Sunday, May 23, 2010

M.Bakthavatsalam

WEDNESDAY, APRIL 21, 2010

எம்.பக்தவத்சலம்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
எம்.பக்தவத்சலம்.
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

தமிழ்நாட்டில் கடைசி காங்கிரஸ் அரசாங்கத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான் எம்.பக்தவத்சலம். 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் பல பெரும் தலைவர்களும் தேர்தலில் தோற்றுப் போனார்கள். காங்கிரஸ் கட்சியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த காமராஜ் அவர்கள்கூட விருதுநகர் தொகுதியில் ப.சீனிவாசன் என்னும் மாணவர் தலைவரிடம் தோற்றுப் போனார். இதெல்லாம் கடந்தகால வரலாறு. மூழ்கிப்போன காங்கிரஸ் ஆட்சியின் கப்பல் கேப்டனாக இருந்த எம்.பக்தவத்சலம் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு வந்தது. பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி உணவு விடுதிகளில் இரவு உணவு பரிமாறுவதை நிறுத்தி வைத்தது; தேர்தலுக்குச் சில ஆண்டுகள் முன்புதான் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வன்முறை இயக்கமாக நடந்து முடிந்தது; அதன் பயனாக தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்தது; இவை எல்லாம் சேர்ந்து 1967 தேர்தல் தோல்வியில் முடிந்தது. தோல்விக்கு பக்தவத்சலத்தைக் குறை கூறியவர்களும் உண்டு. இவர் ஓர் நல்ல நிர்வாகி. காந்திய சிந்தனைகளில் தெளிந்த நல்ல அறிவாளி. நேர்மையானவர், காமராஜ் தனது 'காமராஜ் திட்டத்தின்' மூலம் பதவி விலகியபோது இவரைத்தான் தனக்கு அடுத்தபடி தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக சிபாரிசு செய்தார். இவ்வளவு இருந்தும், இவரால் வெகுஜன உணர்வை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போயிற்று.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நசரத்பேட்டை எனும் ஊரில் நல்ல செல்வந்தர் குடும்பத்தில் வந்த அவரது தாய்மாமன்களான சி.என்.முத்துரங்க முதலியார், இ.என்.எவளப்ப முதலியார் ஆகியோரிடம் வளர்ந்தார். இவரது தந்தையார் இளம் வயதில் காலமாகி விட்டதால் மாமன்கள் பார்வையில் வளர்ந்தார். ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள பெருநிலக்கிழார் குடும்பத்தின் வாரிசு இவர். எனினும் இவரது பதவிக் காலத்தில் இவரை 'பத்து லட்சம் பக்தவத்சலம்' என்றும், 'அரிசி கடத்தினார்' என்றும் கொச்சையாக அரசியல் பேசி சிலர் இழிவு படுத்தினர். எனினும் 1967 தேர்தல் முடிவு தெரிந்ததும் இவரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது இவர் சொன்ன பதில், "தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவிவிட்டது" என்பதுதான். பக்தவத்சலத்தின் மனைவி ஞானசுந்தரத்தம்மாள். மகள் பிரபல சமூக சேவகி சரோஜினி வரதப்பன். மகாத்மா காந்தியடிகளின்பால் இவருக்கிருந்த ஈடுபாடு, அன்னிபெசண்டின் அரசியல், திலகரின் போர் முழக்கம், விபின் சந்திர பாலின் சென்னை கடற்கரைப் பேச்சு இவற்றால் கவரப்பட்டு அரசியலில் குதித்தார். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தொழிலை உதறிவிட்டு அரசியலில் முழுக் கவனம் செலுத்தினார். திரு வி.க. வின் தேசபக்தன் இதழ்களில் இவர் நிறைய எழுதினார். 1919இல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். 1921இல் காந்திஜி சென்னை வந்தபோது சட்டக்கல்லூரி மாணவராக இருந்த பக்தவத்சலம் இவரைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சிக்கு முன்னோடியாக இருந்த சென்னை மகாஜன சபாவின் காரியதரிசியாக இவர் 4 ஆண்டுகள் இருந்தார். மது ஓழிப்பு இயக்கத்தில் ஈடுபட்டார். 1927இல் நடைபெற்ற சென்னை காங்கிரசுக்கு இவர் செயலாளராக இருந்து பணிபுரிந்தார். அதே ஆண்டில் சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். 1929இல் நடந்த ஊர்வலத்தில் இவர் மீது போலீஸ் தடியடி நடத்தியது. ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், 1942 ஆகஸ்ட் புரட்சி அனைத்திலும் இவர் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1933-34இல் துவக்கப்பட்ட தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார். 1932இல் போலீஸ் தடியடிக்கு ஆளாகி சிறை சென்றார். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் மீண்டும் கைதாகி சிறை சென்றார். சிறையில் கைதிகளுக்கு ராஜாஜி நடத்திய கம்பராமாயணம், பகவத் கீதை உரைகளைக் கேட்டு பயன் பெற்றார். 1942 பம்பாய் காங்கிரசில் கலந்து கொண்டு கைதானார். அமராவதி சிறையில் பல காலம் வாடினார்.

இப்பொழுதெல்லாம் அரசியல் கட்சிகள் அமைச்சர்களுக்கு எதிராக போராட்டமோ, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமோ நடத்துவதற்கு போலீஸ் அனுமதி அளிப்பதில்லை. அப்படி அளித்தாலும் தலைவர் அல்லது அமைச்சர் கண்களில் படாதபடி ஏதாவதொரு மூலையில் இடம் ஒதுக்கித் தருவார்கள். 1952 தேர்தலுக்குப் பின் ராஜாஜி தலைமையில் சென்னையில் அமைச்சரவை அமைந்தது. அதில் எதிர் கட்சியைச் சார்ந்த எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர், பி.பக்தவத்சலு நாயுடு ஆகியோரை ஆளும் கட்சி சார்பாக ராஜாஜி அழைத்து அரவணைத்துக் கொண்டார். ராஜாஜி மந்திரி சபையில் எம்.பக்தவத்ஸலமும் ஒரு அமைச்சராக இருந்தார். இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரக்கோணம் நகருக்கு விஜயம் செய்து அங்குள்ள டவுன் ஹாலில் ஒரு கூட்டத்தில் பேச இருந்தார். இவர் வந்து மேடையில் அமர்ந்ததும், கூட்டத்திலிருந்து தி.க.வைச் சேர்ந்த எல்.சஞ்சீவி என்பவரும் அவரது தம்பிகள் ஏ.எல்.சி.கிருஷ்ணசாமி, எல்.பலராமன் ஆகியோரும் மற்றும் சிலரும் கருப்புத் துணியைக் கையில் வைத்துக் கொண்டு வீசினார்கள். பக்தவத்ஸலம் அது என்ன என்று விசாரித்தார். உங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்புத் துணியைக் காட்டுகிறார்கள் என்றார்கள். உடனே பக்தவத்ஸலம் போலீசிடம் அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள் என்றார். அவர்களும் வரிசையில் வந்து பக்தவத்சலத்திடம் தங்கல் கருப்புத் துணிகளைக் கொடுக்க அவர் அவற்றை வாங்கி மேஜை மேல் வைத்துக்கொண்டு, உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். முதலமைச்சரிடமும் கூறுகிறேன் என்று சொன்னார்; அவர்களும் அமைதியாகக் கலைந்து சென்றார்கள். இதுபோல இன்று யாராவது நடந்து கொள்வார்களா, நடக்கத்தான் முடியுமா என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தான் ஒரு அமைச்சர் அல்லது முதலமைச்சர் என்ற பந்தா சிறிதுகூட இவரிடம் காணமுடிவதில்லை. இவர் முதலமைச்சராக இருந்த போது இவர் எந்த ஊருக்குச் சுற்றுப்பயணம் சென்றாலும், இவருக்கு முன்பாக ஒரு போலீஸ் பைலட் காரும் அதனைத் தொடர்ந்து ஒரு அம்பாசிடர் காரின் முன் சீட்டில் அமர்ந்துகொண்டு பக்தவத்சலமும் செல்வார்கள். இவ்வளவு எளிமையை யாரிடமாவது பார்க்க முடியுமா. அன்றைய தினம் இருந்த அமைச்சர்கள் எல்லோருமே அப்படித்தான் எளிமையை மேற்கொண்டிருந்தனர்.

பக்தவத்சலத்துடைய துரதிஷ்டம் அவர் முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு வந்தது. மத்திய அரசிலிருந்த ஒரு அமைச்சர் வேறு தாறுமாறான உபதேசங்களை வழங்கி காங்கிரஸ் அமைச்சரவைக்கு சிக்கலை உண்டாக்கினார். மத்திய அரசு ஹோட்டல்களை இரவு நேரத்தில் மூடும்படி அறிவுரை வழங்கியதன் காரணமாக மக்கள் தொல்லைகளுக்கு உள்ளாகினர். போதாத குறைக்கு அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் வன்முறைப் போராட்டமாக வெடித்தது. போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு, பொதுமக்கள் பலி, போலீஸ் அதிகாரிகள் பலி, பல அரசாங்க அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள் இவையெல்லாம் தீக்கிரை என்று பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதை கையாண்ட விதம் சரியில்லை என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டதின் விளைவு பக்தவத்சலமும், காங்கிரசும் 1967 தேர்தலில் படுதோல்வி அடைந்தது இன்று வரை நிமிரவேயில்லை.

இவர் அமைச்சராக, முதலமைச்சராக பல்வேறு பதவிகளையும் வகித்துத் தன் நிர்வாகத் திறமையால் பெருமையோடு திகழ்ந்தவர். பதவி இழந்த பிறகும் பலகாலம் உயிரோடு இருந்து காலமானார். இவரது சிறப்பான நிர்வாகத் திறன், காங்கிரசில் இவருடைய அனுபவம், கல்வி அறிவு, நீண்டகால அரசியல் பயிற்சி, காமராஜ், ராஜாஜி ஆகியோரின் வழிகாட்டுதல்கள், முத்துரங்க முதலியாரின் நெருக்கம் ஆகியவை இருந்தும், இவருக்கு எதிராக நடைபெற்ற மோசமான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் இவர் தோற்றார். எனினும் அவருடைய மேதைத்தன்மையையும், அறிவுக்கூர்மையையும் எவராலும் குறைகூற முடியாமல் இருந்தது. இவர் அடைந்த தோல்வி அவருக்கல்ல, அவர் சார்ந்த காங்கிரசுக்கு அல்ல, அன்றைக்கு மாறிவந்த அரசியல் நாகரிகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமையே காரணம். இவருடைய வீழ்ச்சி பலருடைய மனத்திலும் அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தியதே தவிர மகிழ்ச்சியை அல்ல. போர்க்களத்தில் அபிமன்யுவை வீழ்த்தியதைப் போல இவரை வீழ்த்திவிட்டாலும் இவர் புகழ் வானோங்கிதான் நின்றிருந்தது. இவர் ஆட்சி காலத்தில் இவர் காட்டி வந்த உறுதி, சட்டவழியிலான ஆட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கை அதன்பிறகு காணமுடியாமலே போய்விட்டது.

இவரை மிகவும் மோசமாகத் தாக்கியவர்கள்கூட பின்னர் இவரை 'பெரியவர்' பக்தவத்சலம் என்று அழைத்தும், இவர் மறைந்த போது அனுதாபம் தெரிவித்து, இவருக்குப் புகழாரம் சூட்டியதையும் நாடறியும். தோன்றின் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று எனும் வாக்கிற்கிணங்க புகழோடு வாழ்ந்து, புகழோடு மறைந்தவர் பெரியவர் பக்தவத்சலம். வாழ்க அவரது புகழ்!

0 COMMENTS:


 

No comments:

Post a Comment