Sunday, May 23, 2010

Periyakulam Rama Sadasivam to P.S.Chinnadorai

MONDAY, MAY 17, 2010

பெரியகுளம் இராம சதாசிவம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
55. பெரியகுளம் இராம சதாசிவம்
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

இராம சதாசிவம் என்ற இந்த தியாகி மதுரை மாவட்டம் பெரியகுளத்தையடுத்த சவளப்பட்டி எனும் குக்கிராமத்தில் மிகமிக எளிய குடும்பத்தில் பிறந்தவரென்றாலும், இவரது தியாக வரலாறு தஞ்சை மாவட்டம் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் 1942 ஆகஸ்ட்டில் நடந்த "திருவையாறு கலவரம்" எனும் போராட்டத்தின் மூலமாகத்தான் தொடங்கியது.

சவளப்பட்டியில் வாழ்ந்த ராமகிருஷ்ண கவுடர், கிருஷ்ணம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் சதாசிவம். இவர் தனது ஆரம்ப காலக் கல்வியை வெங்கடாசலபுரம் எனும் கிராமத்தில் தொடங்கினார். அதன்பின் பல ஆண்டுகள் விவசாயத்தில் ஈடுபட்டு தனது சொந்த நிலபுலன்களை பராமரித்து வந்தார். அப்போது இளைஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கிய ரா.நாராயணசாமி செட்டியார் என்பவரின் தூண்டுதலின் பேரில் இவர் உசிலம்பட்டியில் அப்போது இருந்த விவசாயப் பள்ளியில் 1936 தொடங்கி 1938 வரை விவசாயக் கல்வியைப் படித்து முதன்மை மாணவராகத் தேர்ந்தார். அதனைத் தொடர்ந்து காட்டுநாயக்கன்பட்டி எனும் ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ரா.நாராயணசாமி செட்டியார் இவரது ஆற்றலை இப்படி ஆரம்பப் பள்ளியில் வீணடிக்க விரும்பாமல் இவரை மேற்கொண்டு படிக்கத் தூண்டினார். 1940இல் அவருடைய சிபாரிசோடு தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பு படிக்க சேர்ந்தார். மதுரை மாவட்டத்திலிருந்து இவரது முகாம் திருவையாற்றுக்கு மாறியது. இங்குதான் இவருக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பு அமைந்தது.

1942இல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பும், சமஸ்கிருத பட்டப் படிப்பும் படிப்பதற்காக வெளியூர்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேர்வார்கள். அப்படி வரும் மாணவர்கள் பெரும்பாலும் அங்கிருந்த கல்லூரி விடுதியில்தான் தங்கி படிப்பார்கள். அப்படி அங்கு தங்கியிருந்த மாணவர்களில் பெரும்பாலும், அன்றைய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமும், அனுதாபமும், தீவிர பற்றும் உள்ளவர்களாக விளங்கினார்கள். அப்படிப்பட்டவர்களில் ஈரோடு நகரத்திலிருந்து வந்து தமிழ் படித்துக் கொண்டிருந்த கு.ராஜவேலு, சேலம் ஆத்தூரிலிருந்து வந்திருந்த எஸ்.டி.சுந்தரம், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரும் சமஸ்கிருதக் கல்லூரி மாணவருமான சோமசேகர சர்மா ஆகியோர் முக்கியமானவர்கள்.

1942 ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் மகாத்மா காந்தி தலைமையில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேறியது. அந்தத் தீர்மானம் நிறைவேறிய அன்றிரவே மகாத்மா உட்பட எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காந்திஜி எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதைக்கூட அரசாங்கம் தெரிவிக்கவில்லை. பெயர் சொல்லக்கூடிய அளவில் இருந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு பாதுகாப்பு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். பம்பாய் காங்கிரசுக்கு உடல்நிலை காரணமாக வராமல் பாட்னாவில் ஓய்விலிருந்த பாபு ராஜேந்திர பிரசாத், கஸ்தூரிபாய் காந்தி, மகாதேவ தேசாய் உட்பட அனைவரும் சிறையில். நாடு முழுவதும் கொந்தளிப்பு. மக்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் அவரவர்க்கு தோன்றிய முறைகளில் எல்லாம் எதிர்ப்பைக் காட்டினர்.

திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்களும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரு உண்ணாவிரத போராட்டத்தைக் கல்லூரி வளாகத்திற்குள் நடத்தினர். அதனை சோமசேகர சர்மா தலைமை வகித்து நடத்தினார். அன்று இரவு உண்ணாவிரதப் பந்தல் எரிந்து சாம்பலாயிற்று. போலீஸ் விசாரணை நடந்தது. 12ஆம் தேதி திருவையாறு புஷ்ய மண்டபத் துறையில் ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் பிள்ளை என்பவரும், அப்போதைய செண்ட்ரல் ஸ்கூல் (தற்போது ஸ்ரீநிவாசராவ் மேல்நிலைப் பள்ளி) ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் பேசினர். 13ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்பு நடந்தது. காலை எட்டு மணிக்கே அரசர் கல்லூரி மாணவர்கள் தெருவுக்கு வந்து கோயிலின் தெற்கு வாயிலில் ஆட்கொண்டார் சந்நிதி அருகில் கூடினர். கடைகளை மூடும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது போலீஸ் தலையிட்டு மாணவர்களை தடிகொண்டு தாக்கினர். கூட்டம் சிதறி ஓட இதில் பொதுமக்களும் சேர்ந்து கொண்டனர். போலீஸ் மீது கல் வீசப்பட்டது. தபால் அலுவலக பெயர்ப்பலகை உடைக்கப்பட்டது, தபால் பெட்டி தகர்க்கப்பட்டது, தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. சிதறி ஓடிய கூட்டம் முன்சீப் கோர்ட், பதிவு அலுவலகம் ஆகியவற்றை சூறையாடி தீயிட்டுக் கொளுத்தியது. இந்தக் கலவரம் பிற்பகல் வரை தொடர்ந்தது. மாலை தஞ்சாவூரிலிருந்து மலபார் ரிசர்வ் படை வந்தது. நூற்றுக்கணக்கானோர் கைதாகினர். மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ராம சதாசிவம் உட்பட எஸ்.டி.சுந்தரம், கு.ராஜவேலு ஆகியோரும் கைதாகினர்.

இறுதியில் 44 பேர் மீது பல்வேறு கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அதில் ராம சதாசிவம் ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றார். இவருடன் எஸ்.டி.சுந்தரம், கு.ராஜவேலு போன்ற மாணவர்கள் தவிர, திருவையாற்றைச் சேர்ந்த பலரும், குறிப்பாக தற்பொழுது தஞ்சாவூர் ஸ்ரீநிவாசபுரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தியாகி கோவிந்தராஜு, குஞ்சுப் பிள்ளை, சுப்பிரமணியன் செட்டியார், சண்முகம், தில்லைஸ்தானம் மாணிக்கம் பிள்ளை போன்ற பலர் தண்டனை பெற்றனர்.

சிறையிலிருந்து வெளிவந்த ராம சதாசிவம் 1944இல் பெரியகுளம் நந்தனார் மாணவர் இல்லத்தில் பணியில் சேர்ந்தார். 1946இல் இவருக்குத் திருமணம் நடந்தது. சிவகாமி எனும் பெண்ணை மணந்தார். 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் வினோபாஜி அவர்களுடைய சீடனாகி, தனது தம்பியை அவருடைய ஆசிரமத்தில் சேர்த்தார். இந்த உயர்ந்த தியாகி இன்னமும் மதுரையில் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கிறார். வாழ்க இவரது புகழ்.

திண்டுக்கல் மணிபாரதி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
54. திண்டுக்கல் மணிபாரதி
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்.

திண்டுக்கல் நகரம் வரலாற்றுப் புகழ் பெற்றது. தொழில்துறையில் நல்ல வளர்ச்சியடைந்து மதுரைக்கு அடுத்ததாகக் கருதப்படும் பெரிய நகரம். பூட்டு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஊர். திண்டுக்கல் பூட்டுதான் உலகப் பிரசித்தமானது. இந்தப் பகுதியில் தலையணை போன்ற தோற்றத்தில் அமைந்த ஓர் குன்றிற்கு தலையணைப் பாறை என்று பெயர். இது நாளடைவில் மருவி 'திண்டுக்கல்' என வழங்கப்படுகிறது. இந்தப் பாறை 400 அடி அகலம் 280 அடி உயரமும் கொண்டது. உறுதியான இந்தப் பாறையைப் போலவே இங்கு உறுதியான மனம் படைத்த தேசபக்தர்கள் பலர் தோன்றினார்கள்.

திண்டுக்கல்லில் அமைந்துள்ள கோட்டை 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. 1736இல் ஆற்காடு நவாப் சந்தா சாகேப் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து மைசூர் படை இந்த ஊரைக் கைப்பற்றியது. 1755இல் ஹைதர் அலி இந்த நகரத்தை ஒரு ராணுவ முகாமாக மாற்றியமைத்தார். அதுமுதல் இந்த ஊர் வரலாற்றில் பல போர்களுக்குக் காரணமாகவும் அமைந்தது. மேலும் திண்டுக்கல்லையடுத்த மலைப் பிரதேசத்தில் விளைந்த சிறுமலைப் பழம் எனும் ஒரு அரிய வகை வாழைப்பழம் மிகவும் பிரசித்தமாக இருந்தது. பழனி ஆலயத்திற்கு பஞ்சாமிர்தம் செய்ய இது பயன்பட்டது. அது தற்போது அரிதாகிவிட்டது.

இத்தனை அரிய வரலாற்றுப் பின்னணியுள்ள திண்டுக்கல்லில் தோன்றிய பல தேசபக்தர்களில் மணிபாரதியும் ஒருவர். இவ்வூரிலிருந்து மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த மணிபாரதி இளவயதிலேயே, பள்ளிப்பருவத்திலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு, மகாத்மா காந்தி வகுத்துக் கொடுத்தப் போராட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டார். வயது ஏற ஏற இவரது போராட்டக் களம் விரிவடைந்து கொண்டே சென்றது. மாணவர் இயக்கத்திலிருந்து இவர் நகர காங்கிரஸ் கமிட்டியில் அங்கம் வகிக்கத் தொடங்கினார். சுற்று வட்டார கிராமங்களுக் கெல்லாம் சென்று அங்கு மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டினார். அதற்கேற்ப நல்ல பேச்சுத் திறன் இவருக்கு அமைந்திருந்தது நல்லதாகப் போயிற்று. மக்கள் இவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினார். வெகுகாலம் "திண்டுக்கல் மணிபாரதி" என்ற பெயர் மேடைப் பேச்ச்சில் திறமையானவர் என்று மக்களுக்குத் தெரிந்திருந்தது.

திண்டுக்கல்லை மையமாக வைத்துச் சுற்றுப்புற கிராமங்களில் சுதந்திரப் பிரச்சாரம் செய்து வந்த இவர், நாளடைவில் அப்போதைய தேசிய வாதிகளாகவும், பின்னர் பொதுவுடமை கட்சியினராகவும் இருந்த ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன் இவர்களோடும், ஆன்மீகமும் தேசியமும் இரு கண்களாக மதித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர்களுடன் இணைந்து சென்னை மாகாணம் முழுவதும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

1930ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா காந்தி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரகம், தமிழகத்தில் ராஜாஜி நடத்திய வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரக யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம் போன்ற பல போராட்டங்கள் நடந்த காலம். இந்த காலகட்டத்தில் திண்டுக்கல் மணிபாரதி சிறைப்பட்டு ஒரு வருடம் கைதியாக இருந்தார். இந்த தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த இவர் மீண்டும் 1932இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கைதாகி சிறை சென்றார்.
2
தொழிலாளர்களுக்காகப் போராடத் தொடங்கிய இவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசில் இணைந்து பாடுபட்டார். INTUC எனப்படும் தேசிய தொழிலாளர் இயக்கத்தில் அப்போது முனைப்புடன் ஈடுபட்டிருந்த ஜி.ராமானுஜம், ரங்கசாமி, எம்.எஸ்.ராமச்சந்திரன், வேலு போன்றவர்களோடு சேர்ந்துகொண்டு தொழிலாளர்கள் நலனுக்காகப் போராடலானார். 1936இல் சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக முழுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஊர் ஊராக சென்று மேடைகளில் காங்கிரசுக்கு வாக்களிக்க வெண்டினார். இவருடன் தீரர் சத்தியமூர்த்தி, கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரும் மேடைகளில் முழங்கி வந்தனர். இந்தத் தேர்தலில்தான் அப்போது ஆட்சி புரிந்த ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியமைத்தது, ராஜாஜி 'பிரதமர்' (முதல்வர்) ஆனார்.

1940இல் பஞ்சாலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். செளந்திரா மில் தொழிலாளர் சங்கத்துக்குத் தலைவராக இருந்த மணிபாரதி கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இவர் விடுதலை யடைந்த நேரம், மகாத்மா காந்தி அறிவித்த "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டம் நாடெங்கும் வெடித்துக் கிளம்பியது. தேசத் தலைவர்கள் அனைவரும் சிறைப்பட்டிருந்த அந்த நேரத்தில், போராட்டத்தைத் தலைமையேற்று நடத்த ஆளில்லாமல், பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களுமே அவரவருக்குத் தோன்றிய விதத்தில் போராட்டம், அதிலும் வன்முறைப் போராட்டம் நடத்தது தொடங்கியிருந்த நேரம். மணிபாரதி மட்டும் விட்டுவைக்கப்படுவாரா? இவரும் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு கைதியாக சிறை வைக்கப்பட்டார். இவர் வேலூர், கண்ணனூர் ஆகிய இடங்களில் தண்டனை அனுபவித்துவிட்டு வெளிவந்தார். இவருடன் சிறையில் எம்.எஸ்.முனுசாமி, ஏ.ராங்கசாமி ஆகிய தேசபக்தர்களும் இருந்தனர்.

இவர் தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தில் நெடுநாட்கள் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராக தமிழ்நாட்டின் மேடைகள் தோறும் முழங்கி வந்தார். காமராஜர் முதலான தமிழகத் தலைவர்கள் இவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். வாழ்க திண்டுக்கல் மணிபாரதி புகழ்.

தேனி என்.ஆர். தியாகராஜன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
53. தேனி என்.ஆர். தியாகராஜன்
எழுதியவர்: வெ. கோபாலன்

கர்ம வீரர் காமராஜ் அவர்கள் தமிழக அரசியலில் கோலோச்சிய காலத்தில் தென் தமிழ்நாட்டிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமை மிக்க உறுப்பினர்களில் தேனி என்.ஆர். தியாகராஜனும் ஒருவர். திராவிட இயக்கத்தினர் தேனி, கம்பம் பக்கம் கூட்டங்கள் போடுவதற்குக்கூட அச்சப்படக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தவர் தேனி என்.ஆர்.தியாகராஜன். நெஞ்சுத் துணிவும், தேசப் பற்றும், தூய கதராடையும், அச்சமற்ற பேச்சும் இவரது அடையாளங்களாகத் திகழ்ந்தன.

இவர் தேனிக்கு அருகிலுள்ள இலட்சுமிபுரம் எனும் கிராமத்தில் பிறந்தார். கிராம காங்கிரஸ் கமிட்டியிலிருந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய திரு தியாகராஜன், படிப்படியாக வளரத் தொடங்கினார். 1939இல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1931 முதல் 1942 ஆகஸ்ட் புரட்சிவரையிலான எல்லா போராட்டங்களிலும் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இவர் இல்லாத சிறைச்சாலைகளே இல்லை எனலாம். அலிப்புரம், வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி என இவர் இருந்த சிறைகளின் எண்ணிக்கை அதிகம்.

தேனி நகரத்தில் ஊர்ச்சந்தைக் கூடும் இடத்துக்கு அநியாய கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தியாகராஜன் போராடினார். அதில் இவர் கைது செய்யப்பட்டு வழக்கில் ஒன்பது மாதம் சிறை தண்டனை பெற்றார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் தலைமறைவாக இருந்து கொண்டு தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது திறமையும், ஆற்றலும் இவரது பெருமையை நாடறியும்படி செய்தது. தொடக்கம் முதலே இவர் மாநில காங்கிரஸ் கமிட்டியில் ஓர் முக்கிய இடம் பெற்றிருந்தார். அதுமட்டுமல்ல காமராஜ் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்தார்.

1949ஆம் ஆண்டு இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுவரை பிரிட்டிஷ் அரசுக்கு ஜால்ராக்களாக இருந்து கொண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு வரவேற்பும், விருந்தும் அளித்து வந்த ஜில்லா போர்டு இவர் காலத்தில் மக்கள் பணி செய்யத் தொடங்கியது. பல நல்ல திட்டங்களை இவர் கொண்டு வந்து நிறைவேற்றினார். 1957இல் நடைபெற்ற சென்னை சட்டசபைத் தேரதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1964இல் இவர் சென்னை சட்டசபை மேல்சபை உறுப்பினரானார்.

1968இல் மேல்சபை எதிர்கட்சித் தலைவராக இருந்து சிறப்பாக பணி புரிந்தார். இவர் மிகவும் சுமுகமாக அனைவரிடமும் பழகக் கூடியவர். நல்ல பண்பாளர். அதிகம் நண்பர்களைப் பெற்றவர். நாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. இவர் 1969 ஏப்ரல் மாதம் உடல்நலமில்லாமல் இருந்து இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தியாகி என்.ஆர். தியாகராஜன் புகழ்!

பழனி கே.ஆர்.செல்லம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
52. பழனி கே.ஆர்.செல்லம்
எழுதியவர்: வெ.கோபாலன்

தமிழகத்தில் மிக அதிக வருமானம் தரும் ஆலயம் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம். இன்று நேற்றல்ல காலங்காலமாய் பழனி மிகப் பிரசித்தி பெற்ற ஊர். பழனி பஞ்சாமிர்தமும், சித்தநாதன் விபூதியும் உபயோகிக்காதவர்கள் அரிது. அப்படிப்பட்ட புண்ணியத் தலத்தில் தோன்றிய ஓர் அரிய தியாகிதான் கே.ஆர்.செல்லம் ஐயர். பழனிக்கு அருகில் கலையம்புதூர் என்றொரு கிராமம். அங்கு கே.எஸ்.இராமநாத ஐயர் தம்பதியருக்கு 1908இல் மகனாகப் பிறந்தவர் கே.ஆர்.செல்லம். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு. விழா கொண்டாடுகிறார்களா காங்கிரஸ்காரர்கள்? நமக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட தொண்டர்களை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல் இப்படிப்பட்ட தியாகபுருஷர்கள் இந்த நாட்டில் தோன்ற மாட்டார்கள்.

இவர் மாணவப் பருவத்திலேயே நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார். பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே இவர் பழனி நகரத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். அப்போது காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் மணி செட்டியார் என்பவர். அவரது தலைமையின் கீழ் செல்லம் செயலாளராக இருந்து பணியாற்றினார். இளமைத் துடிப்பும், தேசாவேசமும் இவரை பம்பரமாகச் சுழன்று செயல்பட வைத்தன. ஊர் ஊராக, கிராமம் கிராமமாக இவர் சுற்றி வந்து காங்கிரஸ் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறிவந்தார். காந்திய சிந்தனைகளை மக்கள் மனங்களில் ஊட்டி வந்தார். நூல் நூற்றல், கதர் அணிதல், வெளிநாட்டுத் துணிகளை பகிஷ்கரித்தல் போன்றவற்றில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.

தேசபக்தி காரணமாக தேசசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், வயிற்றுப் பாட்டுக்காக ஒரு சொந்தத் தொழில் வேண்டாமா? பழனியிலேயே ஒரு உணவகத்தை உருவாக்கினார். இவரது உணவகம் தேசபக்தர்கள் கூடும் படைவீடாக மாறியது. இங்கு வரும் தேசபக்தர்களுக்கு உணவளித்து உபசரித்தார். இவர் ஹோட்டலில் வருவோர் மத்தியில் அந்தக் காலத்திலேயே ஜாதி பாகுபாடோ, வித்தியாசமோ எதுவும் இல்லாத சமத்துவ விடுதியாகத்தான் அது விளங்கியது. இவரைச் சுற்றி எப்போதும் காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டிருப்பர். எந்தப் போராட்டமானாலும் இவர் வழிகாட்டுதலுக்காக இளம் தொண்டர்கள் காத்திருப்பார்கள். அப்படி இவரது வழிகாட்டலில் பற்பல தொண்டர்கள் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார்கள். 1930இல் தொடங்கிய இவரது இந்தப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

பழனி நகரத்து மக்கள் இவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டார்கள். இவர் சொன்ன வழியில் போராட்டங்கள் நடைபெற்றன. இவரது எளிமை, இனிய பேச்சு, பணிவு இவை காரணமாக மக்கள் இவரை மிகவும் விரும்பிப் பின்பற்றலாயினர். 1932இல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இவர் தொண்டர்களை தயார் செய்து அனுப்பி வந்தார். அந்நியத் துணி பகிஷ்காரம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. அதில் இவரது பங்கு மகத்தானது. 1934ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பழனிக்கு விஜயம் செய்தார். அந்த சமயத்தில்தான் ஹரிஜனங்கள் பழனி ஆலயத்தில் நுழையத் தடை இருப்பதறிந்து இவரும் கோயிலுக்குச் செல்லவில்லை. பின்னர் 1937இல் ராஜாஜி தலைமையில் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயம், பழனி தண்டபாணி ஆலயம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தபின்னர்தான் காந்தி இவ்விரு கோயில்களுக்கும் வருகை புரிந்திருக்கிறார். மகாத்மா பழனி வந்தபோது ஹரிஜன நிதிக்காக இவர் பணம் திரட்டி காந்தியடிகளிடம் கொடுத்தார். காந்திஜியோடு நெருங்கி பழகி அவருக்கு
2

உபசாரங்கள் செய்து தங்க வைத்தார். ஊரில் நடைபெறும் கூட்டங்கலில் எல்லாம் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை ஹரிஜன நிதிக்குக் கொடுக்க வைத்தார்.

1935, 36 ஆகிய ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, பாபு ராஜேந்திரபிரசாத், தீரர் சத்தியமூர்த்தி, வி.வி.கிரி ஆகியோர் பழனிக்கு விஜயம் செய்த போது அவர்களையெல்லாம் தனது விருந்தினராக ஏற்றுத் தங்க வைத்து உபசரித்து அனுப்பிவைத்தவர் செல்லம் ஐயர். 1937இல் நடைபெற்ற சென்னை சட்டசபைத் தேர்தலில் மட்டப்பாரை வெங்கட்டராமையர் நின்றார். இவருக்கு ஆதரவாக செல்லம் ஐயர் ஊர் ஊராகச் சென்று வாக்குகள் சேர்த்தார். காங்கிரசின் மஞ்சள் பெட்டி வெற்றிக்காக இவர் தீரர் சத்தியமூர்த்தியுடன் சுற்றுப்பயணம் செய்து பாடுபட்டார்.

ராஜாஜியின் ஆணைப்படி மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்தது போல் இவர் பழனி தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆலயப் பிரவேசம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவர் இப்படிச் செய்ததால் இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், அவைகளை இவர் தீரத்துடன் எதிர்கொண்டார்.

1942இல் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின் போது இவரும், பி.ராமச்சந்திரன், பி.எஸ்.கே.லக்ஷ்மிபதிராஜு ஆகியோரும் கோஷமிட்டுக்கொண்டு ஊர்வலம் சென்றபோது ரிமாண்டில் 15 நாட்கள் இருந்தார். தேச சேவைக்காகச் சிறை செல்லும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவிகளை இவர் செய்து வந்தார். ராஜாஜி யாரையும் அவ்வளவு எளிதில் பாராட்டிவிட மாட்டார். அப்பேற்பட்ட ராஜாஜியாலேயே பெரிதும் பாராட்டப்பட்டவர் பழனி செல்லம் ஐயர் அவர்கள். இவரது பணி சுதந்திரம் பெற்றபின்பும் தொடர்ந்து நடந்து வந்தது. வாழ்க பழனி கே.ஆர். செல்லம் ஐயரின் புகழ்!

மதுரை ஜார்ஜ் ஜோசப்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
51. மதுரை ஜார்ஜ் ஜோசப்.
எழுதியவர்: வெ. கோபாலன்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரையின் பங்கு மகத்தானது. தமிழகத்தின் கலாச்சார தலைநகரமாக விளங்கும் இந்த மதுரை இன்றும்கூட புதிதாக தோன்றுகின்ற அரசியல் இயக்கங்களாகட்டும், ஏற்கனவே செயல்படுகின்ற இயக்கங்களின் மாநாடுகளாகட்டும் இந்த மதுரை நகரத்தில் நடந்தால் மிகவும் பிரகாசமான எதிர்காலம் அமைந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அப்படிப்பட்ட மதுரை மண்ணில்தான் எத்தனையெத்தனை அரசியல் இயக்கங்கள்; எத்தனையெத்தனை அரசியல் நிகழ்ச்சிகள். வெகுகாலம் நமது ஆலயங்களின் கதவுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடைக்கப்பட்டிருந்ததே, அப்போது அதை அனைவருக்கும் திறந்து விட்ட பெருமை மதுரையைத்தான் சேரும். ராஜாஜியின் விருப்பப்படி மதுரை தியாகி ஏ.வைத்தியநாத அய்யர் தலைமையில் ஏராளமான தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசம் செய்தது இந்த மதுரையில்தான். அந்த ஆலயப் பிரவேசத்தை எப்படியும் தடுத்துவிடுவது என்று ஒரு சாரார் தலைகீழாக நின்று முயன்றதும் இந்த மதுரையில்தான். ஆலயப் பிரவேசம் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெற தன் முழு பலத்தையும் பசும்பொன் தேவர் அவர்கள் செலுத்தியதும் இந்த மதுரையில்தான். அதே பசும்பொன் தேவர் ஓர் வழக்கில் கைது செய்யப்பட்டதும் இந்த மதுரையில்தான். அடே அப்பா! இந்த மதுரை மண் எத்தனை வரலாற்றுச் செய்திகளைத் தன் மடியில் வைத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

அத்தகைய புனிதமான நகரத்தில் காங்கிரஸ் இயக்கம் எத்தனையோ தலைவர்களையும் தொண்டர்களையும் உருவாக்கியிருக்கிறது. மதுரை காந்தி என்ற பெயர் என்.எம்.ஆர்.சுப்பராமனுக்கு. அவர் காலத்திலேயே காந்திய கொள்கையால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்திலும், காங்கிரஸ் தொண்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்காக ஆஜராகித் தன் வாதத்திறமையால் பலரது விடுதலைக்குக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் ஜோசப் ஆவார்.

ஜார்ஜ் ஜோசப் மக்களால் அதிகம் மதிக்கப்பட்டவர். மக்கள் இவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்திருந்தனர். அந்த பெயர் "ரோஜாப்பூ துரை" என்பதாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மகாத்மா இந்திய சுதந்திரப் போரை தலைமை ஏற்று நடத்துமுன்பாகவே ஜார்ஜ் ஜோசப் 1917இல் போராட்டத்தில் ஈடுபட்டவர். அந்தக் காலத்தில் அரசியல் போராட்டங்கள் வலிமையடையாமலும், தீவிரமான அரசியல் இயக்கங்கள் நேரடியாக சுதந்திரம் பெற போதுமான அளவில் நடவடிக்கைகள் எடுக்காத காலகட்டத்தில் இந்தியர்களின் பிரச்சினைகளை இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்திய தலைவர்களைக் கொண்ட குழுவொன்று இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவில் மூன்று பேர் உறுப்பினர்கள். அவர்களில் ஒருவர்தான் மதுரை ஜார்ஜ் ஜோசப். மற்ற உறுப்பினர் சேலம் பி.வி.நரசிம்மையர். இவரைப் பற்றி மகாகவி பாரதியார்கூட தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். அன்றைய சென்னை சட்டசபையில் இவர் பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார். மூன்றாவது உறுப்பினர் மாஞ்சேரி ராமையா என்பவராவார். இவர்கள் இங்கிலாந்துக்குப் பயணம் புறப்பட்டு கப்பலில் சென்றனர். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் இவர்களது வரவை விரும்பவில்லையாதலால் தடைசெய்தது. ஜிப்ரால்டர் வரை இவர்கள் போன கப்பல் போய்ச்சேர்ந்தபோதும், இங்கிலாந்துக்குச் செல்ல முடியாமல் இவர்கள் இந்தியா திரும்ப நேர்ந்தது.

தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இவர் மிகவும் அக்கறை காட்டினார். சிதறிக்கிடந்த தொழிலார்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்காக தொழிற்சங்கம் ஏற்படுத்தினார். இது 1918ஆம் ஆண்டில் நடந்தது. 1919ஆம் வருஷத்தில் இராமநாதபுரத்தில் நடந்த மாநாடுக்கு வரவேற்புக் கமிட்டித் தலைவராக இருந்து ஜார்ஜ் ஜோசப் செயல்பட்டார். இவரது மனைவியும் இவரது நடவடிக்கைகள் அனைத்திலும் ஒத்துழைப்புக் கொடுத்ததோடு தாமும் பல போராட்டங்கலிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கணவருக்கு வலது கரமாகச் செயல்பட்டார்.

இவர் பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்த பிரபலமான வழக்கறிஞர். பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இவர் மட்டும் தன் தொழிலில் கவனம் செலுத்தி சம்பாதிப்பது என்று இருந்திருபாரானால் பெரிய கோடீஸ்வரராக ஆகியிருக்கமுடியும். என்றாலும்கூட நாட்டுப் பற்று, ஏழை எளியவர்களின்பால் உள்ள அன்பு, தொழிலாளர் பிரச்சினைகளில் இவருக்கிருந்த ஈடுபாடு இவற்றின் காரணமாக இவர் தன் தொழிலைக் காட்டிலும், நாட்டுச் சேவையையே பெரிதும் மதித்துப் போற்றினார். இந்த காலகட்டத்தில்தான் மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மதுரை ஜார்ஜ் ஜோசப்பை பெரிதும் கவர்ந்தது. அதில் முழுவதுமாக ஈடுபடலானார். ஒத்துழையாமை இயகத்தில் ஈடுபடுவதற்காக, பெரும் வருவாய் ஈட்டித்தந்துகொண்டிருந்த தனது வக்கீல் தொழிலை உதறித் தள்ளினார்.

ஆங்கில பாணியிலான தனது உடை பழக்கத்தை மாற்றிக்கொண்டு தூய முரட்டுக் கதராடை அணையலானார். மகாத்மா அறிவித்த எல்லா போராட்டங்களிலும் ஜார்ஜ் ஜோசப்தான் முன்னணியில் இருந்தார். ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு அலகாபாத் நகரத்திலிருந்து "இண்டீபெண்டெண்ட்" எனும் பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகைக்கு ஜார்ஜ் ஜோசப்தான் அதிபர். அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரைகளுக்காக இவர் அலகாபாத்தில் கைதுசெய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றார். இவரது சிறை தண்டனை நைனிடால் எனும் இடத்தில் கழிந்தது. சிறையில் இவருடன் இருந்த முக்கியமான தலைவர்கலில் ஜவஹர்லால் நேருவும் ஒருவர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு, அப்போது மகாத்மா காந்தி நடத்தி வந்த "யங் இந்தியா" எனும் பத்திரிகைக்கு இவர் ஆசிரியரானார். அந்தப் பத்திரிகை வாயிலாக இவர் எழுதிய கட்டுரைகளின் மூலம் இவர் பல தேசபக்தர்களை உருவாக்கினார். சுதந்திரக் கிளர்ச்சி படித்த மக்கள் உள்ளங்களில் எழ இவரது எழுத்துக்கள் காரணமாயிருந்தன. உலகத் தலைவர்கள் பலருடன் இவர் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவர்களில் ராம்சே மக்டனால்டு, அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆகியோரும் அடங்குவர்.

1937ஆம் வருடம் காங்கிரஸ் கட்சி சட்டசபைக்கு போட்டியிட்டு பெரும்பாலான இடங்களை வென்று ஆட்சி அமைத்தது நமக்கெல்லாம் தெரியும். அந்த சட்டசபையில் ஜார்ஜ் ஜோசப் அங்கம் வகித்தார். ஓராண்டு காலம் அவர் சட்டசபை உறுப்பினராக இருந்த சமயம் 1938இல் இவர் இம்மண்ணுலக வாழ்வை நீத்து அமரர் ஆனார். வாழ்க ஜார்ஜ் ஜோசப் அவர்க ளின் புகழ்!

மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
50. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

மதுரை நகரமும், அதனைச் சுற்றியுள்ள பல ஊர்களும் நாடு போற்றும் நல்ல பல தியாகிகளைக் கொடுத்திருக்கிறது. தென் மாவட்டங் களில்தான் எத்தனை எத்தனை சுதந்திரப் போர் நிகழ்ச்சிகள்? பெயர் தெரிந்த, பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுதந்திரப் போர் வீரர்கள், அவர்கள் அத்தனை பேரையும் நினைவுகூர முடியாவிட்டாலும், ஒரு சிலரைப் பற்றிய விவரங்களையாவது நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் அல்லவா? அந்த வகையில் மதுரை ஸ்ரீநிவாஸ ஐயங்கார் பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

1919ஆம் ஆண்டு தொடங்கி ஒரு சில ஆண்டுகள் மதுரை வீதிகளில் ஓர் புதுமை தொடங்கி நடந்து வரலாயிற்று. விடியற்காலை நேரம். கிழக்கே வெள்ளி எழும் பொழுது; அப்போது மகாகவி பாரதியாரின் "பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்" எனும் பூபாள ராகப் பாடல் இனிமையாகப் பாடப்பெறும் ஒலி கேட்கும். இந்தப் பாடல் ஒலி கேட்ட மாத்திரத்தில் ஆங்காங்கே பல வீடுகளிலிருந்து சிறுவர்கள் எழுந்து வந்து அவசர அவசரமாக, அந்த பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிப் பாடலைப் பாடிக்கொண்டு, கையில் ஒரு மூவண்ணக் கொடியை ஏந்திக்கொண்டு, வெள்ளை அங்கியும், காவி தலைப்பாகையுமாக வந்துகொண்டிருக்கும் அந்த மனிதரோடு சேர்ந்து கொள்வார்கள். நேரமாக ஆக அந்த பாரத மாதா பஜனை கோஷ்டி பெரிதாக ஆகிவிடும். இந்த பஜனை பல தெருக்களைச் சுற்றிவிட்டு இறுதியில் அந்த மனிதரின் வீட்டுக்குப் போய்ச்சேரும். அங்கு அந்த சிறுவர்களை உட்கார வைத்து நாட்டு நடப்பையும், ஆங்கிலேயர்களை நம் நாட்டை விட்டுத் துரத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசுவார். அந்த பேச்சு அந்த இளம் சிறார்களின் அடிமனதில் போய் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. இதனைக் கண்டவர்கள் பலர் இவர் ஒரு 'சுயராஜ்யப் பைத்தியம்', இவர் சுயராஜ்யம் வாங்கப் போகிறாராம். அதற்கு இந்த குழந்தைகளின் பட்டாளத்தைத் தயார் செய்கிறார் என்று கேலி பேசுவார்கள்.

மகாகவி பாரதியார் பாடல்கள் அனைத்தையும் இவர் மதுரை தெருக்களில் பாடிப் பிரபலப் படுத்தினார். இவற்றில் பல பாடல்கள் வெளியிடப்பட்டிருக்காது; இருந்த போதிலும் அவை ஸ்ரீநிவாஸவரதன் பாடிப் பாடி பிரபலப் படுத்தி விடுவார். இவரைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் உடனடியாக பாரதியாரும் அவரது பாடல்களும்தான் நினைவுக்கு வரும், அந்த அளவுக்கு இவர் 'பாரதி பக்தன்'; ஏன்? இவரை பாரதிப் பித்தன் என்றே சொல்லலாம்.

1917ஆம் வருஷம், இவர் அன்னிபெசண்ட் நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தில் பங்கு கொண்டார். சுதந்திரப் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு இவர் பலமுறை சிறை சென்றார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இவர் பாட்டுக்குத் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். இவரை எல்லோரும் 'நிஷ்காம்யகர்மன்' என்றும் 'கர்மயோகி' என்றும் அழைக்கலாயினர். இவர் மிகமிக
2

எளிமையானர். இவர் பிறந்தது 1896ஆம் வருஷம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று. வாழ்க்கையில் எவரிடமும் வேற்றுமை பாராட்டாதவர். அனைவரும் இவருக்குச் சமமே! தேசியம்தான் இவருக்கு மதம். தேசியம்தான் வாழ்க்கை. பிறருக்கு உதவுவதென்பது இவரது இரத்தத்தில் ஊறிய பண்பு. தலைசிறந்த தேசியவாதிகளாகத் திகழ்ந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவம், வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதி ஆகியோரிடம் நட்பு கொண்டு பழகியவர். 1919இல் இவர் பொதுச்சேவையில் ஈடுபட்ட நாள்முதல் காங்கிரஸ் இயக்கத்தின் கட்டளைகள் அனைத்திலும் பங்கேற்றவர். தன் கொள்கைகளைச் சிறிதுகூட விட்டுக்கொடுக்காதவர். எதிர் கட்சிக்காரர்களானாலும், அவர்களுக்கு உரிய மரியாதைக் கொடுத்து வந்தவர்.

இவர் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துத் தேறியவர். நல்ல எழுத்தாளர்; சொற்பொழிவாளர். நல்ல குரல் வளம் இருந்ததனால் நன்கு பாடக்கூடியவர். பாரதியார் பாடல்களை இனிய குரலில் பாடி பிரபலப்படுத்தியவர். இவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் அதனை பொறுப்போடும், திறமையோடும் செய்யும் ஆற்றல் படைத்தவர். கலைத் துறையிலும் இவர் தன் திறமையைக் காட்டத் தவறவில்லை. நாடகங்களில் நடித்தார்; திரைப்படங்களும் இவரை ஏற்றுக் கொண்டன. ஆங்காங்கே இவர் பல வாசகசாலைகளையும், சங்கங்களையும் அமைத்தார். இவருக்குத்தான் மகாகவி பாரதி கடையத்தில் இருந்தபோது தன் நூல்களை பிரசுரம் செய்வது பற்றி மிக விரிவாக கடிதம் எழுதினார். தீப்பெட்டிகளைப் போல் தன் நூல்கள் அனைவர் கைகளிலும் அரையணா, காலணா விலைக்குப் போய்ச்சேர வேண்டுமென்று பாரதி விரும்பி எழுதியது இவருக்குத்தான்.

1936இல் தனது நாற்பதாவது வயதில் தன் மூத்த தாரத்தை இழந்தார். 1943இல் தன் ஒரே மகனையும் இழந்தார். இவரது முதல் மனைவி ஒரு தேசபக்தை. பத்மாஸினி அம்மையார் என்று பெயர். அவரைப் பற்றி நாம் முன்பே ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறோம். மறுபடியும் அதே பத்மாஸினி எனும் பெயரில் 1946இல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு மகனும் பிறந்தனர். இந்த பத்மாஸினியும் இவருக்கு ஏற்றபடி தேசபக்தராயும், நல்ல இசை ஞானம் உள்ளவராகவும் இருந்தார். இவர் தனது 67ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டு 1962 பிப்ரவரி 4ஆம் தேதி சோழவந்தானில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க தேசபக்தர் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் புகழ்!

Compiled by: V.Gopalan

தியாகி பி.எஸ். சின்னதுரை

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
49. தியாகி பி.எஸ். சின்னதுரை
தொகுப்பு: வெ.கோபாலன்

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு சட்டசபையில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக சட்டசபை உறுப்பினராக இருந்து விவாதங்களில் சிறப்பாகக் கலந்துகொண்டு பணியாற்றியவர் பி.எஸ்.சின்னதுரை. பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடும் வயது இல்லாத நிலையில் பெரிய தலைவர்களுக்கிடையே செய்திகளை ரகசியமாகப் பரிமாரிக்கொள்ள ஒவர் தூதனாகப் பயன்பட்டு வந்தார். விளம்பரத் தட்டிகளை எழுதி ஊரில் பல பகுதிகளிலும் கொண்டுபோய் வைப்பார். சுவர்களில் கூட்ட விளம்பரங்களை எழுதுவதோடு, அறிவிப்பு செய்து மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளையும் செய்து வந்தார். அப்படி இவர் பணியாற்றும் காலங்களில் பலமுறை போலீசாரிடம் மாட்டிக்கொண்டு புளியம் மிளாரினால் அடிவாங்கி கால் வீங்கிக் கிடந்த நாட்களும் அதிகம்.

இவர் பல்லடத்தில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சுப்பராய செட்டியார். இவர் படிக்கும் காலத்தில் இவருக்கு அமைந்த ஆசிரியர்களில் பலர் தேசபக்தர்கள். அவர்கள் ஊட்டிய தேசபக்தி இவர் ரத்தத்தில் கலந்துவிட்டது. இவர் தன் வயதுக்கும் மீறிய பணிகளில், தேச சேவையில் ஈடுபட்டு பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.

ஒரு ஆலையில் தொழிலாளியாக சேர்ந்து வேலை செய்துகொண்டிருந்த போதே தேச சேவையை இவர் உயிர் நாடியாகக் கருதி வந்தார். மால நேரங்களில் எங்கெங்கு பொதுக்கூட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று பெஞ்சுகளைத் தூக்கிப் போடுவது முதல் மேடையை தயார் செய்வது வரை பல வேலைகளைத் தானே முன்வந்து செய்வார். நாளடைவில் பெரிய தலைவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு இவரும் மேடைப் பேச்சாளர் ஆனார். பலரிடமிருந்து தெரிந்துகொண்ட செய்திகள் இவரது பேச்சில் வெளிவர அவை மக்கள் மனதில் போய் தைக்கத் தொடங்கியது. இவர் பேச்சில் வீரம் வெளிப்படும், செய்திகளில் உணர்ச்சி விளையாடும், கோழைகளையும் நிமிர்ந்து நிற்கச் செய்யும் அதிரடிப் பேச்சாக இவரது பேச்சுக்கள் அமையும்.

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதும், இவர் தீவிரமாக யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். ஊர் ஊராகச் சென்று மக்களிடம் இந்தப் போர் நம்மை கலந்தாலோசிக்காமல் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்காக ஈடுபடும் போர். இதில் நம் மக்களும், செல்வமும் வீணடிக்கப்படுவது நியாயமில்லை. நாம் எந்த விதத்திலும் இந்தப் போரில் அவர்களுக்கு உதவக்கூடாது. இது ஏகாதிபத்திய போர். நம்மை அடக்கி ஆள்வோரின் போர், எனவே இது நமக்கு எந்த வகையிலும் தொடர்புடையதில்லை என்று பேசினார். இத்தகைய பேச்சு இவரை சிறைச்சாலையில் கொண்டு போய் சேர்த்தது. தொழிலாளர் சின்னதுரை, சிறைக்கைதியானார்.

1942இல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கியது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் தலைவர்கள் இல்லாமலேயே பொதுமக்களாலும், தொண்டர்களாலும் நடத்தப்பட்டது. அதில் சின்னதுரை ஈடுபட்டார். அப்போதைய கோவை மாவட்ட தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமி அவர்கள் தலைமையில் போராட்டம் வலுத்தது. சூலூர் விமான தளம் தகர்க்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. ரயில்கள் கவிழ்க்கப்பட்டன. பல இரகசிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் வன்முறை விளையாடியது.

பி.எஸ்.சின்னதுரை கைது செய்யப்பட்டு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். சித்திரவதைக்கு ஆளானார். எதற்கும் மனம் கலங்காமல் நாட்டு விடுதலை ஒன்றையே சதாகாலம் எண்ணிக் கொண்டிருந்தார் அவர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொழிலாளர்களின் தலைவர் ஆனார். பல தொழிற்சங்கங்களுக்கு இவர் தலைவராக இருந்து அவர்கள் நலன் கருதி அரிய தொண்டாற்றினார். சென்னை சட்டசபையில் உறுப்பினராக இருந்து பல சேவைகளை ஆற்றியிருக்கிறார். இவரது எளிமை, அடக்கம், தெளிந்த சிந்தனை, கனிவான பேச்சு இவைகள் இவரது எதிரிகளாலும் போற்றி பாராட்டப்பட்டன. வாழ்க தியாகி பி.எஸ்.சின்னதுரை புகழ்!
 

No comments:

Post a Comment