட்கள் வெளியே விடப்பட்டு, பிரசவம் ஆனதும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

1929ஆம் ஆண்டு நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலில் இவர் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் முருகப்பா, இவரும் பலமுறை சிறை சென்ற தியாகி. கணவன் மனைவி இருவருமே சிறையில் இருந்தபோது, இவர்களது மகள் லீலாவதி என்ன பாடு பட்டிருப்பார். 1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலும் இவர் கடலூரிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மகள் லீலாவதி ஒன்பது வயதாக இருக்கும்போதே நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வயதிலேயே நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்றார். இவரது தேசப்பணியைக் கண்டு மகிழ்ந்த மகாத்மா காந்தி இவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று வார்தா ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார்.

அஞ்சலை அம்மாளும் அவர் கணவர் முருகப்பாவும் கடலூர் சிறையில் இருந்த காலத்தில் வேலூரைச் சேர்ந்த ஜமதக்கினி என்பவரும் கடலூர் சிறையில் இருந்தார். இவர் சிறையில் காரல் மார்க்சின் 'தாஸ் காபிடல்' எனும் நூலை மூலதனம் என்று மொழியாக்கம் செய்தவர். இவர் பிரபல மார்க்சீய சிந்தனையாளராக மலர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றவர். இவர் கடலூர் சிறையில் இருக்கும் காலத்தில் அஞ்சலை அம்மாளையும், முருகப்பாவையும் சந்திக்க சிறைக்கு வரும் மகள் லீலாவதியைச் சந்திக்க நேர்ந்தது. மகள் லீலாவதிக்கும், சிறையில் இருந்த தியாகி ஜமதக்கினிக்கும் காதல் மலர, இவ்விருவருக்கும் திருமணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் ஜமதக்கினி அவர்களோ, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் என்று உறுதியாக இருந்தார். அதன்படியே 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பின் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த ஜமதக்கினி (நாயக்கர்) 1952 முதல் சுதந்திர இந்தியத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றார். அங்கு வெற்றி பெற்றவர் B.பக்தவத்ஸலு நாயுடு என்ற சுயேச்சை. இரண்டாவதாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் வேதாசல முதலியார். இந்த பக்தவத்ஸலு நாயுடு, பின்னர் ராஜாஜி மந்திரி சபை அமைந்தபோது, காங்கிரசுக்கு ஆதரவளித்து, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் இவர்கள் அமைச்சர்களாக ஆனபோது, இவர் துணை சபாநாயகர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் அஞ்சலை அம்மாள் குடும்பத்தில், தம்பதிகளைத் தவிர, மகள் மருமகன் ஆகியோரும் சிறை சென்ற தியாகிகளாக இருந்தனர் என்பதும், பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்தவர் இந்த அஞ்சலை அம்மாள் என்பதும் பெருமைப் படத்தக்க விஷயம். வாழ்க அஞ்சலை அம்மாள் புகழ்!
 

7 comments:

 1. She is the first Lady MLA in tamil nadu

  ReplyDelete
 2. Anjalai Ammal is the first Lady MLA in Tamil nadu Goverment

  ReplyDelete
 3. Thank you for the article on freedom fighters esp on Anjalai ammal.As her daughter Iam very proud of her n also my grand father as he gave more rights to her.As Mr AnandRaj pointed out she was the first woman M.L.A of Tamilnadu.Thank you.
  y

  ReplyDelete
 4. sorry .There is a correction.Iam her grand daughter.

  ReplyDelete