Sunday, May 23, 2010

Tiruchy Narayana Iyengar to Munagala Pattabhiramayya

MONDAY, MAY 17, 2010

திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
62. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

திருச்சி நகரத்தில் சகோதரர்களாக காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டவர்களில் ரா.நாராயண ஐயங்காரும் அவரது தம்பி ரா.கிருஷ்ணசாமியும் முக்கியமானவர்கள். மற்ற சகோதர காங்கிரஸ் காரர்கள் வருமாறு: டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி; எம்.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், எம்.எஸ்.ரங்கசாமி ஐயங்கார்; டி.எஸ்.திருஞாானசம்பந்தம், டி.எஸ். அருணாசலம், வேலாயுதம்பாளையம் எம்.கே.எம்.முத்து, கே.பாலகிருஷ்ணன் ஆகியோராவர். இதில் ரா.நாராயண ஐயங்காரின் தாயின் தியாகம் மிகவும் சிறப்பானது. மகாத்மாவிடம் பக்தியுடைய இந்த முதிய அம்மையார், காந்தி சுடப்பட்டு இறந்தார் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மயங்கி விழுந்து உயிர் துறந்தார்.

சட்ட படிப்பை முடித்துக் கொண்டு திருச்சியில் வக்கீல் தொழிலை மேற் கொள்ள இவர் எண்ணியிருந்த நேரம். வருஷம் 1919. அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கியிருந்த 'ஹோம்ரூல்' இயக்கம் இவரை தேச சேவையில் ஈடுபடவைத்தது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து நாட்டுப் பணியில் இவர் ஈடுபடலானார். அப்போதிருந்த திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினரானார். அதன் செயலாளராகவும் இவர் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு டி.வி.சுவாமிநாத சாஸ்திரி தலைவராக இருந்தார். பழம்பெரும் புரட்சி வீரர் வ.வெ.சு.ஐயரும் திருச்சி ஜில்லா காங்கிரசில் அங்கம் வகித்து வந்தார்.

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் சதாசிவமும் அப்போது திருச்சி தேசியக் கல்லூரி மாணவர்கள். காந்திஜி விடுத்த அறைகூவலுக்கேற்ப இவர்கள் இருவரும் கல்லூரி படிப்பை விட்டுவிட்டு காங்கிரஸ் இயக்கத்தில் பணிசெய்யத் தொடங்கினர். ஒத்துழையாமை இயக்கத்துக்காக இவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். கல்கி அவர்கள் பாரதியாரின் பாடல்களைப் பாடுவார். 1921இல் திருச்சியில் பிரதாப் நாராயண வாஜ்பாய் என்பவர் ஹிந்தி பிரச்சாரத்துக்காக மகாத்மா காந்தியால் அனுப்பப்பட்டு அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். இவரைப் பற்றிய ஓர் செய்தி. ஒரு நாள் இவர் ஹிந்தி வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு தந்தி அவர் பெயருக்கு வந்தது. அதை வாங்கிப் படித்துவிட்டுத் தன் பையில் வைத்துக்கொண்டு பாடங்களைத் தொடர்ந்து நடத்தினார். வகுப்பு முடிந்ததும் அந்தத் தந்தியில் வந்த செய்தி என்ன என்று விசாரித்ததில் வடநாட்டில் அவரது மனைவி இறந்த செய்தி அது என்று கூறினார். தன் கடமையில் சொந்த சாபாசங்கள் குறுக்கிடாமல் உறுதியோடு செயல்பட்ட அவரைப் பலரும் போற்றினர். இந்த வாஜ்பாய் திருச்சி நகரத்தில் டவுன்ஹால் மைதானத்தில் பல சொற்பொழிவுகளைச் செய்திருக்கிறார். டி.வி.சுவாமிநாத சாஸ்த்திரி, வக்கீல் ஹாலாஸ்யம் போன்றவர்கள் இவர் பேச்சை மொழிபெயர்த்திருக்கின்றனர்.

ரா.நாராயண ஐயங்கார் கதர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். க.சந்தானம் அவர்கள் கதர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். சங்கிலியாப் பிள்ளை என்பவர் கதர் கடை வைத்து வியாபாரம் தொடங்கினார். பெரிய கடைத்தெருவில் பீமா லஞ்ச் ஹோம் எதிரில் இது இருந்தது. 1926-27இல் காந்திஜி திருச்சி வந்தார். டாக்டர் ராஜன் வீட்டில் தங்கினார். அப்போது நாராயண ஐயங்கார் காந்திஜிக்குத் தேவையான சேவைகளைச் செய்துகொண்டு ராஜன் வீட்டிலேயே தங்கி இருந்தார். வாயில் காப்போனாகவும் இவர் செயல்பட்டதுண்டு.

1930இல் ராஜாஜி தொடங்கிய வேதாரண்யம் உப்பு யாத்திரையில் இவரும் ஒரு தொண்டராகக் கலந்து கொண்டு சென்றார். வழியில் கல்லணை அருகில் அரசாங்கத்தின் கெடுபிடிக்குப் பயந்து இவர்களுக்கு ஒருவரும் உதவி செய்யவோ, உணவளிக்கவோ பயந்த நிலையில் ஒருவர் நாராயண ஐயங்காரிடம் வந்து காவிரியில் ஓரிடத்தைக் காட்டிவிட்டுப் போய்விட்டார். இவர் போய் அந்த இடத்தில் மணலைத் தோண்டிப் பார்க்க அங்கு ஒரு கட்டு புடலங்காய், ஒரு தார் வாழைக்காய், அரிசி மூட்டைகள், பானையில் தயிர் வைத்து மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன. அத்தனை கெடுபிடியிலும் உதவி செய்ய உத்தமர்கள் இருந்ததை எண்ணி நாராயண ஐயங்கார் மகிழ்ச்சியடைந்தார்.

இவர் திருச்சி இரட்டைமால் தெருவில் காங்கிரஸ் அலுவலகத்தில் ஒரு தொண்டர்கள் முகாம் நடத்தினார். அதில் ராஜாஜியின் மகன் நரசிம்மன், சங்கு சுப்பிரமணியன் முதலானோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஐயங்காருக்கு 16மாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. காங்கிரஸ் கமிட்டிக்கு நீலாம்பாள் என்பவர் வாடகைக்கு விட்டிருந்தார். இவர் மீது வழக்கு வந்துவிடாமல் இருக்க வக்கீல் என்ற முறையில் நாராயண ஐயங்கார், தன் வீட்டை வாடகைக்குத்தான் விட்டேன் மற்றபடி எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கோர்ட்டில் சொல்லிவிடு என்று சொல்லியிருந்தார். ஆனால் அந்த அம்மாள் கோர்ட்டில் காங்கிரஸ் தொண்டர் முகாமுக்கு என்று தான் நான் கொடுத்தேன், வாடகைக்காக அல்ல என்று சொன்னார், அதனால் தண்டிக்கவும் பட்டார்.

வக்கீலான இவரை சேலம் சிறையில் கல்லுடைக்கச் சொன்னார்கள். அவரும் அந்தத் தொழிலை மிகச் சிறப்பாகச் செய்து வந்தார். சிறையில் இவருக்கு 'சி' வகுப்பு கொடுக்கப்பட்டது. திருச்சி வக்கீல்கள் ஒரு போராட்டத்தை நடத்தில் இவருக்கு 'பி' வகுப்பு வாங்கிக் கொடுத்தார்கள். சிறை வாழ்க்கை இவருக்கு உயிருக்கே உலை வைக்கும்படியான உடல்பாதிப்பை ஏற்படுத்தியது. வெளியே வந்தும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்படமுடியவில்லை. இவர் சிறையிலிருந்து வெளிவந்த போது நடந்த வக்கீல்கள் பாராட்டு விழாவில் இவரது தாயார் தன் கையால் நூல் நூற்று நெய்த வேட்டி துண்டுகளை இவருக்குப் பரிசாக அளித்தார்.

1931ம் வருஷம் மதுரையில் காங்கிரஸ் மாகாண மகாநாடு நடந்தது. தீரர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நாராயண ஐயங்கார்தான் செயலாளர். 1934இல் சங்கு சுப்பிரமணியம் இவரை சென்னைக்கு வந்து 'சங்கு' பத்திரிகையை நடத்த அழைத்தார். அங்கு இவர் "காங்கிரஸ்மேன்" எனும் வாரம் மும்முறை பத்திரிகையொன்றையும் வெளியிட்டார். "தன்பின் "ஜெயபாரதி" என்ற பத்திரிகையில் பணியாற்றினார். பிறகு "இந்துஸ்தான்" எனும் வார இதழில் 11 ண்டுகள் பணியாற்றினார். அதோடு 'தினமணி', 'சுதேசமித்திரன்" பத்திரிகைகளிலும் சுயேச்சையாக எழுதி வந்தார். தனது ஓய்வு நாட்களைத் திருச்சியில் கழித்தபின் தனது முதிய வயதில் காலமானார் ரா.நாராயண ஐயங்கார். வாழ்க அவரது புகழ்!

க. சந்தானம்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
61. க. சந்தானம்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

தஞ்சை மாவட்டம் தந்த அரிய தலைவர் க.சந்தானம். மன்னார்குடியில் பிறந்து, உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிகார் பல்கலைக் கழகத்தில் ஆச்சார்ய கிருபளானி, கே.எஸ்.சுப்பிரமணியம் போன்றவர்களோடு பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, சுதந்திர தாகத்தினால் 1920இல் கல்கத்தா காங்கிரஸிலும் பின்னர் 1921இல் பெஜவாடா காங்கிரஸிலும் கலந்துகொண்டு, வேலையை உதறிவிட்டு முழுநேர அரசியலுக்கு வந்து திருச்சியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சேர்ந்து பணியாற்றி, திருச்சி மாவட்டத்தில் சிறைசென்ற முதல் சத்தியாக்கிரகி எனும் புகழ்பெற்றவர் க.சந்தானம். பின்னாளில் இவர் ஜவஹர்லால் நேரு மந்திரி சபையில் அமைச்சராகவும், லெஃப்டினன்ட் கவர்னராகவும் இருந்தபின் ஆயிரம் பிறைகண்ட நிறைவாழ்க்கை வாழ்ந்தகவர் க.சந்தானம். அரசியல் சாணக்கியரான ராஜாஜிக்கு வலது கரம் போல செயல்பட்டு, அவர் ஈடுபடும் எல்லா போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்ட பெருந்தகை க.சந்தானம். வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் தலைவர் ராஜாஜி சிறைபட்டவுடன், தனக்கு அடுத்து க.சந்தானம் 'சர்வாதிகாரி'யாக இருந்து போராட்டத்தை வழிநடத்துவார் என்று ராஜாஜியில் பணிக்கப்பட்டவர் க.சந்தானம். நல்ல கல்விமான், பொருளாதார நிபுணர், இந்திய அரசியல் சட்டம் வகுப்பதில் முனைப்புடன் ஈடுபட்டவர், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று பல பெருமைகளுக்கு உரியவர் க.சந்தானம்.

ஆமதாபாத் காங்கிரஸ் தீர்மானத்தின்படி தமிழ்நாட்டிலும் பலர் தங்களது வக்கீல் தொழிலை கைவிட்டனர். பலர் கல்லூரிகளிலிருந்து வெளியேறினர். திருச்சியில் ஆர்.நாராயண ஐயங்கார், என்.ஹாலாஸ்யம் ஆகியோர் வக்கீல் தொழிலைவிட்டு வெளியேறினர். கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கல்கி ஸ்தாபகர் மணக்கால் சதாசிவம் ஆகியோர் தேசிய கல்லூரியில் படிப்பை விட்டு வெளியேறினர். இவர்கள் அனைவரும் கிராமங்கள் தோறும் சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தனர். அப்போது க.சந்தானம் இவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

1922இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகம் திருச்சி இரட்டை மால் தெருவில் இருந்தது. கமிட்டிக்கு ராஜாஜி தலைவர் செயலாளர் க.சந்தானம். இவரைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லுவார்கள், மன்னார்குடிக்காரரான இவருக்கு தங்குமிடம் காங்கிரஸ் அலுவலகம், ஸ்நானம் காவிரியில், சாப்பாடு ஹோட்டலில், வேலையோ திருச்சி மாவட்ட கிராமங்களில். இவர்களது நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கம் 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. தடையை மீறி க.சந்தானம் செயல்பட்டதற்காக கைதாகி 6 மாத சிறை தண்டனை பெற்றார். சிறையில் இவருக்கு 'சி' வகுப்புதான் கொடுக்கப்பட்டது. இப்படி இவர் திருச்சி மாவட்டத்தில் முதல் சத்தியாக்கிரகியாகி சிறை சென்றார். இவர் திருச்சி, கண்ணனூர், கடலூர் சிறைகளில் இருந்திருக்கிறார். கண்ணனூர் சிறையில் கைதிகளுக்கு நடந்த அநீதியை எதிர்த்து இவர் உண்ணா நோன்பிருந்து அவர்களுக்குக் கொடுமையிலிருந்து விடுதலையளிக்கப் பாடுபட்டார்.

அந்தக் காலத்தில் சிறைகளில் 'ஏ', 'பி', 'சி' என்ற பாகுபாடுகள் இல்லை. எல்லா கைதிகளும், கிரிமினல் குற்றவாளிகளும், அரசியல் கைதிகளும், படித்தவர்களும், படிக்காதவர்களும் ஓரிடத்தில்தான். இந்தப் பிரிவினை, ஏ,பி,சி வகுப்புப் பிரிவினை லாகூர் சதிவழக்கு நடந்த காலத்தில் அவ்வழக்கில் ஓர் குற்றவாளியான எதீந்திரதாஸ் என்பவர் 63 நாட்கள் உண்ணா நொன்பிருந்து உயிர்விட்ட பிறகுதான் அரசியல் கைதிகளை கிரிமினர் கைதிகளிலிருந்து பிரித்து தனி வகுப்பு கொடுக்கப்பட்டது. 1930 வரை எல்லா கைதிகளும் ஓரிடத்தில்தான். இப்போதைய சிறை வாசத்தை எந்த வகையிலும் அந்தக் கால சிறைவாசத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதை நாமெல்லாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நமது மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தின் விலையைப் புரிந்துகொள்ள முடியும்.

அந்தக் காலத்தில் மாஜிஸ்ட்டிரேட்டுகள் தங்கள் ஆங்கில எஜமானர்களுக்கு எப்படி விசுவாசமாக இருந்தார்கள் என்பதைப் பற்றி க.சந்தானம் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். 1941-42 காலகட்டத்தில் தஞ்சாவூரில் நடந்த சம்பவம் இது. ஒரு சப் இன்ஸ்பெக்டர் ஒரு கைதியை அழைத்துக்கொண்டு வந்து அவ்வூர் மாஜிஸ்ட்டிரேட் முன் ஆஜர் செய்கிறார். அந்தக் கைதி யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ததாகவும், அரசாங்கத்துக்கு எதிராக துவேஷம் உண்டாக்கும் வண்ணம் கூட்டங்களைக் கூட்டி பேசியதாகவும் குற்றம் சாட்டினார் சப் இன்ஸ்பெக்டர். அதற்கு அந்த மாஜிஸ்ட்டிரேட் இந்த ராஜ துவேஷ குற்றத்துக்காக அந்தக் கைதிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், சிறையில் எவ்வளவு களி படியளக்க வேண்டுமென்பதையும் தண்டனையாக விதித்தார். இந்தக் கைதி யார் என்று விசாரித்ததில் இவர் ஒரு பிறவி ஊமை என்பதும், இவரை அந்த சப் இன்ஸ்பெக்டருக்குப் பிடிக்கவில்லை என்பதால், இந்த மாஜிஸ்ட்டிரேட் வெள்ளைக்கார அரசாங்கத்தைக் குளிப்பாட்டும் விதத்தில் தண்டனை அளித்து விடுவார் என்பது தெரிந்து இப்படியொரு தந்திரம் செய்ததாகவும் தெரிய வந்ததாம். ஊமை எப்படி அரசாங்க விரோத பேச்சைப் பேசியிருக்க முடியும் என்பதைக்கூட விசாரிக்காமல் தண்டனை கொடுப்பதில் அவ்வளவு முனைப்பு அந்த மாஜிஸ்டிரேட்டுக்கு. எல்லாம் எஜமான விசுவாசம்!

1922இல் டிசம்பரில் கயாவில் நடந்த காங்கிரசுக்கு சி.ஆர்.தாஸ் தலைமை வகித்தார். இந்த மகாசபைக்கு க.சந்தானம் பிரதிநிதியாகச் சென்றார். 'மாறுதல் வேண்டுவோர் கட்சி' எனும் பெயரில் காங்கிரசுக்குள் இருந்த குழுவில் சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, வித்தல்பாய் படேல், எஸ்.சீனிவாச ஐயங்கார், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோர் இருந்தனர். இவர்களுக்கு எதிராக சட்டசபைகளை பகிஷ்கரிக்கும் கட்சியில் வல்லபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் இருந்தனர். இந்த இரு கோஷ்டிகளில் க.சந்தானம் ராஜாஜியின் பக்கமே இருந்தார்.

இராட்டையில் நூல் நூற்கும் இயக்கத்தில் க.சந்தானம் தீவிரமாக இருந்தார். காதி உற்பத்திக்கு ஜம்னாலால் பஜாஜ் எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளுக்கு சந்தானம் உறுதுணையாக இருந்தார். 1925 முதல் 1930 வரை இவர் நூற்போர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கதர் காதி சங்கம் திருப்பூரில் தலைமையகமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் சிறை தண்டனை பெற்றார். 1931இல் காந்தி இர்வின் ஒப்பந்தப்படிக்கு இவர் விடுதலையானார். 1932இல் திருப்பூரில் தடையை மீறி ஊர்வலம் சென்றமைக்காக இவர் கைதாகி 6 மாதம் தண்டனை பெற்றார். 1931இல் இவரது மனைவி காலமானார், அடுத்த ஆண்டில் தனது சகோதரரை பறிகொடுத்தார். குடும்ப சோகத்தினால் இவரது அரசியல் வாழ்க்கை சோர்வடையவில்லை.

சிறையிலிருந்து விடுதலையான பின் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழின் ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டார். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொள்வதற்காக ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். 1940இல் மன்னார்குடிக்குச் சென்று அங்கு யுத்த எதிர்ப்பு பிரச்சார ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி கைதாகி ஒரு வருடம் தண்டனை பெற்றார். அந்த தண்டனையை இவர் திருச்சி சிறையில் கழித்தார். இந்த சிறைவாசத்தின் போது பல பெரிய தலைவர்களின் நட்பும் தோழமையும் இவருக்குக் கிடைத்தது. 1975இல் இவருக்கு சதாபிஷேகம் நடந்தது. வாழ்க க.சந்தானம் புகழ்!

திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
60. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

1919இல் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன்வாலாபாக் எனும் இடத்தில் ஜெனரல் டயர் என்பவன் இரக்கமில்லாமல், ஆண், பெண் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோரை பீரங்கி வைத்துச் சுட்டுக் கொன்றது இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயரின் கறை படிந்த வரலாற்று நிகழ்ச்சி. உலகம் முழுவதும் இந்த அரக்கத்தனமான செயல் கண்டனத்துக்கு உள்ளானது. மனித இனமே வருந்தி தலைகுனிந்த போது ஜெனரல் டயர் மட்டும் பெருமிதத்தோடு சொன்னான், குண்டுகள் தீர்ந்துவிட்டன, இல்லாவிட்டால் இன்னமும் பல உயிர்களைப் பறித்திருப்பேன் என்று. என்ன ஆணவம்? என்ன திமிர்? இந்தச் செயலை இந்திய தேசபக்தர்கள் நாடெங்கணும் கூட்டங்கள் கூட்டி மக்களிடம் சொல்லி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் திரும்பச் செய்து கொண்டிருந்தனர். அப்படிப்பட்டதொரு கூட்டம் 1920இல் திருமங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசியவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும், சென்னை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்தவருமான கிருஷ்ணசாமி சர்மா என்பவராவர். இவர் இதற்கு முன்பும் வ.உ.சி. கைதானதை எதிர்த்து கரூரில் பேசிய பேச்சு தேசவிரோதம் என்று சிறையில் அடைக்கப்பட்டவர். மாபெரும் தியாகி. தமிழக மக்களால் மறக்கப்படக்கூடாதவர் ஆனால் மறக்கப்பட்டவர். இப்படிப்பட்ட தேசபக்தரின் வீராவேசப் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு தனக்கு வயது 16தான் என்பதைக்கூட மறந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தேசசேவையில் ஈடுபட்டவர் திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம். இவரது தந்தையார் பெயர் சுப்பிரமணிய ஐயர்.

காங்கிரசில் சேர்ந்ததோடு தனது பணி முடிந்துவிட்டதாக இவர் கருதவில்லை. ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார். மக்களிடம் ஆவேசமாகப் பேசி அவர்கள் உள்ளங் களிலெல்லாம் தேசபக்தி விதையைத் தூவினார். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருமங்கலம் தாலுகாவில் இவரால் தயார் செய்யப்பட்ட வீர இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இவர் தேச சேவையில் ஈடுபட்ட நாள் முதலாக இந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள், மகாநாடுகள், போராட்ட பிரச்சாரம் என்று இவர் ஈடுபடாத நிகழ்ச்சிகளே இல்லையெனலாம். இவர் வேறு எவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். தானே முன்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்து முன்னணியில் இருப்பார். ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டால் போதும், அது முடியும் வரை கண் துஞ்சார், பசி அறியார், கருமமே கண்ணாயிருப்பார். தலைவர் தீரர் சத்தியமூர்த்திக்கு இவரிடம் அன்பு அதிகம். இந்த இளம் வயதில் இப்படியொரு தேசாவேசமா? இவருக்குத் தகுந்த ஆதரவு கொடுத்தால், இவர் பல அரிய காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர் என்பதனை தலைவர் உணர்ந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநிலக் குழு உறுப்பினராக சேர்த்தார். தொடர்ந்து காங்கிரசுக்குத் தலைமை வகித்த எஸ்.சீனிவாச ஐயங்கார், முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்ஸலம், காமராஜ் ஆகியோரிடம் இவருக்கு நல்ல தொடர்பும் செல்வாக்கும் இருந்து வந்தது.

1930 இந்திய சுதந்திரப் போரில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். தமிழகத்தில் திருச்சி யிலிருந்து வேதாரண்யம் வரை தலைவர் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரக தொண்டர் படையை அணிவகுத்து அழைத்துச் சென்றார். அதே சமயம், மாகாணத்தின் தலைநகரத்தில் ஸ்ரீமதி துர்க்காபாய் தலைமையிலும், டி.பிரகாசம் தலைமையிலும் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. அதில் ஆதிகேசவலு நாயக்கர், ம.பொ.சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த சென்னை போராட்டத்துக்குப் பல தொண்டர்களைத் தயார் செய்து அனுப்பி வைத்தார் மீனாட்சிசுந்தரம். இந்தத் தொண்டர் படைக்கு இவரே தலைவராக இருந்து வழிகாட்டலானார். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.

1931இல் நாடக நடிகராக இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த தியாகி விஸ்வநாத தாஸ் திருநெல்வேலியில் நடைபெற்ற நாடகத்தில் மக்களை விடுதலைக்குத் தூண்டும் விதமாக தேசபக்திப் பாடலை பாடினார் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். விஸ்வநாத தாஸ் கைது செய்யப்பட்டார். இவருக்காக வழக்காடும்படி கோயில்பட்டி சென்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை மீனாட்சிசுந்தரம் கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் சம்மதித்து வழக்கை எடுத்துக் கொண்டார்.

1932இல் சட்ட மறுப்புப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டியதற்காக மீனாட்சிசுந்தரம் கைது செய்யப்பட்டு இரண்டரையாண்டுகள் தண்டனை பெற்றார். இந்த தண்டனையை இவர் திருச்சிச் சிறையில் கழித்தார். 1941ஆம் வருஷத்தில் தனிநபர் சத்தியாக்கிரகம் அறிவிக்கப்பட்டது. அப்போது மூண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதில் மீனாட்சிசுந்தரம் வேகம் காட்டினார். இதற்காக இவர் கைது செய்யப்பட்டு 4 மாத சிறைதண்டனை பெற்று மதுரை சிறையில் கழித்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு இவருக்குத் தாமிரப்பட்டயம் கொடுத்து கெளரவித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்பதற்காக இவர் ஓய்ந்து உட்கார்ந்து விடவில்லை. மாறாக தேச நிர்மாணப் பணிகளில் அதே ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் காட்டி உழைத்தார். திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்துக்கு புனருத்தாரணம் செய்வித்துக் கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். தேசபக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தெய்வ பக்தியும் உடையவர். தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டு விட்ட காரணத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே நாட்டுக்காக உழைக்க உறுதிபூண்டுவிட்டார். வாழ்க தியாகி புலி மீனாட்சிசுந்தரம் புகழ்!

சீர்காழி சுப்பராயன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
59. சீர்காழி சுப்பராயன்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

1942இல் நடைபெற்ற "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளில் சீர்காழி உப்பனாற்று பாலத்துக்கு வெடி வைத்த சதி வழக்கு முக்கியமானது. இந்தப் போராட்டம் முழுவதும் வெற்றி பெறவில்லையாயினும், இதில் ஈடுபட்ட சுதந்திரப் போர் வீரர்களை பிரிட்டிஷ் அரசு மிகக் கடுமையாக தண்டித்தது. இதில் குற்றவாளிகளாக அப்போது பிரபலமாக இருந்த பலர் சேர்க்கப்பட்டார்கள். அவர்களில் முதன்மையானவர் சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரர் சுப்பராயன் என்பவராவார். மற்ற பிரபலங்கள் குறிப்பாக தினமணி நாளிதழில் பணியாற்றி வந்த ஏ.என்.சிவராமன், ராமரத்தினம், டி.வி.கணேசன், கும்பகோணம் நகர காங்கிரஸ் தலைவர் பந்துலு ஐயரின் குமாரர் சேஷு ஐயர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

சுப்பராயனின் தந்தையார் குன்னம் ரகுபதி ஐயர் நூற்றுக்கணக்கான வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர். ஐந்தாறு கிராமங்கள் இவர் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்தது. இவர் தயாள குணமும், தன்னை அண்டியவர்களை அரவணைத்து ஆதரிக்கும் பண்பு பெற்றவர். தான் பெரிய நிலப்பிரபு என்பதற்காக மற்றவர்களை எளிதாக எண்ணக்கூடியவர் அல்ல. இவர் வீட்டுக் கதவு விருந்தாளிகளுக்கு உணவு படைக்க எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட குடும்பத்தில் தோன்றிய சுப்பராயன் தங்கத் தட்டில் வெள்ளி ஸ்பூன் கொண்டு சாப்பிடும் வசதி படைத்தவர். இவர் குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொண்டவர்கள் மிகப் பெரிய தொழிலதிபர்கள், தலை சிறந்த உத்தியோகஸ்தர்கள். அப்படிப்பட்ட தயாள குணமும், இரக்க குணமும் கொண்ட ரகுபதி ஐயரின் குமாரன் சுப்பராயன் தேசபக்தி காரணமாக ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று, வெளியே வர வாய்ப்பிருந்தும், பிடிவாதமாக சிறைவாசத்தை முடித்தே வெளிவருவேன் என்று நாட்டுக்காகத் தன்னை வருத்திக் கொண்ட மாபெரும் தியாகி. இன்று மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டாவது வெளியே வரத்துடிக்கும் அரசியல் வாதிகளோடு இத்தகைய தியாக உள்ளம் கொண்டு சுப்பராயனை என்னவென்று சொல்லுவது?

1942இல் பம்பாய் காங்கிரஸ் மாநாடு முடிந்த அன்றே மகாத்மா காந்தி அடிகள் முதலான அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களும் சிறை பிடிக்கப்பட்டு பாதுகாப்புக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் புரட்சித் தீ பற்றிக் கொண்டது. காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்டது. நாட்டின் பலபாகங்களிலும் வன்முறையும், தீ வைத்தல், தந்தி கம்பி அறுத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் கலவரமும், தீ வைப்பும் நடந்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாவட்ட தேசபக்தர்கள் சிலர் ஒன்றுகூடி, பிரிட்டிஷ் அரசாங்கம் போராட்டத்தின் கடுமையை உணரும் வண்ணம் சென்னை மாயவரம் இடையே ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்து அல்லது வெடி வைத்துத் தகர்க்க முடிவு செய்தனர். அதை செயல்படுத்துவதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா ஒரிசா ஆந்திரா எல்லையிலுள்ள சுரங்கத்திலிருந்து வெடிமருந்து குச்சிகளை வாங்கி வந்தார். பல மாவட்டங்களுக்கும் இந்த வெடிப் பொருட்கள் ராமரத்தினம் மூலம் அனுப்பப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கான வெடிகள் கும்பகோணம் பந்துலு ஐயரின் புதல்வரும், தினமணி உதவி ஆசிரியருமான டி.வி.கணேசன், அவரது சகோதரர் சேஷு ஐயர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு சொந்த ஊர் பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூர். இந்தப் பகுதியில் எங்கு வன்முறை நடந்தாலும் அது டி.வி.கணேசன் மீதுதான் விழும் என்பதால் இவர்கள் மாயவரம் அருகே ரயில் பாதையில் வெடி வைத்துத் தகர்க்க சீர்காழி உப்பனாறு பாலம்தான் சரியான இடம் என்று முடிவு செய்து, அந்தப் பகுதியில் இளமையும், ஆர்வமும், தேசபக்தியும் உள்ள சீர்காழியைச் சேர்ந்த சுப்பராயனைப் பார்த்துப் பேசினர். அவரும் தன் நண்பர்களுடன் இந்தக் காரியத்தை முடிப்பதாகச் சொல்லி வெடிகளை வாங்கிக் கொண்டார்.

சுப்பராயனும் அவரது நண்பர்களும் சீர்காழி ரயில் நிலையம் அருகேயுள்ள உப்பனாறு பாலத்தில் வெடி வைக்க எல்லா வேலைகளையும் செய்யலாயினர். பாலத்துக்கு அடியில் துளை போட்டு, வெடிகளை அதில் பொருத்தி, திரி தண்ணீரில் படாமல் கம்பி வைத்துக் கட்டி, தீ வைத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்து மறைந்து கொண்டனர். அப்போது அந்த வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் பார்ட்டியின் கண்களில் எரியும் திரி பட்டுவிட்டது. உடனே அவர்கள் அதை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து விட்டனர். போலீஸ் விசாரணையில் இந்தக் காரியத்தைச் செய்யக்கூடியவர் சுப்பராயனாகத்தான் இருக்க முடியும் என்று அவரைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் நண்பர்களும் கைதாயினர். பிறகு தினமணி சிவராமன், ராமரத்தினம், சேஷு ஐயர், டி.வி.கணேசன் ஆகியோர் கைதாகினர். வழக்கு நடந்தது. இந்திய பாதுகாப்புச் சட்டப்படி இவர்கள் அனைவரும் விசேஷ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். முதலில் சேஷு ஐயர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். முடிவில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் டி.வி.கணேசனும் விடுவிக்கப்பட்டனர். தினமணி ராமரத்தினத்துக்கு ஏழு ஆண்டுகளும், சீர்காழி சுப்பராயனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றும் பலருக்கு வெவ்வேறு தண்டனைகளுக் அளிக்கப்பட்டது. சுப்பராயன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

சுப்பராயன் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாதலால், இவரது தந்தை மகனை எப்படியாவது வெளியில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் சுப்பராயன் அப்படிப்பட்ட எந்த முயற்சிக்கும் இடமளிக்கவில்லை. சிறை தண்டனையை அனுபவிப்பேன் என்று உறுதியோடு இருந்தார். பின்னர் ஆந்திர கேசரி டி.பிரகாசம் சென்னை மாகாண பிரதமராக பதவி ஏற்று பொது விடுதலை செய்தபோது பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகு சுப்பராயன் விடுதலையானார். விடுதலையான பிறகு திருச்சிக்குச் சென்று அங்கு சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி, பெரும் தொழிலதிபரானார். தானொரு நிலப்பிரபு என்பதோ அல்லது பெரும் தொழிலதிபர் என்பதோ இவரது நடத்தையில் தெரிந்து கொள்ள முடியாது. மிகச் சாதாரண முரட்டுக் கதர் கட்டும் இவர், எவ்வளவு எளியவரானாலும், பழைய நண்பர்களை, உறவினர்களை, தியாகிகளை நேரில் கண்டுவிட்டால் அவர்களோடு பேசி, சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்து, தான் ஒரு பெரிய மனிதர்தான் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறார்.

எந்த வசதியும் இல்லாதவர்கள்கூட பதவிக்கு ஆலாய் பறப்பதும், பதவி கிடைத்ததும் பழைய நிலைமையை மறப்பதும், தலை கனம் கொண்டு அலைவதும் சகஜமாக உள்ள இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தியாகியா? ஆம். சீர்காழி சுப்பராயனைப் பாருங்கள். அவர்தான் ஓர் உதாரண புருஷர். வாழ்க தியாகி சுப்பராயன் புகழ்!

கு. ராஜவேலு.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
58. கு. ராஜவேலு.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்ற தமிழ் அறிஞர் மற்றும் எழுத்தாளர்களுள் கு.ராஜவேலு ஒருவர். இவர் தனது சிறைவாசத்தை புதிய நூல்கள் இலக்கியங்களைப் படைக்கப் பயன்படுத்திக் கொண்டவர். 1942இல் மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்த "வெள்ளையனே வெளியேறு!" எனும் Quit India இயக்கத்தில் தனது மாணவப் பருவத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இந்த வரலாற்றை இவர் தனது "ஆகஸ்ட் 1942" எனும் புதினத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். பதினொன்று ஆண்டுகால முழுநேர அரசியல் வாழ்க்கையில் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் பங்குபெற்று சிறைபுகுந்த மாணவப் பருவ போராட்டத்தைச் சிறிது பார்ப்போம்.

ஈரோடு நகரத்தைச் சேர்ந்த இந்த தேசபக்த இளைஞர் 1942இல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகரத்தில் இருந்த அரசர் கல்லூரியில் தமிழ் படித்து வந்தார். அப்போதுதான் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அன்றே மகாத்மாவும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர், காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது. வெளியில் பெயர் சொல்லக் கூடிய அளவில் எந்த தலைவரையும் ஆன்கில ஆட்சியாளர்கள் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்கள் கூடி தலைவர்கள் கைதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய பந்தல் தீக்கு இறையாகியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அரசர் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடைத் தெருவில் கூடினர். ஆந்திராவைச் சேர்ந்த சமஸ்கிருதம் படிக்கும் மாணவர் எஸ்.ஆர்.சோமசேகர சர்மா, பிற்காலத்தில் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் என அழைக்கப்பட்டவரும் நமது கு.ராஜவேலு உள்ளிட்ட தீவிரமான தேசபக்தர்கள் இந்தக் கூட்டத்தில் இருந்தனர். அன்றைய மாணவர்கள் குறிப்பாக திருவையாறு கல்லூரியில் இருந்த மாணவர்கள் அனைவருமே தேசிய சிந்தனை உடையவர்களாக இருந்ததோடு, அவர்களை சோமசேகர சர்மா எனும் தீவிரமான தேசபக்தரும், கு.ராஜவேலும் வழிநடத்தி வந்தனர். இவர்கள் கடைகளை அடைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது ஆட்கொண்டார் சந்நிதி எனப்படும் கடைத்தெரு பகுதியில் போலீஸ் இவர்களைக் கலைந்து போகும்படி கூறியது. அதற்குள் மாணவர்களோடு பொதுமக்களும் நூற்றுக் கணக்கில் கூடி விட்டனர். கடைத்தெருவின் கீழ்புறத்திலிருந்து மாணவர்களும், மேல்புறத்திலிருந்து பெரும் கூட்டமாக பொதுமக்களும் வந்து சேர்ந்ததனால் கடைத்தெரு கொள்ளாமல் மக்கள் கூட்டம். ஆத்திரம் கொண்ட போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியது. உடனே கூட்டத்திலிருந்து கலைந்து சென்றவர்கள் ஒருபுறம் தபால் அலுவலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, பொருட்களை நொறுக்கிவிட்டனர். மறுபுறம் மற்றொரு கூட்டம் காவிரி ஆற்றைக் கடந்து தஞ்சாவூர் சாலையில் இருந்த முன்சீப் கோர்ட் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தைச் சூறையாடியது. தஞ்சாவூரிலிருந்து மலபார் போலீசார் கலவரத்தை அடக்க வந்து சேர்ந்தனர். அப்போது முன்சீப் கோர்ட் உள்ளே இருந்த கு.ராஜவேலு காவிரியின் வெள்ளத்தில் குதித்து நீரோட்டத்தோடு நீந்திச் சென்று திருப்பழனம் எனும் ஊரில் கறை ஏறி, பிறகு அவருடன் படித்துக் கொண்டிருந்த அவ்வூர் மாணவனின் உதவியுடன் திருவையாறு வந்தார். அன்று மாலையே இவரும் மற்றும் 42 பேரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்த வழக்கில் இவரும் மற்ற 42 பேரும் 1943இல் தண்டிக்கப்பட்டனர். கு.ராஜவேலு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். இவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த கவிஞர் எஸ்.டி.சுந்தரம் (அவரும் அப்போது அந்தக் கல்லூரி மாணவர்) பதினெட்டு வயது ஆகாதவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருந்து இவர் விடுதலையான நேரத்தில் தொடுவானில் சுதந்திர வெளிச்சம் தோன்றலானதை யொட்டி, இவர் சென்னை சென்று தனது படிப்பைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றார். தேசிய உணர்வும், தியாக பின்னணியும் கொண்ட இவரை அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ் அடையாளம் கண்டு, இந்த இளைஞரின் வாழ்வு முன்னேறவேண்டும் என்று விரும்பினார். இவர் கல்வி இலாகாவில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் கல்வி இலாகாவில் சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்து, ராஜதானி கல்லூரி முதலான இடங்களில் பணியாற்றி, பற்பல நூல்களையில் எழுதினார். ஓய்வுக்குப் பிறகும் தனது எழுத்துப் பணியில் ஈடுபட்டு வயது தொண்ணூறை எட்டும் இவர் இப்போது சென்னையில் அஷோக்நகரில் வாழ்ந்து வருகிறார். இவரது திருவையாற்று அனுபவத்தைக் கேட்டால் இவர் இப்போதும் மனம் உருகிப் பேசுகிறார். இவரோடு சிறைசென்ற பல தியாகிகள் இன்னமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் தஞ்சை ஸ்ரீநிவாசபுரத்தில் தியாகி கோவிந்தராஜு, திருவிடைமருதூரில் சண்முகம், மதுரையில் இராம சதாசிவம் போன்றோர் பழைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தில்லைஸ்தானத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மாணிக்கம் பிள்ளை சில மாதங்களுக்கு முன்புதான் அமரர் ஆனார். இவர்களுக்கு உடற்பயிற்சியும் கஸரத் போன்றவற்றைக் கற்பிக்க ஓர் உடற்பயிற்சி மையத்தை குஞ்சுப் பிள்ளை என்பவர் நடத்தி வந்தார். இவர்தான் திருவையாற்று தேசபக்தர்களுக்கெல்லாம் வழிகாட்டி, குரு எல்லாம். இவர்தான் 13-8-1942இல் நடந்த புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். இவர் அமரராகிவிட்டார். இப்படிப்பட்ட தியாகிகளையெல்லாம் உருவாக்கிய திருவையாற்று மண்ணை வணங்குவோம். வாழ்க கு.ராஜவேலு! அவர் இன்னும் பல ஆண்டுகள் பயனுள்ள வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுவோம்.

மட்டப்பாறை வெங்கட்டராமையர்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
57. மட்டப்பாறை வெங்கட்டராமையர்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

ஒரு காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போதெல்லாம் 'மட்டப்பாறை வெங்கட்டராமையர்' எனும் இவரது பெயர் அடிக்கடி அடிபடும். இவர் ஒரு அஞ்சா நெஞ்சம் படைத்த போராளி. வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ராஜாஜி, கே.சந்தானம் போன்றவர்கள் சிறைப்பட்டதும் 'சர்வாதிகாரி' பொறுப்பெடுத்துக் கொண்டு இவர் போராடும்போது இவர் பட்ட புளியம் மிளாறு அடி இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைக்கும். அத்தனை கொடிய அடக்கு முறையையும்கூட இவர் தனது வைர நெஞ்சத்தால் எதிர்கொண்டு போரிட்டார் எனும்போது நாம் தலை நிமிர்ந்து பெருமைப் பட்டுக் கொள்ளலாம் அல்லவா?

மதுரை மாவட்டத்தில் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள இராமராஜபுரம் என்கிற மட்டப்பாறையில் இவர் 1886ஆம் வருஷம் ஜூலை மாதம் பிறந்தார். இவர் தனது ஆரம்ப காலப் படிப்பை கும்பகோணத்தில் தொடங்கினார். பின்னர் இவர் மதுரையில் பாரதி ஆசிரியர் வேலை பார்த்த பெருமைக்குரிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது அன்னிபெசண்ட் அம்மையார் தொடங்கிய ஹோம்ரூல் இயக்கம் வலுவடைந்து வந்தது. அந்தப் போராட்டம் தேசபக்த உள்ளம் கொண்ட இளைஞர்களைச் சுண்டி இழுத்தது. அதில் வெங்கட்டராமனும் இணைந்து கொண்டார்.

1907ஆம் ஆண்டில் சூரத் நகரத்தில் ஒரு பிரசித்தமான காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டில்தான் காங்கிரசில் இருந்த இரு கோஷ்டிகள் திலகர் தலைமையிலான தீவிர சிந்தனையுள்ள கோஷ்டிக்கும், மிதவாத கோஷ்டிக்கும் போராட்டம் நடந்து மகாநாடு தடைபட்டது. இந்த மகாநாட்டுக்காக மகாகவி பாரதியார் பத்திரிகைகள் மூலம் பல அறிவிப்புகள் செய்து தொண்டர்களை கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. தலைமையில் நூற்றுக்கணக்கானவர்களை ஒரு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றார். இந்தத் தொண்டர் படையில் முக்கியப் பங்காற்றியவர் மட்டப்பாறை அவர்கள். தமிழ்நாட்டு பிரதிநிதிகள் வ.உ.சி. பாரதி போன்றோர் பாலகங்காதர திலகரின் ஆதரவாளர்கள். மட்டப்பாறையும் யார் பக்கம் இருந்திருப்பார் என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ? சூரத் சென்றதும் இவர் திலகர் பெருமானின் அன்புக்குப் பாத்திரராகி அவருக்கு உறுதுணை புரிந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை இருந்ததால் இவர் அங்கு நல்ல சேவை செய்ய முடிந்தது. மொழிப்புலமை மட்டுமல்ல, இவருக்கு விளையாட்டுகளிலும் ஆர்வமும், திறமையும் இருந்தது. சிலம்பம், மல்யுத்தம், கோழிச்சண்டை, கடா சண்டை, ஜல்லிக்கட்டு முதலியன இவர் பங்கு கொள்ளும் வீரவிளையாட்டுகளாகும்.

1920ஆம் ஆண்டு காலகட்டத்தில் இவர் மதுரை மாவட்டத்தில் சுற்றாத இடம் இல்லை. கிராமம் கிராமமாக இவர் சென்று பிரச்சாரம் செய்தார். இவர் காலடி படாத கிராமமே அந்தக் காலத்தில் மதுரை வட்டாரத்தில் கிடையாது என்பர். இவர் தோற்றத்திலும் சிங்கம். மேடை ஏறிவிட்டால் பேச்சிலும் கர்ஜனை. இவரைக் கண்டு அந்தக் கால மதுரை கலெக்டர் ஹால் என்பவரும், உப்பு சத்தியாக்கிரகத்தின் போது தஞ்சை கலெக்டர் தார்ன் என்பவரும் அச்சமடைந்தார்களாம். இவரது செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம். அந்தக் காலத்தில் நடந்த கள்ளுக்கடை ஏலத்தில் நிலக்கோட்டை தாலுகாவில் எவரும் கள்ளுக்கடையை ஏலம் எடுக்க முன்வரவில்லையாம். இவரது இந்தச் செல்வாக்கைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அடிவருடிகளும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இவர் மீது பொய்யான வழக்கை அதாவது வழிப்பறி செய்ததாக பொய்வழக்கு தொடுத்து இவரை அலைக்கழித்தனர். கோர்ட் கோர்டாகவும், ஊர் ஊராகவும் இவரை அலைய விட்டனர். அப்படியும் இவர் அசரவில்லை. இவர் அத்தனை பொய் வழக்குகளையும் உடைத்தெரிந்து மக்களால் "மட்டப்பாறை சிங்கம்" எனப் போற்றப்பட்டார்.

1921இல் இவர் மீது 'ஜாமீன் கேஸ்' எனும் வழக்கு போட்டு, அதன் மூலம் இவரை ஓராண்டு சிறைக்கு அனுப்பினார்கள். சிறைக்கு வெளியே இருக்கும் காலங்களில் எல்லாம் இவர் ஏதாவதொரு மகாநாட்டை நடத்திக் கொண்டிருப்பார்; அல்லது மக்களைத் திரட்டி சுதந்திரப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்; அல்லது ஏதாவதொரு அரசியல் மேடையில் ஆங்கில அரசுக்கு எதிராக முழங்கிக் கொண்டிருப்பார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் கைதாகி ஒரு வருஷம் சிறைவாசம் இருந்தார். பின்னர் 1932இல் திண்டுக்கல்லில் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொண்டு ஓராண்டு சிறை வாசம். 1936இல் சென்னை மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பழனி தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தேர்தலுக்காக தீரர் சத்தியமூர்த்தி, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோருடன், பழனி, கொடைக்கானல் பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சுற்றி பிரச்சாரம் செய்தார். 1937இல் வத்தலகுண்டில் ஒரு காங்கிரஸ் மகாநாட்டை நடத்தினார். இதற்கு ராஜாஜி தலைமை ஏற்றார். போடிநாயக்கனூர் ரங்கசாமி செட்டியார் என்பவர் இவருக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். அந்தக் காலத்தில் மதுரை ஜில்லா பகுதிகளில் நீதிமன்றங்களில் நெடுங்காலமாக தீர்த்து வைக்கப்படாமல் இருந்த பல வழக்குகளை இவர் தலையிட்டு தீர்த்து வைத்திருக்கிறார். அன்பாக இவர் இரு தரப்பாரிடமும் பேசி வழக்கை முடித்து வைக்கும் சாமர்த்தியத்தை அனைவருமே பாராட்டுவார்கள்.

சிவில் வழக்குகள் மட்டுமல்ல, சில திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் இவரிடம் முறையிட்டால் அதில் தலையிட்டு அதனைக் கண்டுபிடித்துக் கொடுப்பார். ஒருமுறை சபாநாயகராக இருந்த சிவசண்முகம் பிள்ளை அவர்கள் இந்தப் பகுதியில் பிரயாணம் செய்துகொண்டிருந்த போது கொடைக்கானலில் சில பொருட்களைத் தவற விட்டு விட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட மட்டப்பாறை அவரிடம் 'நீங்கள் கவலைப் பட வேண்டாம், அவை உங்களிடம் வந்து சேரும்' என்று ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டு, இவர் முயற்சியால் ஆட்களின் துணைகொண்டு களவு போன பொருட்களைக் கண்டுபிடித்து அவரிடம் சேர்தார். இவர் அச்சம் என்ற சொல்லையே அறியாதவர். கடலூர் சிறையில் நெல்லைச் சிங்கம் எஸ்.என்.சோமையாஜுலுவுடன் இவர் இருந்திருக்கிறார். அப்போது அங்கு சிறை சூப்பிரண்டெண்டாக இருந்த இங்கிள் பீல்ட்டால் எனும் வெள்ளையன் இவரை அன்பாக "வெங்கடப்பாறை" என்றழைப்பான். இவர் அனைவரிடமும், சாதி, மத மாத்சர்யமின்றி அன்போடு பழகுவார். திறந்த உள்ளம் படைத்தவர். தெளிந்த சிந்தனையாளர்; இவர் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமானதாக இருக்கும்; செயல் வேகம் கொண்டவர், எதிரிகளைக் கண்டு அஞ்சாத வீர நெஞ்சினர். இத்தனை குணங்களும் கொண்டவர்தான் அமரர் மட்டப்பாறை வெங்கட்டராமையர். வாழ்க இவரது புகழ்!

முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
56. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

முனகல பட்டாபிராமய்யா என்ற பெயரைப் பார்த்தவுடன் இவர் ஏதோ ஒரு ஆந்திரத்து தேசபக்தர் போல இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுகிறதல்லவா? ஆம்! இவரது பூர்வீகம் ஆந்திராவிலுள்ள முனகல எனும் ஊர்தான். இவர் பிழைப்புக்காக தமிழகம் வந்து மதுரை அருகிலுள்ள சோழவந்தானில் குடியேறியவர். இவரது முன்னோர் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலுக்குப் பின்புறம் வைகையாற்றில் பொதுமக்கள் நீராடுவதற்காக ஒரு படித்துறையை அமைத்தார்கள். 'முனகல' எனும் சொல்லுக்கு முனையுள்ள கல் என்று பொருள். இப்படியொரு படித்துறையை பாறாங்கல் கொண்டு கட்டுவார்கள் என்பதாலேயே முனகல என அழைக்கப்பட்டார்கள் போலும்.

முனகல பட்டாபிராமையா ஒரு பன்மொழி வித்தகர். இவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல பயிற்சி பெற்றதோடு, வேத சாஸ்திரங்களிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றவர். இந்தியா முழுவதும் சுற்றி வந்து மக்களை நன்கு அறிந்து கொண்ட பட்டறிவும் பெற்றவர்.

1919இல் நடைபெற்ற ஹோம்ரூல் இயக்கம் இவரை முதன்முதல் நாட்டுப் பணியில் இழுத்து வந்தது. பால கங்காதர திலகர் மதுரை விஜயம் செய்த போது அவருக்கு வரவேற்பு அளிப்பதில் முன் நின்றவர். 1921 - 22 காலகட்டத்தில் நடந்த நாகபுரி கொடிப்போராட்டத்தில் கலந்துகொள்ள மதுரை பகுதியிலிருந்து ஏராளமான தொண்டர்களை அனுப்பி வைத்ததோடு தானும் சென்று கலந்துகொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். மகாத்மா காந்தியின் மதுரை விஜயத்தின் போது அவர் ஜார்ஜ் ஜோசப் பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது ஹரிஜன நிதிக்காக அலைந்து திரிந்து மக்களைத் தூண்டி ஏராளமான பொருளும், நகைகளும் நிதிக்கு அளிக்கத் தூண்டினார். இவரது இந்தப் பணிக்காக மகாத்மா இவரைப் பெரிதும் பாராட்டிப் போற்றினார்.

1926இல் இவர் சோழவந்தானில் ஒரு தொண்டர் படையை நிறுவி அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்தப் படையை கிராமம் கிராமமாக அனுப்பி அங்கெல்லாம் மக்களுக்கு நாட்டு நடப்படி எடுத்துச் சொல்லி தேசபக்திக் கனலை மூட்டினார். இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் ஆகியவற்றின் செயல் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றினார். இவரது AICC பதவியின் காரணமாக இவருக்கு வட இந்தியத் தலைவர்களின் நட்பும் கிடைத்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மகாநாடுகளுக்கு இவர் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்திருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற எல்லா போராட்டங் களுக்கும் தொண்டர்களைத் தயார்செய்து அனுப்பும் பணியையும் திறமையாக செய்து வந்தார். அப்படிப்பட்ட அமைப்புகள் பல இடங்களிலும் இருந்தன. காமய கவுண்டன்பட்டியில் இவரது தொண்டர்படை பயிற்சி மையம் இருந்தது. 1930இல் போராட்டங்கள் உச்ச கட்டம் அடைந்த காலத்தில் இவர் கள்ளுக்கடை மறியல் செய்து சிறைபட்டார். இவர் திருச்சி, அலிப்புரம், பெல்லாரி ஆகிய சிறைகளில் அடைபட்டுக் கிடந்தார்.

1932இல் காந்தி - இர்வின் ஒப்பந்தம் தோல்வியை அடுத்து ஏற்பட்ட போராட்ட களத்தில் இவர் சர்வாதிகாரி எனும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்ட Sedition குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திருச்சி சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி இவரது அஞ்சா நெஞ்சத்தை பறைசாற்றுவதாக அமைந்தது. திருச்சி சிறையில் ஒரு அரசியல் கைதியை வார்டன் நையப் புடைத்துவிட்டார். இதனைக் கண்டித்து கொதித்து எழுந்தார் பட்டாபிராமையா. சிறை தலைமை அதிகாரியிடம் இவர் வார்டனுக்கு எதிராக முறையிட்டார். அவர் அந்தப் புகாரைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. இதனைக் கண்டித்து சிறையிலிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் உண்ணாநோன்பு இருக்க இவர் தூண்டினார். சிறையில் கலவரம் மூளும் நிலை ஏற்பட, போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குத் தயாராகியது. போலீஸ் துப்பாக்கிக்குத் தனது மார்பைத் திறந்து காட்டி, ஊம்! சுடு என்று இவர் முழக்கமிட்டதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அப்போது அங்கிருந்த வடநாட்டு அரசியல் கைதிகள் கங்குலி, சாட்டர்ஜி, கோஷ்குப்தா போன்றவர்கல் தலையிட்டு சமாதானம் செய்து, நிலைமை மோசமடையாமல் காத்தனர்.

1941இல் இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவராக ஆனார். இவரது காலத்தில் மதுரை மாவட்டம் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி முன்னேறியது. இவர் ஜில்லா போர்டு தலைமைப் பதவி வகித்த காலத்தில்தான் 1942இல் காந்திஜி வெள்ளையனே வெளியேறு போராட்ட தீர்மானம் நிறைவேற்றியமைக்காக கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் கொதித்து எழுந்தபோது, இவர் மதுரையில் ஹர்த்தால் அனுசரிக்க வேண்டுகோள் விடுத்ததோடு, ஜில்லா போர்டு அலுவலகத்தையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஜில்லா போர்டு பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் ஹர்த்தாலில் பங்குகொள்ளச் செய்தார். மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஜில்லா போர்டு அலுவலக சாவியை வாங்கி கதவைத் திறக்கும்படியாயிற்று. இவர் சாவியைக் கொடுக்க மறுத்ததால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வரலாறெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா? அல்லது தெரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்களா? சொல்ல வேண்டாமா? சும்மா வந்ததா சுதந்திரம்?

'தீண்டாமை' எனும் கொடுமைக்கு சாஸ்திரங்களில் சான்றுகள் இல்லை என்று இவர் தீவிரமாக வாதிட்டார். இதனைத் தகுந்த ஆதாரங்களுடன் மகாத்மாவிடம் இவர் வாதிட்டார். இவரது அழுத்தமான சாஸ்திர ஞானத்தையும், வாதிடும் திறமையையும், கொண்ட கொள்கையில் இவருக்கு இருந்த பிடிப்பையும் கண்டு மகாத்மா காந்தி வியந்து பாராட்டினார். 1942இல் கைது செய்யப்பட்டு சிறை வாசம் முடிந்து வெளியில் வந்ததும், இவர் தேசியப் பள்ளிக்கூடம், பாரதி வாசகசாலை, கைக்குத்தல் அரிசி சாப்பிடுவோர் சங்கம் போன்றவற்றை நிறுவினார். ஈ.வே.ரா. அவர்கள் தனது பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையை எதிர்த்து அதே பத்திரிகைக்கு இவர் ஒரு கட்டுரையை அனுப்பி வெளியிடச் செய்தார். உத்தமபாளையத்திலிருந்து நாராயணசாமி செட்டியார் வெளியிட்டு வந்த "பாரதி" எனும் பத்திரிகையில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.

1946இல் இவர் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆச்சார்ய வினோபா பாவேயின் பூதான இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டார். தீண்டாமை ஒழிப்பில் முனைப்பு காட்டி உழைத்தமைக்காக இவருக்கு அரசாங்கம் விருது அளித்து கெளரவித்தது. அதற்காக இவருக்கு அளிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை, இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது யுத்த நிதிக்காகக் கொடுத்து விட்டார். சுதந்திர இந்தியாவில் தியாகிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டபோது அதனை இவர் வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசாங்கத்தின் தாமரப் பட்டயம் பெற்ற இவர் 1977இல் காலமானார். வாழ்க முனகல பட்டாபிராமையா புகழ்!
 

No comments:

Post a Comment