Sunday, May 23, 2010

Sengaliappan to Palani Lakshmipathi Raju

MONDAY, MAY 17, 2010

தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
48. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்
தொகுப்பு: வெ.கோபாலன்

பல்லடம் அருகே மல்லகவுண்டன்பாளையம் எனும் சிற்றூரில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் ராம கவுண்டர் பழனியம்மாள் தம்பதியருக்கு 1926ஆம் ஆண்டில் பிறந்தவர் செங்காளியப்பன். கோவையில் ஒரு பஞ்சாலையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினார். காலப் போக்கில் மகாத்மா காந்தியடிகளின் வழிகளைப் பின்பற்றி தேச சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1942 ஆகஸ்ட்டில் இந்தியா முழுவதும் பற்றி எரிந்த "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்ட போது இவருக்கு வயது 16. சூலூர் விமான தளம் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 1943 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, இவர் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அலிப்பூர் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் இவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு உயிருக்குப் போராடினார். கிட்டத்தட்ட உயிர் பிரிந்து விட்டது என்று சொல்லும் அளவில் இவர் எலும்பும் தோலுமாக அலிப்பூர் சிறையில் வயிற்றுக் கடுப்பு நோய் பிரிவில் துணியால் மூடப்பட்டு கிடத்தப்பட்டிருந்தார். அந்தச் சிறையில் அடைபட்டிருந்த எல்லா கைதிகளும், தங்கள் உணவை மறந்து, இந்த ஒரு உயிருக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டதின் விளைவு அன்றிரவு வேகு நேரத்துக்குப் பின் அவர் அபாய கட்டத்தைத் தாண்டினார்.

சிறையிலிருந்து வெளியே வந்த செங்காளியப்பன் தொடர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபடத் தொடங்கினார். தொழிலாளர் நலனுக்காக அவர்கள் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக போராடும் பணியோடு, நாட்டின் விடுதலையையும் அவர் மற்றொரு கண்ணாக எண்ணி பாடுபட்டார். வெள்ளை வெளேர் என்ற கதராடை, அரைக்கை சட்டை, நெற்றியில் வெள்ளை திருநீறு, சிரித்த முகம், அமைதியான பண்பு இவற்றோடு இவர் வலம் வந்து தொழிலாளர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார். இவரை அனைவருமே "தொழிலாளர் தோழர்" என்றே அழைத்தனர்.

தியாகசீலர்களின் உழைப்பாலும், அவர்களது வியர்வையாலும், தியாகத்தாலும், ரத்தத்தாலும் 1947 ஆகஸ்ட் 15இல் நாடு சுதந்திரம் பெற்றது. என்றாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர இவரது பணி தொடர்ந்து நடந்தது. 1962இல் நடந்த பொதுத் தேர்தலில் இவர் பல்லடம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கோவை பகுதி தொழிலாளர்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்த என்.ஜி.ராமசாமி அவர்களின் ஆன்மா இவரை ஆசி வழங்கி வாழ்த்தியிருக்கும்.

இவருடைய பெரு முயற்சியால் தியாகி என்.ஜி.ராமசாமிக்கு சிங்காநல்லூரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. இவரது சட்டசபைப் பணிகளின்போது தொழிலாளர்கள் நலத்துக்காக இவர் பங்கேற்ற விவாதங்களும், இவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களும் ஏராளம். வாழ்க தொழிலாளர் தோழர் செங்காளியப்பன் புகழ்!

கோவை தியாகி கே.வி.இராமசாமி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
47. கோவை தியாகி கே.வி.இராமசாமி
தொகுப்பு: வெ.கோபாலன்.

இந்திய சுதந்திரப் போரில், சுதேசி இயக்கத்தைத் தொடங்கி வைத்து அன்னிய துணிகளை பகிஷ்கரிக்கவும், தூய கதராடைகளையே அணிய வேண்டுமென்று மகாத்மா காந்தியடிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தானும் தன் குடும்பத்தார் அனைவரும் கதராடை அணியவும், காந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த மதுவிலக்கு, கதராடை அணிதல் போன்றவற்றில் உறுதியாக இருந்தவருமான தியாகி கே.வி.இராமசாமி அவர்களைப் பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

கோவை மாவட்டத்தில் கோவைக்குக் கிழக்கே விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கும் கண்ணம்பாளையம் இவரது ஊர். இவரது தகப்பனார் வெங்கடராய கவுண்டர். இவர் மகாத்மாவின் வழிகளைப் பின்பற்றி நடந்து தனது மகனும் மற்றவர்களும் காந்திய நெறியில் நடக்கக் காரணமாக இருந்தவர். இவர் ஒரு விவசாயி. உணவு தானியங்களை உற்பத்தி செய்வதோடு தனது கடமை தீர்ந்ததாக இவர் நினைக்கவில்லை. மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்க்கும் அரிய தர்ம காரியங்களையும் மேற்கொண்டிருந்தார்.

வெங்கடராய கவுண்டரின் மூத்தமகன் கே.வி.இராமசாமி. இவர் வெள்ளை கதராடை, தலையில் காந்தி குல்லாய் இவற்றோடு கிராமங்கள் தோறும் தனது சைக்கிளில் சென்று காந்திஜியின் போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியும், குடியின் கேடுகளை விளக்கிப் பேசியும், நாடு விடுதலையடைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதோடு, ஒரு பள்ளிக்கூடத்தையும் தொடங்கி அதன் மூலம் சுதந்திர தாகத்தை வளர்த்தார். இவருக்கு உறுதுணையாக இவரது தம்பி கே.வி.தாண்டவசாமி கவுண்டரும் ஒத்துழைத்து வந்தார்.

1930ஆம் வருஷத்தில் இவரது குடும்பம் முழுவதுமே மகாத்மா காந்தியடிகளின் போராட்ட திட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டு, மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். இதில் தந்தை வெங்கடராய கவுண்டர், மகன் கே.வி.ராமசாமி, தாண்டவசாமி, ஆகியோரோடு விசுவாமித்திரன், செல்லப்ப கவுண்டர், படைக்கலம் வீடு சுப்பண்ண கவுண்டர், தொட்டிக்கட்டு வீடு கந்தப்ப கவுண்டர் ஆகியோரும் பங்கேற்றனர்.

1937இல் சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் நிறப் பெட்டிதான் அடையாளம். இப்போது போல அப்போது சின்னங்கள் வழங்கப்படவில்லை. அந்தத் தேர்தலில் இவரது குடும்பம் முழுவதும் கிராமம் கிராமமாக நடையாய் நடந்து, மூவண்ணக் கொடியேந்தி காங்கிரஸ் பிரசாரம் செய்தனர். இவர்கள் உழைப்பு வீண்போகவில்லை. காங்கிரசின் மஞ்சள் பெட்டி வெற்றி வாகை சூடியது.

1938இல் திரிபுராவில் நடந்த காங்கிரசுக்கு இவர் தன் நண்பர் இம்மானுவேலுடன் சைக்கிளிலேயே புறப்பட்டார். அந்த காங்கிரசின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1939இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. போருக்கு எதிராக காங்கிரசார் பிரச்சாரம் செய்தனர். மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமா செய்தன. சென்னை மாகாண ராஜாஜி தலைமையிலான அரசும் ராஜிநாமா செய்தது. அரசை எதிர்த்து நடந்த தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு கே.வி.ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலூரில் நடந்த மறியலில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் பம்பாய் காங்கிரசில் "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம் நிறைவேறியது. உடனே தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் புரட்சி வெடித்தது. கோவையில் தேசபக்தர்கள் ஒன்றுகூடி திட்டம் வகுத்தனர். கோவை பீளமேடு ராதாகிருஷ்ணா மில்லைத் தகர்த்து மத்திய சிறையில் இருந்த தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமியையும் மற்றவர்களையும் விடுதலை செய்வது என்று தீர்மானித்தனர். பைக்காரா மின் நிலையத்தை அழிப்பது என்றும் தீர்மானித்தனர். சூலூர் விமான நிலையம் தாக்கி தீவைக்கப்பட்டது. சிலர் பிடிபட்டனர். கே.வி.ராமசாமியின் தகப்பனார் வெங்கட்டராய கவுண்டர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். 1942 ஆகஸ்ட் 26ஆம் தேதி தலைமறைவான கே.வி.ராமசாமி நான்கு ஆண்டு காலம் தன் தலை மறைவு வாழ்க்கையில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார். இவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.500 பரிசு தருவதாக அரசாங்கம் அறிவிப்பு செய்திருந்தது. என்ன ஆச்சரியம்! இந்தப் பணியில் ஈடுபட எவரும் முன்வரவில்லை. துரோகிகளாக மாற எவரும் தயாராக இல்லை.

1946இல் இடைக்கால அரசு அமைந்த பிறகு இவர்கள் மீதிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. கே.வி.ராமசாமியும் சுதந்திரமாக வெளியே வந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் தான் திருமணம் செய்து கொள்வது என்று விரதம் இருந்த கே.வி.ஆர். அங்ஙனமே சுதந்திர இந்தியாவில் திருமணம் செய்து கொண்டார். இந்த வீரத் திலகம், தியாகி கே.வி.ராமசாமி 1965ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க தியாகி கே.வி.ராமசாமி புகழ்!

வேதாரண்யம் தியாகி வைரப்பன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
46. வேதாரண்யம் தியாகி வைரப்பன்.
தொகுப்பு: வெ. கோபாலன்.

1930 ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி தமிழ் வருஷப் பிறப்பு நாளன்று திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து ராஜாஜி தலைமையில் சுமார் நூறு தொண்டர்கள் கிளம்பி பதினைந்து நாட்கள் நடைப் பயணம் செய்து வேதாரண்யம் சென்றடைந்து அங்கே அகஸ்தியம்பள்ளி எனும் இடத்தில் உப்பு எடுத்து, மகாத்மா காந்தியடிகள் தண்டியில் செய்த உப்பு சத்தியாக்கிரகத்தை இங்கே தமிழ்நாட்டில் அரங்கேற்றிய நிகழ்ச்சி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் ராஜாஜி, சந்தானம், சர்தார் வேதரத்தினம் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் போலீஸ் அடக்குமுறைக்கு ஆளாகி புளியம் மிளாறினால் அடிபட்டு, உதைபட்டு சிறை சென்று செய்த தியாகம் வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி இவர்கள் ஒருபக்கம் உப்பு சத்தியாக்கிரகப் போர் நடத்தினார்கள் என்றால், சாதாரண பொதுமக்கள் நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாயினும், தங்கள் சக்திக்கு உட்பட்டு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அவர்களது அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே சில அரிய காரியங்களையும் செய்திருக்கிறார்கள். அப்படிப் பட்ட நிகழ்ச்சிகளில் வேதாரண்யத்தில் நாவிதராக இருந்த ஓர் இளைஞர் செய்த அரிய காரியமும், அதன் விளைவாக அவர் சிறை சென்று தியாகியான விதமும் சற்று வித்தியாசமானது, ஏன்? வேடிக்கையானதும் கூட. அந்த நிகழ்ச்சியை இப்போது பார்ப்போம்.

வேதாரண்யம் புகழ்மிக்க புண்ணிய ஸ்தலம். இங்குள்ள ஆலயத்தில் அடைபட்டுக் கிடந்த கதவை பார்வதி தேவியாரின் தாய்ப்பால் அருந்திய திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பதிகம் பாடி திறந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஒருசேர இத்தலத்துக்கு விஜயம் செய்து பாடியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல தாயுமானவ சுவாமிகளின் எட்டாவது வாரிசாக வந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஏற்பாடு செய்து அவ்வூரில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றது. வேதரத்தினம் பிள்ளையின் குடும்பத்தாருக்கும், ஊரில் பலருக்கும் முடிவெட்டும் நாவிதராக வைரப்பன் என்றொரு இளைஞர் இருந்தார். இவருக்கு பிள்ளை அவர்களின் மீது மரியாதை, அன்பு, ஏன் பக்தி என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட மரியாதைக்குரிய பிள்ளை அவர்களை போலீசார் கைவிலங்கு கால் விலங்கிட்டு வீதி வழியே இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு ஊரே அழுதது. பிள்ளை அவர்களின் மனைவியும், அவரது ஒரே மகனான அப்பாக்குட்டி குழந்தையாக இருந்து இந்த காட்சியைக் கண்டு வருந்தியிருக்கிறார்கள்.

போலீசார் விலங்கிட்டு வேதரத்தினம் பிள்ளையைத் தெருவோடு அழைத்துச் செல்வதைப் பார்த்து அக்கம்பக்கத்துப் பெண்கள், பிள்ளையவர்களின் மனைவியிடம் ஓடிச்சென்று, ஐயோ, ஐயாவை இப்படி அடித்து இழுத்துச் செல்கிறார்களே அண்ணி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று அலறி அழுதனர். கையில் மகன் அப்பாக்குட்டியை வைத்துக் கொண்டு இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெருமைக்குரிய தாய், ஐயா என்ன குற்றம் செய்தார்? திருடினாரா, பொய் சொன்னாரா? இல்லையே. இந்த நாட்டு ஜனங்கள் எல்லோரும் சுதந்திரம் பெற வேண்டுமென்றுதானே போராடினார். இதோ இழுத்துச் செல்கிறார்களே இந்த போலீஸ்காரர்களுக்கு உட்பட. பிறகு நான் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று 'வந்தேமாதரம்' என்று முழங்க, இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டிருந்த குழந்தையும் எல்லாம் தெரிந்தது போல கையைத் தூக்க, அத்தனைப் பெண்களும் ஒருமுகமாக வந்தேமாதரம் என்று முழங்கினர். பிள்ளை அவர்களிடம் பக்தி விஸ்வாசம் கொண்ட நாவிதர் வைரப்பன் இந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் கொதித்து, ஆத்திரமடைந்து, இந்த வெள்ளை அரசாங்கத்துக்கும், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் போலீசாருக்கும் ஏதாவதொரு வகையில் பாடம் கற்பிக்க வேண்டுமென்று மனதில் உறுதி பூண்டார். அதை உடனே செயல் படுத்தவும் துணிந்தார்.

போராடவும், கோஷம் போட்டு போலீசாரின் தடியடிக்கு ஆளாகி சிறைக்குச் செல்லும் நூற்றுக் கணக்கான தொண்டர்களின் தியாகம் இவரையும் போராடத் தூண்டியது. இவர் ஓர் சபதம் மேற்கொண்டார். தனது தொழிலை போலீசாருக்கோ, அடக்குமுறைக்கு துணை போகும் அரசாங்க அதிகாரிகளுக்கோ செய்வதில்லை, அதாவது அவர்களுக்கு சவரம் செய்வதில்லை என்று உறுதி பூண்டார். அதை மிகக் கட்டுப்பாட்டோடு கடைபிடிக்கவும் செய்தார். அது போராட்ட காலமல்லவா? வெளியூரிலிருந்து பல போலீஸ்காரர்கள் பணியின் நிமித்தம் அவ்வூருக்கு வந்திருந்தனர். அப்படி முகம் தெரியாத ஒரு புதிய போலீஸ்காரர் சாதாரண உடையில் வந்து வைரப்பனிடம் முகச் சவரம் செய்து கொள்ள விரும்பினார். வைரப்பனும் அவரைப் பலகையில் உட்கார வைத்து முகத்தில் நீர் தடவி, சோப்பின் நுரை போட்டு கத்தியைத் தீட்டி பாதி சவரம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து வைரப்பனுக்குத் தெரிந்த ஒரு நபர் அங்கு வந்தார். அவர் சும்மாயிராமல், "என்ன வைரப்பா! போலீஸ்காரங்களுக்கு சவரம் செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருந்தியே! இப்போ என்ன ஆச்சு? போலீஸ்காரர் ஒருவருக்கு சவரம் செய்து கொண்டிருக்கியே!" என்று கேட்டு விட்டார்.

வைரப்பனுக்கு அதிர்ச்சி. உடனே எழுந்து கொண்டார். "ஐயா! நான் உங்களுக்கு முகச் சவரம் செய்ய முடியாது. நீங்கள் வேறு இடம் பாருங்கள்" என்று சொல்லிவிட்டார். பாதி முகச் சவரம் செய்துகொண்ட நிலையில் முகத்தில் சோப் நுரையுடன் நிற்கும் அந்த போலீஸ்காரர் கெஞ்சிப் பார்த்தார். வைரப்பன் அசைந்து கொடுக்கவில்லை. தன் போலீஸ் தோரணையில் மிரட்டிப் பார்த்தார். அதற்கும் வைரப்பன் அஞ்சவில்லை. "என்னால் செய்ய முடியாது, நீங்கள் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார். ஆத்திரமடைந்த போலீஸ்காரர் வைரப்பனை கைப்பிடியாக அழைத்துக் கொண்டு போய் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி "தம்பி! ஒழுங்காக அந்த போலீஸ்காரருக்கு மீதி சவரத்தையும் செய்துவிடு! இல்லாவிட்டால் தண்டிக்கப் படுவாய்" என்றார்.

வைரப்பனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தான் மேற்கொண்ட விரதம் சந்திக்கு வந்து விட்டது. இது எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்பது ஒரு புறம். மற்றொரு புறம் தனது எஜமான் வேதரத்தினம் பிள்ளையவர்கள் "வைரப்பா! நீயெல்லாம் போராட்டத்தில் கலந்து கொண்டால், உன்னைப் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். அப்புறம் உன்னை நம்பியிருப்பவர்கள் திண்டாடுவார்கள், நீ வெளியே இருந்து கொண்டு உன்னால் முடிந்த ஆதரவைக் கொடுத்துக் கொண்டிரு" என்று சொல்லியிருந்தாரே, இப்போது தானும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதிபதியின் முன்பு நிற்கிறோமே என்று மகிழ்ச்சி.

நீதிபதியைப் பார்த்து வைரப்பன் சொன்னார், "ஐயா! எஜமானே! போலீஸ்காரருக்கு மிச்சம் சவரத்தை நம்மாலே செய்ய முடியாதுங்க! அப்படி செய்துதான் ஆகணும்னா, ஐயாவே செய்து விட்டுடுங்க!" என்று சொல்லிக் கொண்டே தனது சவரச் சாதனங்கள் கொண்ட தகரப் பெட்டியை நீதிபதியின் மேஜை மீது வைத்து விட்டார். கோர்ட்டே கொல்லென்று சிரித்தது. நீதிபதிக்கு வந்ததே கோபம். வைரப்பனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்து தீர்ப்புக் கூறிவிட்டார். வைரப்பனுக்கு ஏக மகிழ்ச்சி. தானும் போராடி ஜெயிலுக்குப் போகப் போகிறோம். நம் தலைவர் பிள்ளை அவர்களை அவமானப் படுத்திய இந்த போலீஸ்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லதொரு பாடம் புகட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சி. அவர் அப்போது இளைஞர்தான், பிறகு சிறை வாசம் முடித்து வெளியே வந்து தியாகி வைரப்பன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு நீண்ட காலம் உயிரோடு இருந்தார். அவர் வாழ்நாள் முழுவதும் அவரிடம் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டு விட்டால் போதும். அவர் உற்சாகம் கரைபுரண்டு ஓட அதை வர்ணிப்பார். தானும் தன் தலைவரைப் போல ஜெயிலுக்குப் போய் தியாகியாகி விட்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார். ஸ்ரீ இராமபிரானுடைய அணை கட்டும் பணியில் உதவியதாகச் சொல்லப்படும் அணில் போல தானும் இந்த நாட்டு விடுதலைப் போரில் தன் பங்கைச் செலுத்திவிட்ட மகிழ்ச்சி அவருக்கு. அவருடைய நூற்றாண்டு விழா சமீபத்தில் வேதாரண்யத்தில் நடைபெற்றது. அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யத்தில் அவருக்கு ஓர் நினைவுத் தூண் நிறுவப்பட்டிருக்கிறது. வாழ்க தியாகி வைரப்பன் புகழ்!

திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
45. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி.
தொகுப்பு: வெ. கோபாலன்.

ஒரு காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் அலுவலகம் திருச்சியில்தான் இருந்தது என்பது பலருக்கு இன்று தெரிந்திருக்க நியாயமில்லை. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி கூட முதன் முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் திருச்சியில்தான் பணிசெய்து கொண்டிருந்தார் என்பதும் புதிய செய்தியாக பலருக்கு இருக்கும். தமிழ்நாடு காங்கிரசின் தலைமை அகமாகத் திகழ்ந்த திருச்சி மாநகரில் அப்போது காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்த தியாகச் செம்மல்கள் பலரில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி ஆவார்.

இவர் தொழில் முறையில் மருத்துவராக இருந்து திருச்சி நகர மக்களின் பேரன்புக்கு பாத்திரமானவர். இவரது தந்தையார் வாசுதேவ சாஸ்திரியார். இவர் 1887ஆம் ஆண்டு பிறந்தார். திருச்சி சிங்காரத் தோப்பில் "சத்தியாக்கிரக விலாஸ்" எனப் பெயரிடப்பட்ட வீட்டில் இவரது வாசம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே நாடு சுதந்திரம் பெற வேண்டும் எனும் பேரவா இவருக்கு உண்டு. மருத்துவப் பட்டப்படிப்பு படித்து புகழ்மிக்க மருத்துவராக இவர் பிராக்டீஸ் செய்து வந்த போதும் தேச சேவையையே பெரிதும் விரும்பி செய்யத் தொடங்கினார். 1912இல் இவர் சுதேச இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு IPC செக்ஷன் 123யின் கீழ் தண்டிக்கப்பட்டு ஒரு வருஷம் சிறைவாசம் இருந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் மட்டுமல்ல இவரது குடும்பம் முழுவதுமே ஈடுபட்டு அடிபட்டு சிறை புகுந்து சகல கஷ்டங்களையும் பட நேர்ந்தது. இந்த தியாக வரலாற்றில் இடம் பிடித்துவிட்ட இவர் குடும்பத்தின் மற்றவர்கள், இவரது மனைவி கல்யாணி, சாஸ்திரியாரின் சகோதரன் மகன் கணபதி சாஸ்திரி, மகள் சுப்பலக்ஷ்மி, சுப்பலக்ஷ்மியின் கணவர் ராமரத்தினம், இவரது சகோதரரும் பிரபல வக்கீலுமான டி.வி.பாலகிருஷ்ண சாஸ்திரி ஆகியோரும் சிறைசென்ற தியாக சீலர்கள். குடும்பமே நாட்டுக்காக சிறைசென்ற வரலாறு வேறு எங்கேயாவது, எவராலாவது நடத்தப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை, நேரு குடும்பத்தைத் தவிர. இவர்கள் அனைவரும் கைதாகி கண்ணனூர் சிறையில் ஆறு மாத காலம் வைக்கப்பட்டிருந்தனர்.

சுவாமிநாத சாஸ்திரியார் அழகான தோற்றமுடையவர். நடுவகிடு எடுத்து வாரப்பட்ட கிராப்புத் தலை. சிவந்த மேனி, எப்போதும் சிரித்த முகம், கலகலப்பான பேச்சு இவை சாஸ்திரியாரின் முத்திரைகள். ரத்தினவேல் தேவருக்கு இவர் மிகவும் நெருங்கிய நண்பர். கதர் பட்டு சட்டை அணிந்து, அங்கவஸ்திரம் தரித்து பார்ப்பதற்கு எப்போதும் கண்ணியமான தோற்றத்தோடு விளங்குவார். கையில் ஒரு ஓலைப்பெட்டி. அதில் நூல் நூற்பதற்கான பஞ்சு பட்டைகள், கையில் ஒரு தக்ளி இவை சகிதமாகத்தான் அவர் எப்போதும் இருப்பார். ஏழை மக்களுக்கு அவர் அந்தக் காலத்திலேயே இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.

திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இவர் இருந்தார். அதுமட்டுமல்ல திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவர் பதவியும் இவரிடம்தான் இருந்தது. இவை இரண்டிலும் இவர் ஆற்றிய பணிகள் இன்றும்கூட நினைவு கூரத் தக்கவையாகும். அவருக்குச் சொந்தமான பிரம்மாண்டமான "சத்தியாக்கிரக விலாஸ்" எனும் மாளிகையைவிட்டு நீங்கி தென்னூரில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் சேரிப்பகுதியில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு அந்த ஏழை ஜனங்களுக்கு மருத்துவ உதவியையும் செய்து கொண்டு, தேசப்பணியாற்றினார்.

சிறையில் சுவாமிநாத சாஸ்திரியாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதுமுதல் அவர் உடல் நலம் கெட்ட நிலையில்தான் பொதுத் தொண்டிலும் கவனம் செய்து வந்தார். இந்த காரணத்தினால் 1942 ஆகஸ்ட்டில் நாடு முழுவதும் எழுச்சியுற்ற "ஆகஸ்ட் புரட்சியில்" இவரால் ஈடுபடமுடியவில்லை. டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது எழுத்துக்கள் படித்தவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அந்தக் கதைகளின் மையக் கரு ஒத்துழையாமை இயக்கம்தான். இலக்கியத்திலும் அவரது நாட்டுப் பற்று, சமுதாயப் பற்று வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இவர் ஒரு பத்திரிகை ஆசிரியரும்கூட. இவர் நடத்திய பத்திரிகையின் பெயர் "களி ராட்டை" என்பதாகும். இந்த பத்திரிகையின் மூலம் மகாத்மா காந்தியடிகளின் தேச நிர்மாணப் பணிகளைப் பரப்பி வந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரது நெருங்கிய நண்பர். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட இந்த பெருமகன் சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக 13-7-1946இல் காலமானார். இவர் காலமானபோது மகாத்மா காந்தி தன் கைப்பட இரங்கல் கடிதமொன்றை இவர் மனைவி கல்யாணி அம்மாளுக்கு எழுதியிருந்தார். தனது தூய வாழ்க்கையாலும், உயர்ந்த தியாகத்தாலும், தேசபக்தி ஒன்றையே செல்வமாகத் தனது குடும்ப வாரிசுகளுக்கு விட்டுச் சென்ற இந்த தியாக சீலரின் புகழ் வாழ்க!

திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
44. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்.
தொகுப்பு: வெ. கோபாலன்.

திருச்சி நகருக்கு அடையாளச் சின்னங்களாக விளங்கும் மலைக்கோட்டை, தெப்பக்குளம் போன்ற பல இடங்களில் 'தேவர் ஹாலும்' ஒன்று. பழைமை வாய்ந்த அந்த அரங்கம் இப்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. முன்பு அதில் நடைபெறாத நாடகங்களோ, பொதுக்கூட்டங்களோ இல்லையெனலாம். நவாப் ராஜமாணிக்கம் இங்கு முகாமிட்டிருந்த காலத்தில் இங்குதான் அவரது நாடகங்கள் நடைபெற்றன. பிரச்சினைக்குரிய எம்.ஆர்.ராதாவின் நாடகங்களும் இங்குதான் நடைபெற்றன. இது ஒரு சரித்திர முக்கியம் வாய்ந்த இடமாக இருந்தது. அது சரி! இந்த 'தேவர் ஹால்' என்பது எவர் பெயரால் அப்படி அழைக்கப்படுகிறது. அவர்தான் திருச்சியில் நகர்மன்றத் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவராகவும், புகழ்மிக்க காங்கிரஸ் தலைவராகவும் விளங்கிய பி.ஆர்.ரத்தினவேல் தேவர் பெயரால் அழைக்கப்படும் இடம் இது.

'தேவர்' என்ற இவரது பெயரையும், இவருக்கு அன்று திருச்சியில் இருந்த செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் பார்க்கும்போது ஒரு ஆஜானுபாகுவான முரட்டு தலைவரை கற்பனை செய்து கொள்ளத் தோன்றுகிறதல்லவா? அதுதான் இல்லை. இவர் மெலிந்த உடலும், வைர நெஞ்சமும், மனதில் இரும்பின் உறுதியும் ஆண்மையும் நிறைந்த ஒரு கதாநாயகன் இவர். இப்போது திருச்சியில் இவருக்கு நிறுவப்பட்டுள்ள சிலையைப் பார்க்கும்போதுதான் நம் கற்பனை சிதறிப் போகிறது. இவ்வளவு சிறிய ஆகிருதியை வைத்துக் கொண்டா அவர் அன்று திருச்சியை மட்டுமல்ல, தமிழக அரசியலையே ஒரு கலக்கு கலக்கினார் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பி.ஆர். தேவர் என்று அழைக்கப்படும் அந்த ரத்தினவேல் தேவர் திருச்சியின் ஒரு பகுதியான உறையூரில் வசித்து வந்தார். இவரது அரசியல் பிரவேசத்துக்குப் பின் அதிகம் வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளூர் அளவில் திருச்சி முனிசிபாலிடியில் அதன் தலைவராகவும் ஆகியிருந்தார். 1933இல் மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு விஜயம் செய்தார். அப்போது அவருக்கு திருச்சி நகர் மன்றத்தின் சார்பாக ஒரு வரவேற்புக்கு தேவர் ஏற்பாடு செய்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட நகர்மன்றம் மகாத்மாவுக்கு வரவேற்பளிப்பதை ஆளும் வர்க்கமும் அதன் ஜால்ராக்களான ஜஸ்டிஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்தன. அந்த எதிர்ப்பையெல்லாம் முறியடித்து தேவர் அளித்த வரவேற்பு அவரது துணிச்சலை வெளிக்காட்டியது. அந்தக் காலத்தில் திருச்சி நகரம் குடி தண்ணீர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்ட காலம். தேவர் மிகத் திறமையோடு திருச்சியின் குடிநீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டதோடு மக்களின் பேராதரவையும் பெற்றார். இவரது இந்த செயல்பாட்டை அப்போதிருந்த மாநில நீதிக்கட்சி அரசாங்கம் எதிர்த்தது. மக்களின் துணையோடு அவர் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்டு புகழ் பெற்றார்.

அநீதிக்குத் தலைவணங்குவது என்பது தேவரின் அகராதியிலேயே கிடையாது. இதன் காரணமாக இவர் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. மகாத்மா காந்தி துவக்கிய தனி நபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்படியொரு முறை இவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சியை அப்போது சிறை அதிகாரியாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் ஒரு கட்டுரையில் விவரித்திருக்கிறார்.

தேவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த காலத்தில் அங்கு ராஜாஜி போன்ற பல பெரிய தலைவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் சிறை அதிகாரி பேரேடு நடத்தும்போது கைதிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால் தங்கள் கையை முன்புறம் நீட்டவேண்டும். உடனே அதிகாரி அவரிடம் விசாரிப்பார். அதுபோல ஒருமுறை ராஜாஜி அவர்கள் தன் கையை நீட்டவும், ஜெயிலராக இருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி அவர் கையைத் தன் கைத்தடியால் தட்டிவிட்டு அவரை கேவலமாகவும் பேசிவிட்டான். அப்போது அவரோடு உடன் இருந்த தேவருக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்து விட்டது. அந்த அதிகாரி மீது பாய்ந்து தாக்க முயன்றபோது ராஜாஜியும் மற்றவர்களும் தடுத்து விட்டனர். பிறகு சில ஆண்டுகள் கழிந்தபின் ராஜாஜி சென்னை மாகாண பிரதான அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அவர் திருச்சிக்கு விஜயம் செய்து பி.ஆர்.தேவர் அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தார். பல அரசாங்க அதிகாரிகளும் முதலமைச்சரை அங்கு வந்து சந்தித்தனர். அப்போது திருச்சி சிறையின் உயர் அதிகாரியாக இருந்தவர் முன்பு தஞ்சாவூரில் ராஜாஜியை அவமரியாதை செய்த வெள்ளைக்கார அதிகாரி. அவரும் ராஜாஜி கூப்பிட்டு அனுப்பியிருந்ததால் பார்க்க வந்திருந்தார். அவர் மனதில் ராஜாஜி பழைய நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு தன்னை பழிவாங்கி விடுவாரோ என்ற பயத்தில் இருந்தார். இறுதியாக அந்த வெள்ளை அதிகாரி அழைக்கப்பட்டார். அவர் ராஜாஜியின் முன்பு வந்தபோது ராஜாஜி எதுவுமே நடைபெறாதது போல, சிறையில் செய்ய வேண்டிய சில சீர்திருத்தங்களைச் சொல்லி அவற்றையெல்லாம் செய்து வசதி செய்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு, நீங்கள் போகலாம் என்றார். அதிகாரிக்கு ஏமாற்றம். முன்பு நடந்த நிகழ்ச்சி பற்றி நினைவில் இருப்பது போல கூட காட்டிக் கொள்ளவில்லையே என்று வெளியே வந்து ராஜாஜியின் பெருந்தன்மையை புகழ்ந்து தள்ளினாராம். அன்று அவரை அடிக்கப் பாய்ந்த பி.ஆர்.தேவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ராஜாஜி, அந்த அதிகாரிக்கு தான் அடித்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய வலியைக் காட்டிலும் அதிகமாகவே கொடுத்ததாக நினைத்து மகிழ்ந்தாராம். இப்படியொரு செய்தி அவரைப் பற்றி. இவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். வாழ்க பி.ஆர்.தேவரின் புகழ்!

திருச்சி டி.எஸ்.அருணாசலம்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
43. தியாகி திருச்சி டி.எஸ்.அருணாசலம்.
தொகுப்பு: வெ. கோபாலன்.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் என்றால் தியாகி டி.எஸ்.அருணாசலம் அவர்கள்தான் நம் நினைவுக்கு வருவார். இவரது பெயரால் மெயின் கார்டு கேட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகக் கட்டடம் "அருணாசலம் மன்றம்" என்ற பெயரால் விளங்கி வருவதை அறியலாம். மெலிந்த உடல், வலிமை பொருந்திய உள்ளம், எந்த எதிர்ப்பையும் சமாளிக்கக்கூடிய மன உறுதி, மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் தனது தளராத உழைப்பாலும், தேசபக்தியாலும், தியாக உள்ளத்தாலும் முன்னுக்கு வந்தவர். திருச்சி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற ஒரு சிலரில் இவர் முதன்மையானவர் என்றால் மிகையன்று. கர்ம வீரர் காமராஜ் இவரது தியாகத்தையும், தீரத்தையும் போற்றி இவர் மீது அசைக்கமுடியாத அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்.

திருச்சி மாவட்டத்துக்காரர் என்றபோதிலும் இவரது பணியைத் தமிழ் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்தது. மிக மிக சாமானிய குடும்பத்தில் வந்தவர், மிக மிக உயர்ந்த நிலையில் இருந்த பல தலைவர்களும் இவரைத் தமக்குச் சமமாக நடத்தினர். இவர் காலத்தில் செல்வத்திலும், கல்வியிலும் உயர்ந்திருந்த தியாக சீலர்கள் திருச்சி மாவட்டத்தில் இருந்தார்கள். அவர்களில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், ஹிந்தி பிரச்சார சபா பாலகிருஷ்ண சாஸ்திரி, ரத்தினவேலு தேவர், டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, என்.ஹாலாஸ்யம், கதர் சங்கிலியா பிள்ளை, கரூர் நன்னா சாஹிப் ஆகியோர் நினைவுகூரத் தக்கவர்கள். இவர்களெல்லாம் இருந்த திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி மிக எளியவரான டி.எஸ்.அருணாச்சலத்தைத் தேடி வந்தது என்றால் அது இவரது பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு எனலாம்.

மகாத்மா காந்தி இட்ட கட்டளைகளையெல்லாம் தலைமேற்கொண்டு தளராத உழைப்பாலும், இடைவிடாத முயற்சியினாலும், மாவட்டம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்து போராட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், தொண்டர்கள் கைதானால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வந்தார் அருணாச்சலம். காங்கிரஸ் தொண்டர்களும், அனுதாபிகளும், தேசபக்தர்களும் இவரைத் தங்கள் சொந்த சகோதரரைப் போலவே பாவித்தார்கள்.

1930ல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரக போராட்டத்திற்குப் பிறகு தமிழ் மாநிலத்தில் நடந்த அத்தனை போராட்டங்களும் பெரும்பாலும், திருச்சி மாவட்டத்தில் கிராமப் புறங்களில் மிகச் சாதாரண தொண்டர்களால் நடத்தப்பட்டவை. இதற்கு அருணாசலமே காரணம். சாமானியர்களின் தலைவர் என்று இவர் போற்றப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலும் பெரிய தலைவர்களை தொண்டர்களும் சாமானியர்களும் கிட்டே நெருங்கவோ, சகஜமாகப் பேசவோ முடியாத நிலையை மாற்றி இவர் தொண்டர்களுள் ஒருவராகவே இருந்தார். இதன் காரணமாக கிராமப் புறங்களில் காங்கிரஸ் இயக்கம் வேரூன்றி வளர்ந்தது. இளைஞர்கள் பெருமளவில் இவருடன் வந்து சேர்ந்து கொண்டனர்.

இப்படித் தொண்டர்கள் தமக்குள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட காரணமாக இருந்த டி.எஸ்.அருணாசலத்துக்கு பலர் உதவியாக இருந்தனர். அவர்கள் அறிவானந்தசாமி, வாங்கல் மருதமுத்து பிள்ளை, அரியலூர் எல்.சபாபதி, திருச்சி டி.எம்.மாசி கோனார், லாடபுரம் எம்.குருசாமி நாயுடு, செட்டிக்குளம் வி.எஸ்.பி.ராமசாமி ரெட்டியார், பாதர்பேட்டை வி.ஏ.முத்தையா, காட்டுப்புத்தூர் கே.ஏ.தர்மலிங்கம், குளித்தலை கே.செல்லப்பன், வெள்ளனூர் ஏ.ரெங்கசாமி உடையார், புதூர் உத்தமனூர் கோ.கிருஷ்ணசாமி உடையார், வேங்கூர் எஸ்.சாம்பசிவம், ஸ்ரீரங்கம் சேதுராமன் முதலானோர் ஆவர்.

திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என்ற வகையில் பிரிந்து ஒருவருக்கொருவர் நட்புரிமையுடன் ஒன்றுபட்டு போராடுவதற்கு பதில் பிரிந்து நின்றார்கள். இதற்கு தமிழ்நாடு காங்கிரசில் ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்ற பெயரால் அதிகாரபூர்வமற்ற செயல்பாடும் ஓர் காரணமாக இருந்தது. என்றாலும் கூட டி.எஸ்.அருணாச்சலம் கர்ம வீரர் காமராஜ் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்கள் பிரதிநிதியாக காங்கிரஸ் தலைவராக திருச்சி மாவட்டத்தில் கொடி கட்டி பறந்த வரலாறு நாடு அறியும். வாழ்க தியாக டி.எஸ்.அருணாச்சலம் புகழ்!

பழனி P.S.K.லட்சுமிபதிராஜு

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
42. பழனி P.S.K.லட்சுமிபதிராஜு.
தொகுப்பு: வெ. கோபாலன்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டசபையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பெயர்களில் பி.எஸ்.கே.லட்சுமிபதிராஜு பெயரும் ஒன்று. இவர் மதுரை மாவட்டம் பழனி நகரத்தில் கிருஷ்ணசாமிராஜு அவர்களின் மகனாகப் பிறந்தார். இவரது இளம் வயதில் பள்ளிக்கூட நாட்களிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக நகர கமிட்டி, தாலுகா கமிட்டி, மதுரை மாவட்ட கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் என்று படிப்படியாக எல்லா நிலைகளிலும் பணியாற்றியிருக்கிறார். 1930ஆம் ஆண்டிலேயே இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாத சிறை தண்டனை பெற்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வது என்று பிடிவாதமாக இருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகே திருமணம் புரிந்து கொண்டவர். 1942இல் இவர் பாதுகாப்புக் கைதியாக சுமார் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது சிறைவாசம் அலிப்புரம், பெல்லாரி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை முதலிய இடங்களில் கழித்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பழனி நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், 24 வார்டுகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தினார். இவர்கள் அனைவருமே மகோன்னத வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் லட்சுமிபதிராஜு நகரசபை சேர்மனாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாளில் ஒரு நகரசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அனைத்து வார்டுகளிலும் நின்றவர்கள் வெற்றிபெற்ற வரலாறு தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. இந்த வெற்றியின் காரணமாக லட்சுமிபதிராஜுவின் பெருமை வெளி உலகுக்குத் தெரியலாயிற்று. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெருந்தலைவர் காமராஜ், புதுக்கோட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளையராஜா விஜயரகுநாத தொண்டைமான் அவர்கள தலைமையில் லட்சுமிபதிராஜுவுக்கு ஒரு வெள்ளிவாள் பரிசளித்தார்.

இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் விவசாயத்துக்காக குரல் கொடுத்து பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். பழனி தாலுகாவில் விவசாயிகளின் கோரிக்கைகளின்படி, கொடைக்கானல், பழனி ரோடு, விருப்பாச்சி, பரப்பலாறு அணை, பழனி பாலாறு, பொருந்தலாறு அணை, ஆய்க்குடி, வரதமாநதி அணை ஆகிய திட்டங்களுக்காக போராடி தமிழ்நாடு அரசு மேற்படி திட்டங்களை நிறைவேற்ற காரணமாக இருந்தார்.

தமிழகத்தில் மிகப்பெரும் கோயிலாகவும், வருமானம் அதிகமுள்ள கோயிலாகவும் இருந்த பழனி தண்டாயுதபாணி கோயிலின் டிரஸ்டிகளின் தலைவராக இருந்திருக்கிறார். இவர் தலைமை பொறுப்பேற்றிருந்த காலத்தில் பழனி தண்டபாணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்வித்து பெருமை பெற்றார். இவர் டிரஸ்ட்டின் தலைவராக இருந்த போது 30 லட்சமாக இருந்த கோயில் வருமானம் ஒரு கோடியைத் தாண்டியது. கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் ஒரு கலைக்கல்லூரி, பண்பாட்டு கல்லூரி, பெண்கள் கல்லூரி, நாதஸ்வரத்துக்கென்று ஒரு கல்லூரி, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், புதிய சத்திர தங்கும் விடுதி ஆகியவற்றை நிறுவினார். அன்றைய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர் சி.பி.ராமசாமி ஐயர், மைசூர் மகாராஜா சாமராஜ உடையார், பவநகர் மகாராஜ், கவர்னர் ஸ்ரீ பிரகாசா, பிஷ்ணுராம் மேதி ஆகியோரிடம் பாராட்டுப் பெற்றவர் நமது லட்சுமிபதிராஜு.

இந்தியாவில் தோன்றிய முதல் தொழிற்சங்கம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ். இதிலிருந்து பிரிந்து இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தமிழ்நாட்டுக் கிளை துவக்கப்பட்ட போது அந்த மாநாட்டின் வரவேற்பு கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லட்சுமிபதிராஜு. மலைத்தோட்ட விவசாயிகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக நெய்க்காரபட்டி எஸ்டேட்டில் நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்து வெற்றி கண்டவர் இவர்.

இவரது அமைதிப் பணிகளை மகாத்மா காந்தி பெரிதும் பாராட்டியிருக்கிறார். இவர் ஒரு விளையாட்டு வீரரும்கூட. சைக்கிள் ஓட்டும் போட்டியில் தங்க கைக்கடிகாரம் பரிசு பெற்றவர். மத ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர். பழனி ஃபைன் ஆர்ட்ஸ் சபாவினால் "தியாகச் செம்மல்" எனும் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டவர். மகாத்மா காந்தியடிகளின் அழைப்பை ஏற்று 'ஹரிஜன சேவா சங்கம்' தொடங்கி நகர துப்புறவுத் தொழிலாளிகள் தையல் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், ஹோட்டல் தொழிலாளர், டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோருக்காக சங்கங்கள் அமைத்து அவைகளின் தலைவராக இருந்து பாடுபட்டவர்.

அகில இந்திய ஏலக்காய் வாரியத்தின் உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பாடுபட்டவர். வாழ்க பழனி லட்சுமிபதிராஜு அவர்களின் புகழ்!
 

No comments:

Post a Comment